ராமதாஸ் செய்வது அசிங்கமான அரசியல்.. ஸ்டாலின் வேடிக்கை பார்க்க கூடாது.. மக்கள் கண்காணிப்பகம் ஹென்றி டிபேன்.

By Ezhilarasan BabuFirst Published Nov 19, 2021, 4:02 PM IST
Highlights

அதையெல்லாம் நாங்கள் மறுக்கவில்லை ஆனால் இன்று அவர்கள் கட்சியை சார்ந்தவர்கள் சூர்யாவின் தாக்குவோம் என்று பேசுகிறார்கள் அதற்கு முதல்  கண்டனக்குரல்  மருத்துவர் ராமதாசிடமிருந்து வந்திருக்க வேண்டும்.  

தமிழகத்தில் கொடூர வன்முறையை தூண்டும் வகையில் பாமக பேசி வருகிறது, இதை தமிழக முதலமைச்சர் வேடிக்கை பார்க்கக் கூடாது, இது சமூக நீதி மண், பெரியார் மண் என்பதை அவர் காட்ட வேண்டுமென மக்கள் கண்காணிப்பகம் ஹென்றி டிபேன் கூறியுள்ளார். வேறு அரசியல் இல்லை என்பதற்காக பாமக இந்த அராஜக அரசியலை கையில் எடுத்து இருக்கிறது என்றும் அவர் விமர்சித்துள்ளார். 

இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் முக்கிய வேடத்தில் சூர்யா நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் ஜெய் பீம்,  இந்தத் திரைப்படம் ஓடிடி இணையதளத்தில் வெளியாகி மொழி, இனம் கடந்து சர்வதேச அளவில் மக்கள் மத்தியில் பாராட்டை பெற்று வருகிறது. ஹாலிவுட் திரைப்படங்களையே பின்னுக்கு தள்ளும் அளவுக்கு பார்வையாளர்களை கொண்ட படமாக வெற்றிபெற்றுள்ளது. இப்படத்தில் பழங்குடியின இருளர்  ராஜாக்கண்ணு என்பவர் பொய் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்தில் சித்திரவதை செய்து கொல்லப்பட்ட உண்மை சம்பவத்தை  மையமாக வைத்துப் புனைவுகளுடன் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் வரும் உதவி ஆய்வாளருக்கு குருமூர்த்தி என பெயரிடப்பட்டுள்ளது. அதேபோல் அவரது இல்லத்தில் வன்னியர்களின்  அடையாளங்களில் ஒன்றான அக்னி கலசம் காலண்டர் மாட்டப்பட்டுள்ளது. இந்த காட்சி மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் ஜெ குரு அவர்களையும், வன்னிய சமூகத்தையும் இழிவுபடுத்தும் நோக்கில் உள்ளதாக கூறி, பாமகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

அவர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து  உடனே அந்த காலண்டர் காட்சி மாற்றப்பட்டுள்ளது. ஆனால் அந்த காட்சி  வன்னிய சமூகத்தின் மீதுள்ள வன்மத்தின்காரணமாக வைக்கப்பட்டது என்றும், இதற்கு சூர்யா உடனே பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அத்துடன் 5 கோடி ரூபாய் மானநஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என்றும் பாமக வழக்கு தொடுத்துள்ளது. நாளுக்கு நாள் சூர்யா-- பாமக மோதல் அதிகரித்து வரும் நிலையில் இதில் அரசு தலையிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இந்நிலையில் சூர்யாவுக்கு ஆதரவாக மக்கள் கண்காணிப்பகள் ஹென்றி டிபேன் பேட்டி கொடுத்துள்ளார். அதில் , 

