
வங்களா விரிகுடாவை மட்டும்தான் வாங்காமல் சசிகலா குடும்பம் விட்டு வைத்திருப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னையில் இன்று ராமதாஸ் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
ஊழல் மஹாராணி ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டில் என்றைக்கோ நடந்திருக்க வேண்டிய சோதனை இப்போதுதான் நடந்திருக்கிறது. அதேபோலத்தான் சசிகலாவின் குடும்பத்தினர், உறவினர்கள் வீடுகள் மற்றும் நிறுவனங்களிலும் என்றைக்கோ சோதனை நடந்திருக்க வேண்டும். ஆனால் காலம் தாழ்ந்து சோதனை நடத்தப்பட்டிருக்கிறது.
ஜெயலலிதா, ஊழல் மஹாராணி என்றால், சசிகலா ஊழல் இளவரசி. சசிகலா தொடர்புடையவர்களிடம் நடத்திய சோதனையில் என்ன கிடைத்தது என்பதை வருமான வரித்துறையினர் மக்களிடம் தெளிவாக தெரிவித்து அவற்றை மக்களிடமே ஒப்படைக்க வேண்டும்.
இதற்கு முன்னதாக, ராமமோகன ராவ், சேகர் ரெட்டி, அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோரிடம் நடத்தப்பட்ட சோதனையில் என்ன கிடைத்தது? அந்த சோதனைகள் எல்லாம் என்ன ஆனது? சசிகலா குடும்பத்தினரிடம் நடத்திய சோதனை போதாது. முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோரிடமும் வருமான வரி சோதனை நடத்த வேண்டும்.
தமிழகத்தில் 1.3 கோடி இளைஞர்கள் வேலையில்லாமல் தவித்து வருகின்றனர். தமிழக பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பை வழங்குவதில் அரசு தீவிரம் காட்ட வேண்டும். இந்நிலையில், தமிழக அரசுப் பணிகளுக்காக டிஎன்பிஎஸ்சி நடத்தும் தேர்வுகளில் வெளிமாநிலத்தவருக்கு இட ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு முயற்சிப்பது, தமிழக இளைஞர்களுக்கு செய்யும் துரோகம். மற்ற மாநில அரசுப் பணிகளில் வேற்று மாநிலத்தவருக்கு வாய்ப்பு அளிக்கப்படுவதில்லை. எனவே தமிழக அரசு பணிகளில் வேற்று மாநிலத்தவருக்கு வாய்ப்பு அளிப்பதை தமிழக அரசு கைவிட வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தினார்.