அவங்க கமுக்கமா இருக்காங்க.. நீங்க கண்டுக்காம இருக்கீங்க!! பாயிண்டை பிடித்து பழனிசாமியை பதறவிடும் ராமதாஸ்

First Published May 30, 2018, 12:42 PM IST
Highlights
ramadoss creates attention on cauvery management commission


காவிரி மேலாண்மை ஆணையம் குறித்த அறிவிக்கையை மத்திய அரசிதழில் இந்த வாரத்திலேயே வெளியிட்டு அடுத்த வாரத்தில் காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைக்க மத்திய அரசு முன்வர வேண்டும். இதற்குத் தேவையான அழுத்தங்களை மத்திய அரசுக்கு சட்டப்பேரவை மூலமும், நேரிலும் தமிழக அரசு வழங்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை செயல்படுத்துவதற்கான காவிரி மேலாண்மை ஆணையத்தை நடப்பு பருவ தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்குள் அமைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஆணை பிறப்பித்திருந்த நிலையில், அந்த ஆணையை மத்திய அரசு மீண்டும் காற்றில் பறக்கவிட்டிருக்கிறது. தென்மேற்கு பருவமழை தொடங்கி விட்ட நிலையில் ஆணையம் அமைக்கப்படாதது கண்டிக்கத்தக்கது.

காவிரி மேலாண்மை வாரியத்தை மார்ச் 29 ஆம் தேதிக்குள் நிறைவேற்ற வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்தத் தவறிய மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு சார்பில் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், மே 18 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மத்திய அரசால் முன்மொழியப்பட்ட காவிரி மேலாண்மை ஆணையத்தை நடப்பாண்டு தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாக மத்திய அரசிதழில் வெளியிடுவதுடன், அதற்கு செயல் வடிவமும் கொடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் அதன் தீர்ப்பில் ஆணையிட்டிருந்தது. ஆனால், உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வெளியாகி இரு வாரங்களாகிவிட்ட நிலையில், இன்று வரை அத்தீர்ப்பை செயல்படுத்த மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை செயல்படுத்துவதில் மத்திய அரசுக்கு எந்த சிக்கலும் இல்லை. காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருந்தவாறு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்பது தான் தமிழகத்தின் கோரிக்கையாக இருந்தது. ஆனால், காவிரி ஆற்றிலுள்ள அணைகளை கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டு அனைத்து மாநிலங்களுக்கும் தேவையான தண்ணீரை வழங்கிவிடக் கூடாது என்ற எண்ணத்தில், அதிகாரமில்லாத ஆணையம் அமைக்கும் வகையில் வரைவுத் திட்டத்தை மத்திய அரசு தயாரித்தது. அது காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை செயல்படுத்துவதற்கு அதிகாரம் பெற்ற அமைப்பு இல்லை என்றாலும், சில திருத்தங்களுடன் அத்திட்டத்தை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டு அதை செயல்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களையும் வழங்கியது. அதன்பயனாக காவிரி வரைவுத் திட்டம் முழுமை பெற்று விட்ட நிலையில், அதை மத்திய அரசிதழில் வெளியிடுவதற்கும், செயல்படுத்துவதற்கும் மத்திய அரசு இன்னும் தயங்குவது ஏன்? என்பதைப் புரிந்துகொள்ள முடியவில்லை.

காவிரி மேலாண்மை ஆணையம் எப்போது அமைக்கப்படும் என்று மத்திய நீர்வளத்துறை செயலரிடம் கேட்ட போது, காவிரி மேலாண்மை ஆணையம் குறித்த அறிவிக்கை விரைவில் மத்திய அரசிதழில் வெளியிடப்படும். ஆனால், எந்த தேதியில் அது வெளியிடப்படும் என்பதை என்னால் தெரிவிக்க முடியாது என்று பதிலளித்திருக்கிறார். காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைப்பதில் மத்திய நீர்வளத்துறைக்கு எந்த அக்கறையும் இல்லை என்பதை அதன் செயலாளர் அளித்த பொறுப்பான பதிலிலிருந்து உணர முடிகிறது. ‘அத்திப் பழத்தை பிட்டுப் பார்த்தால் அத்தனையும் சொத்தை’ என்பதைப் போல காவிரி விவகாரத்தில் இதுவரை மத்திய அரசு மேற்கொண்ட நிலைப்பாடு, நடவடிக்கை ஆகியவற்றை பகுப்பாய்வு செய்து பார்த்தால் அவை அனைத்தும் தமிழக நலன்களுக்கு எதிராக இருப்பதைப் புரிந்து கொள்ளலாம்.

நடப்பாண்டு தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாக மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஆணையிட்டதற்கு காரணங்கள் உள்ளன. இன்றைய நிலையில் பார்த்தால் காவிரியின் குறுக்கே உள்ள 4 கர்நாடக அணைகளில் மொத்தம் 9.52 டிஎம்சி தண்ணீர் மட்டுமே உள்ளது. மேட்டூர் அணையிலும் கிட்டத்தட்ட அதே அளவு தண்ணீர் மட்டும் தான் உள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்கி விட்ட நிலையில், கேரளத்திலும், கர்நாடகத்திலும் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையின் பயனாக கர்நாடக அணைகள் நிரம்பத் தொடங்கும். காவிரி மேலாண்மை ஆணையம் உடனடியாக நடைமுறைக்கு வராவிட்டால், ஒட்டுமொத்த நீரையும் தமிழகத்திற்கு வழங்காமல் கர்நாடகம் பயன்படுத்திக் கொள்ளும் ஆபத்து உள்ளது. காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டு விட்டால், அதனால் அணை நீரை தமிழகத்திற்கு திறந்து விட முடியாது என்றாலும் கூட, குறைந்தபட்சம் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுமாறு உத்தரவாவது பிறப்பிக்க முடியும்.

ஆனால், அத்தகைய நன்மை கூட தமிழகத்திற்கு நிகழ்ந்து விடக்கூடாது என்பதில் மத்திய அரசு தீவிரமாக இருக்கிறது. அதைவிடக் கொடுமை என்னவென்றால் பொதுப்பணித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்படுவதில் செய்யப்படும் தாமதம் குறித்து இன்று வரை வாய் திறக்கவில்லை என்பது தான். காவிரி பிரச்சினையில் தமிழகத்திற்கு மத்திய அரசு செய்யும் துரோகங்களுக்கு மாநில அரசு துணைபோவதை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.

எனவே, இந்த விஷயத்தில் இனியும் அலட்சியம் காட்டாமல் காவிரி மேலாண்மை ஆணையம் குறித்த அறிவிக்கையை மத்திய அரசிதழில் இந்த வாரத்திலேயே வெளியிடவும், அடுத்த வாரத்தில் காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைக்கவும் மத்திய அரசு முன்வர வேண்டும். இதற்குத் தேவையான அழுத்தங்களை மத்திய அரசுக்கு சட்டப்பேரவை மூலமும், நேரிலும் தமிழக அரசு வழங்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
 

click me!