
1. காந்தி பிறந்த குஜராத் மாநிலத்திலேயே மதுவிலக்கை முழுமையாக நடைமுறைப்படுத்த முடியாத போது தமிழகத்தில் முழு மதுவிலக்கு சாத்தியம் தானா? உண்மையை சொல்லுங்கள்!
* மதுவிலக்கு எதனால் சாத்தியமாகாது என்று நீங்கள் கூறுகிறீர்கள்? மதுக்கடைகள் பெருகி விட்டால் கள்ளச்சாராயம் பெருகிவிடும் என்ற அச்சம் தானே இந்த கேள்விக்கு காரணம். அரசு நினைத்தால் கள்ளச்சாராயம் முழுமையாக கட்டுப்படுத்திவிட முடியும். அதற்கான செயல் திட்டங்களை தேர்தல் அறிக்கையில் நாங்கள் கூறியிருக்கிறோம். தமிழக அரசுக்கான மாற்று மதுவிலக்குக் கொள்கை என்ற ஆவணத்தையும் வெளியிட்டுள்ளோம். அவை செயல்படுத்தப் பட்டால் முழு மதுவிலக்கு சாத்தியம் தான்.
2. வள்ளலார் பற்றி சொல்லுங்கள்?
* வள்ளலார் மாபெரும் ஞானி. அவர் காட்டிய வாழ்க்கை முறை குறித்து பலரும் அறிந்திருப்பர். ஆனால், அதையும் கடந்து அவருக்கு பல முகங்கள் உண்டு. அவற்றில் முதன்மையானது தமிழ் இசை முகம். தமிழ் மொழிதான் உலகின் சிறப்பியல் மொழி என்பதை 150 ஆண்டுகளுக்கு முன்பே நிலைநாட்டியவர். மேலும் உலக மொழிகளுள் சந்தங்களை உள்ளடக்கிய இசைச் சிறப்பு தமிழுக்கே உண்டு என்பதையும் சான்றுகளுடன் உலகுக்குச் சொன்னவர் வள்ளலார்.
சென்னை ஏழுகிணறு வீராசாமி தெருவில் அவர் வாழ்ந்த இல்லத்தை நினைவிடமாக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். வரும் 5&ஆம் தேதி அவரது 195&ஆவது பிறந்தநாள். அன்றாவது அவர் வாழ்ந்த இல்லத்தை நினைவிடமாக்கும் அறிவிப்பை அரசு வெளியிட வேண்டும்.
3. உங்களைக் கவர்ந்த தமிழ் திரைப்பட நடிகர் யார்?
* இன்று 91-ஆவது பிறந்தநாள் காணும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தான். அவர் ஒரு நடிப்புப் பல்கலைக்கழகம். தேசிய அளவில் அவரது பெயரில் ஒரு விருது உருவாக்கி வழங்க வேண்டும்.
4. இந்திய மொழிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அதனால் இனி குட்மார்னிங் என்பதற்கு பதிலாக நமஸ்காரம் என்று தான் வணங்க வேண்டும் என்று குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு கூறியிருக்கிறாரே?
* நாயை விரட்டியடித்து விட்டு, நரியை நாட்டாண்மை செய்ய வைப்பது போன்று, ஆங்கிலத்துக்கு பதிலாக இந்தியை திணிக்கும் செயல் தான் இது. குட்மார்னிங் சொல்ல வேண்டாம் என்பது சரி.... அதற்கு பதிலாக அழகுத் தமிழில் வணக்கம் கூறும்படி சொல்லலாமே? நமஸ்காரம் நமக்கு எதற்கு?
5. சென்னையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்காக சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட பதாகைகளை அகற்றும்படி சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டும் அவை அகற்றப்படாதது குறித்து?
* மக்களாட்சி என்பது சட்டத்தை மதித்து நடக்க வேண்டும். ஆனால், இந்த ஆட்சி உயர்நீதிமன்றத் தீர்ப்பையே மதிக்க மறுக்கிறது. இப்படி நடப்பது இது முதல் முறையல்ல. இந்த ஆட்சி தொடர வேண்டுமா? என்பதை உயர்நீதிமன்றம் தான் தீர்மானிக்க வேண்டும்.
6. ரஃபேல் போர் விமானங்கள் வாங்கியதில் ஊழல் நடந்திருப்பதாக குற்றச்சாற்று எழுந்துள்ளதே?
* ஆட்சியாளர்கள் மீது குற்றச்சாற்று எழுந்தால் அது குறித்து விளக்கம் அளித்து தங்கள் மீதான் குற்றச்சாட்டு தவறு என நிரூபிக்க வேண்டும் என்பது அரசின் கடமை. மத்திய அரசு அதன் கடமையை நிறைவேற்ற வேண்டும்.
7. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாடு குறித்த உங்கள் கருத்து என்ன?
* சுண்டைக்காய் கால் காசு.... சுமை கூலி முக்கால் காசு என்பதற்கு சிறந்த உதாரணம் இது தான்.
8. உங்களைப் பொறுத்தவரை சென்னையின் பெருங்கனவு என்பது எது?
* சிங்காரச் சென்னை, எழில்மிகு சென்னை, சீர்மிகு சென்னை ஆகியவை தான். திராவிடக் கட்சிகளின் ஆட்சி தொடரும் வரை இவை நிறைவேறாத பெருங்கனவாகவே இருக்கும்.
9. தமிழகத்தை ஆண்ட முதலமைச்சர்களில் உங்களுக்கு பிடித்தவர் யார்?
* இருவர். ஒருவர் மக்கள் குடிப்பதை நிறுத்தியவர். மற்றொருவர் மாணவர்கள் படிப்பதை ஊக்குவித்தவர்.
10. பாட்டாளி மக்கள் கட்சி சாதிக் கட்சி என்று தொடர்ந்து முத்திரைக் குத்தப்படுவதில் வருத்தம் உண்டா?
* நிறைய உண்டு. கடந்த 30 ஆண்டுகளில் பாட்டாளி மக்கள் கட்சி ஏராளமான சாதனைகளை படைத்திருக்கிறது. அவை எதுவுமே குறிப்பிட்ட சாதியினருக்கானது அல்ல. அனைவருக்கும் பொதுவானவை தான். ஆனாலும் பாட்டாளி மக்கள் கட்சியின் வளர்ச்சியை பொறுத்துக்கொள்ள முடியாதவர்கள் தான் திட்டமிட்டு இத்தகைய பரப்புரையை மேற்கொள்கின்றனர். விரைவில் இந்த பொய் பிரச்சாரத்தை மக்கள் முறியடிப்பார்கள்.