சூர்யா நடித்து தயாரித்துள்ள ஜெய் பீம் திரைப்படம் காவல்துறையின் சித்திரவதைகளுக்கு எதிராக குரல், ஜெய்பீம் என்பது சாதிய பாகுபாட்டுக்கு எதிரான குரல், ஜெய் பீம் என்பது அனைவரையும் ஒன்றிணைக்கக் கூடிய குரலாக இந்த படத்தின் மூலம் ஒலித்திருக்கிறது. ஒரு காலத்தில் தலித் மக்கள் மட்டும் பயன்படுத்தி வந்த ஜெய்பீம் என்ற வார்த்தை தற்போது அனைத்து மக்களுக்குமானதாக மாறியுள்ளது. இந்த படத்தை பார்த்தவுடன் என் கண்கள் குளமாகி விட்டது. இதனால் சூர்யா மற்றும் அவரது படக்குழுவினருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அனைவரும் பார்க்க வேண்டிய படம், வழக்கறிஞர்கள் பார்க்க வேண்டிய படம், நீதிபதிகள் பார்க்க வேண்டிய படம், அதிலும் குறிப்பாக அரசு வழக்கறிஞர்கள் பார்க்க வேண்டிய படம், காவல்துறை அதிகாரிகள் பார்க்க வேண்டிய படம். இப்படிப் பட்ட படத்தை வைத்து பாமக அரசியல் செய்து வருகிறது. ஒரு காலத்திற்காக சமூக நீதிக்காக குரல் கொடுத்தவர், அதற்காக கட்சி ஆரம்பித்தவர் மருத்துவர் ராமதாஸ், நான் மறுத்து ராமதாசை நேசித்தவன். அவரை மதித்தவன். பாமகவினர் பல விஷயங்களுக்கு குரல் கொடுத்திருக்கிறார்கள். வன்னியர்களுக்காக மட்டும் அவர் பேசவில்லை, கல்வி சார்ந்த விஷயங்களுக்கும், சமூக சார்ந்த விஷயங்களுக்கும் அவர்கள் பேசியிருக்கிறார்கள். 

அதையெல்லாம் நாங்கள் மறுக்கவில்லை ஆனால் இன்று அவர்கள் கட்சியை சார்ந்தவர்கள் சூர்யாவின் தாக்குவோம் என்று பேசுகிறார்கள் அதற்கு முதல்  கண்டனக்குரல்  மருத்துவர் ராமதாசிடமிருந்து வந்திருக்க வேண்டும். அப்படி வரவில்லை என்பது தான் என்னுடைய ஆதங்கம். இன்னும் கூட காலம் தாழ்ந்து விடவில்லை அவர் இப்போதும் குரல் கொடுக்கலாம், அதே நேரத்தில் வேறு அரசியல் செய்ய காரணமில்லை என்பதால் தற்போது பாமக எடுத்துள்ள இந்த அரசியல் அசிங்கமான அரசியல். ஒரு தலித் இப்படி பேசியிருந்தால் அல்லது ஒரு பெரியாரிஸ்ட் இப்படி பேசி இருந்தால் இந்த காவல்துறை வேடிக்கை பார்த்து இருக்குமா? சூர்யாவை எட்டி உதைத்தால் பரிசு தருவோம் என்ற நபரை உடனே கைது செய்திருக்க வேண்டாமா? பாமகவின் இந்த வன்முறை அரசியலை தமிழக அரசு வேடிக்கை பார்க்க கூடாது, முதல்வர் ஸ்டாலின் வேடிக்கை பார்க்க கூடாது, வழக்கு மட்டும் போடுகிற விஷயம் அல்ல இது, இப்படிப்பட்டவர்களை உடனே தூக்கி உள்ளே வைத்திருக்க வேண்டும். இது சமூக நீதி மண், இது பெரியார் மண் என்பதை முதல்வர் ஸ்டாலின் காட்ட வேண்டும். தமிழகமே போற்றிக் கொண்டிருக்கும் இந்த ஜெய் பீம் திரைப்படத்தை வைத்து பிரச்சினை செய்ய வேண்டாம் என பாமகவை கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
 

click me!