’வயிறு எரியுதா..?’ விஜயகாந்தை மறைமுகமாக சாடியா ராமதாஸ்..!

By Thiraviaraj RMFirst Published Feb 23, 2019, 5:33 PM IST
Highlights

அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு அதிக இடங்கள் ஒதுக்கப்பட்டதால், சிலருக்கு வயிற்று எரிச்சல் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு அதிக இடங்கள் ஒதுக்கப்பட்டதால், சிலருக்கு வயிற்று எரிச்சல் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

விழுப்புரம் மாவட்டம், பாட்டனூரில் நடந்த அக்கட்சியின், சிறப்புக்குழு கூட்டத்தில் பேசிய ராமதாஸ், ‘’அதிமுக - பாமக கூட்டணி இயற்கையான கூட்டணி. எந்த காலத்திலும் பாமக தனது கொள்கையை விட்டுக்கொடுக்காது. தமிழகத்தின் 3 வது பெரிய கட்சியாக வளர்ந்துள்ள பாமகவிற்கு 10 தொகுதிகளை கேட்டுப்பெறும் தகுதி உள்ளது.

புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் நம் கூட்டணி வெல்ல கடுமையாக உழைப்பது அவசியம். தமிழகத்தில் 3 வது பெரியக்கட்சியாக வளர்ந்துள்ளோம். பெரியகட்சிகள் பாமகவை அழைப்பதற்கு தொண்டர்கள் உழைப்பும், வியர்வையும், போராட்டமும், சிறைவாசமும்தான் காரணம். 7 மக்களவைத் தொகுதிகள் ஒரு ராஜ்யசபா தொகுதி என கூட்டணி உடன்பாட்டை கேள்விப்பட்ட பலரும் வயிறு எரிகின்றனர். பத்து தொகுதி கேட்டோம், கூட்டணி என்பதால் 7 மக்களவைத் தொகுதிக்கு ஒப்புக் கொண்டோம். பாமக யார் முதுகிலும் குத்தியது கிடையாது. காலையும் வாரியதில்லை.

எப்போதும் கொள்கையை எக்காலத்திலும் விட்டுக்கொடுத்ததில்லை. கொள்கையில் நாம் தேக்குமரம். கூட்டணியின்போது நாணலாக வளைவோம். கொள்கையை விட்டு பேரம்பேசுவதில்லை. பத்து அம்ச கோரிக்கைகள் கூட்டணியின்போது முன்வைத்தது பற்றி வேறு கட்சிகள் சொல்லமாட்டார்கள். 7 தமிழர்கள் விடுதலைக்கு அழுத்தம் கொடுத்துள்ளோம். அன்புமணி கூறியதுபோல் 40 தொகுதிகள் மட்டுமல்ல, இடைத்தேர்தல் வரவுள்ள 21 தொகுதி சட்டமன்றத்தொகுதிகளிலும் இக்கூட்டணி வெல்ல வேண்டும்.

ஜூன், ஜூலை உள்ளாட்சித் தேர்தலில் கை கோர்க்கும் நிலை பலப்படுத்தும். கண்ணியத்தோடு பேசுங்கள், பழகுங்கள். யார் தூற்றினாலும் கவலைப்படாதீர்கள். தேர்தல் முடிந்த பிறகு நாகரீகமாக பதில் சொல்வோம். அப்போதும் கண்ணியம் தவறக் கூடாது என்பது அன்புமணியின் கட்டளை. நாற்பதும் நமதே’’ என அவர் பேசினார். 

அதிமுக கூட்டணிக்கு வர பாமகவுக்கு ஒதுக்கப்பட்ட சீட்டுகளுக்கு குறைவில்லாமல் ஒதுக்க வேண்டும் என தேமுதிக பிடிவாதம் பிடித்து வருகிறது. அதிமுகவுடன் பாமக கூட்டணி சேர்ந்ததை மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்நிலையில் வயிற்று எரிச்சலில் இருப்பதாக ராமதாஸ் கூறுவது மு.க.ஸ்டாலினையா? அல்லது விஜயகாந்த்தை குறிவைத்து மறைமுகமாக பேசினாரா? என்பது குறித்து விவாதம் தொடங்கி உள்ளது. 

click me!