இபிஎஸ் - ஓபிஎஸ்க்கு செம விருந்து கொடுத்து அசத்திய ராமதாஸ் !! தைலாபுரத்தில் கொண்டாட்டம் !!

By Selvanayagam PFirst Published Feb 23, 2019, 6:07 AM IST
Highlights

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக-பாமக இடையே கூட்டணி  உடன்பாடு ஏற்பட்டதையடுத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓபிஎஸ் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோருக்கு  பாமக  நிறுவனர் ராமதாஸ், தனது தைலாபுரம் தோட்டத்தில் விருந்து அளித்து அசத்தினார். சிக்கன், மட்டன், மீன் என சகல அசைவ உணவு வகைகளும் விருந்தில் பரிமாறப்பட்டன.
 

வரும் ஏப்ரல்,  மே மாதங்களில் நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிப்பை தேர்தல்  ஆணையம் மார்ச் முதல் வாரத்தில் வெளியிட உள்ளது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தேர்தல் குறித்து வியூகங்களை வகுக்கத் தொடங்கியுள்ளன.

இதன் முதல் கட்டமாக அதிமுக – பாமக – பாஜக இடையே கூட்டணி உடன்பாடு ஏற்பட்டது. பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்காக டெல்லியில் இருந்து சென்னை வந்திருந்த மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் முன்னிலையில் இரு கட்சிகளுக்கிடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.


முன்னதாக அதிமுக - பாமக இடையே தேர்தல்  கூட்டணி ஏற்பட்டது. சென்னை கிரவுன் பிளாசா ஹோட்டலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் பாமக றிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

அன்று ராமதாஸ் உள்ளிட்டோருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது கிரீன்வேய்ஸ் சாலையில் தேநீர் விருந்தளித்தார். அப்போது கூட்டணி ஒப்பந்தம் ஏற்பட்டது தொடர்பாக மகிழ்ச்சி தெரிவித்த ராமதாஸ், இபிஎஸ், ஓபிஎஸ் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோருக்கு தனது தைலாபுரம் தோட்ட இல்லத்தில் விருந்து அளிக்க உள்ளதாகவும் இதில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். இதனை அவர்கள் உடனடியாக ஏற்றுக் கொண்டனர்.

இதையடுத்து  நேற்றிரவு திண்டிவனத்தை அடுத்த தைலாபுரத்தில் உள்ள ராமதாஸ் இல்லத்தில் விருந்து நடைபெற்றது. இதில் பங்கேற்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓபிஎஸ், இருவரும் இரவு 9 மணிக்கு தைலாபுரம் தோட்டத்துக்கு சென்றனர்.


அவர்களுடன் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, சி.வி.சண்முகம். கே.பி.முனுசாமி உள்ளிடோர் வந்திருந்தனர். அவர்களை ராமதாஸ் குடும்பத்தினர் வாசல் வரை வந்து வரவேற்றனர்.

இதையடுத்து விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. சிக்கன், மட்டன், மீன் வகைகள் என சகல அசைவ உணவுகளும் பரிமாறப்பட்டன.


விருந்துக்கான ஏற்பாடுகளை ராமதாசே தனது தனிப்பட்ட சமையல்காரர்களைக் கொண்டு செய்திருந்ததாகவும், விஐபிக்கள் விருந்தில் கலந்து கொள்வதால், ருசியான உணவுகளை சமைக்கும் இடத்தில் அருகில் இருந்து ராமதாஸ் கவனித்துக் கொண்டார் எனவும் கூறப்படுகிறது. விருந்து முடிந்ததும் அனைவரும் சிறிது நேரம் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினர்.

பின்னர் முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் நள்ளிரவு சென்னை திரும்பிச் சென்றனர்

click me!