உங்க விசுவாசத்தை வேற எதுலயாவது காட்டுங்க!! புள்ளைங்க படிப்புல ஏன் விளையாடுறீங்க?

 
Published : Jan 24, 2018, 12:23 PM ISTUpdated : Sep 19, 2018, 01:52 AM IST
உங்க விசுவாசத்தை வேற எதுலயாவது காட்டுங்க!! புள்ளைங்க படிப்புல ஏன் விளையாடுறீங்க?

சுருக்கம்

ramadoss condemns public exam for eighth standard

எட்டாம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்தும் முறையை பள்ளிக்கல்வி துறை கைவிட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

எட்டாம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி அளிப்பதால் கல்வித்தரம் பாதிக்கப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளதாகக் கூறி எட்டாம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு நடத்த தமிழக பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், எட்டாம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி அளிப்பதால் கல்வித்தரம் பாதிக்கப்படுவதாகவும், அதைத் தடுக்க கட்டாயத்தேர்ச்சி முறையை ரத்து செய்து விட்டு, பொதுத்தேர்வு நடத்தப்பட வேண்டும் என்றும் காலங்காலமாகக் கூறப்பட்டு வரும் காரணத்தை தான் தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறையினரும் அதிகாரப்பூர்வமற்ற முறையில் கூறியுள்ளனர். இது அபத்தமானது. இதை ஏற்றுக் கொள்ளவே முடியாது.

மத்திய அரசு கை காட்டும் திசையில் கண்ணை மூடிக் கொண்டு பயணிப்பதை வழக்கமாக வைத்துள்ள தமிழக அரசு, இந்த விஷயத்திலும் மத்திய அரசுக்கு தனது விசுவாசத்தைக் காட்டுவதற்காகத் தான் இப்படி ஒரு முடிவு எடுத்துள்ளது. எட்டாம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி அளிக்கும் முறை தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் நீண்ட காலமாக அதிகாரப்பூர்வமற்ற வகையில் நடைமுறையில் இருந்து வருகிறது. எனினும், கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின் மூலம் தான் 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளில் கட்டாயத் தேர்ச்சி சட்டப்பூர்வமாக்கப் பட்டது. ஆனால், இந்த நடைமுறையை விரும்பாத மத்திய அரசு, அதை மாற்றுவது குறித்து பரிந்துரைக்க 2012&ஆம் ஆண்டில் வல்லுனர் குழுவை அமைத்தது. அக்குழுவினர் அளித்த பரிந்துரைப்படி 8 ஆம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி அளிக்கும் முறையை கடந்த ஆண்டு மத்திய அரசு ரத்து செய்தது. இதுதொடர்பான கல்வி உரிமைச் சட்டத்தையும் திருத்தியது.

எட்டாம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சியை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்தாலும், இவ்விஷயத்தில் மாநில அரசுகள் விருப்பம் போல முடிவெடுத்துக் கொள்ள சுதந்திரம் அளித்திருந்தது. ஆனாலும், பாரதிய ஜனதாக் கட்சி ஆளும் மாநிலங்கள் உள்ளிட்ட 23 மாநிலங்கள் கட்டாயத் தேர்ச்சியை ரத்து செய்ய முடிவு செய்துள்ளன. மன்னன் எவ்வழியோ, மக்களும் அவ்வழி என்பதற்கிணங்க, பாரதிய ஜனதா வழியில் தமிழக அரசும் எட்டாம் வகுப்பு கட்டாயத் தேர்ச்சி முறையை ரத்து செய்து விட்டு,  பொதுத்தேர்வு நடத்த முடிவு செய்துள்ளது. இதன்மூலம் எஜமான விசுவாசத்தைக் காட்டுவதற்காக தமிழகத்தில் ஏழை, எளிய மக்களின் கல்வி வாய்ப்புகளை காவு கொடுக்க அரசு தீர்மானித்துள்ளது.

பள்ளிக்கல்வியின் தரத்தை உயர்த்த வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. இதற்காக செய்யப்பட வேண்டியவை ஏராளம். 8-ஆம் வகுப்புகளில் கட்டாயத் தேர்ச்சியை ரத்து செய்து விட்டால் கல்வித்தரம் அதிகரித்து விடும் என்பதெல்லாம் ஏற்றுக் கொள்ள முடியாத அபத்தமான வாதம். இதனால் ஏற்படும் நன்மைகளை விட தீமைகள் தான் அதிகமாகும். 

பள்ளிக் கல்வியின் தரத்தை உயர்த்த மேற்கொள்ள வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ளலாம். அத்தகைய நடவடிக்கைகளை பாட்டாளி மக்கள் கட்சி வரவேற்கும், மாறாக கட்டாயத் தேர்ச்சியை ரத்து செய்து, மலர வேண்டிய கல்வி மொட்டுகளை கருக்கி விடக் கூடாது. எனவே, 8&ஆம் வகுப்பு கட்டாயத் தேர்ச்சி ரத்து, பொதுத்தேர்வு முறை அறிமுகம் ஆகிய திட்டங்களை  கைவிட்டு, இப்போதுள்ள முறையே தொடரும் என்று  தமிழக அரசு அறிவிப்பு வெளியிட வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
 

PREV
click me!

Recommended Stories

மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!
அனிதா தற்கொலையை திமுக தடுத்து இருக்கலாமே... பூர்ணசந்திரன் மரணத்தை திரித்துக் கூறுவதா..? டாக்டர் சரவணன் ஆவேசம்..!