CM Stalin: மக்கள் விரும்பாத சட்டங்களை எப்போது நீக்குவிங்க.. மோடியிடம் இன்னும் எதிர்பார்க்கும் ஸ்டாலின்.!

By vinoth kumarFirst Published Nov 19, 2021, 2:59 PM IST
Highlights

கடந்த ஓராண்டுகாலமாக நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் நாங்கள் சொன்னதே சரியானது என்பதை இப்போது பிரதமரே ஒப்புக் கொண்டுள்ளார். இப்போதாவது ஒப்புக்கொண்டதற்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்! இந்த மாபெரும் வெற்றிக்குக் காரணமானது தலைநகர் டெல்லியில் கடந்த ஓராண்டு காலம் இடைவிடாது போராடி வரும் உழவர் பெருங்குடி மக்களின் தியாகம்தான். 

நாடாளுமன்றத்தில் முறையாக மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற, கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- மூன்று வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி  இன்று காலை அறிவித்திருப்பதை மனப்பூர்வமாக வரவேற்கிறேன். இது கடந்த ஓராண்டுகாலமாக இம்மூன்று சட்டங்களையும் எதிர்த்துப் போராடிய வேளாண் பெருங்குடி மக்களுக்கும் ஜனநாயக சக்திகளுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றியாகும். 

மூன்று சட்டங்களையும் திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை என்று சொல்லி வந்த ஒன்றிய அரசை இந்தியா முழுக்க நடந்துவந்த இடைவிடாத போராட்டமே மனமாற்றம் செய்து இறங்கி வர வைத்தது. இந்த மூன்று சட்டங்களும் கொண்டுவரப்பட்டபோது தொடக்க நிலையிலேயே திமுக எதிர்த்தது. நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பியது. மக்களவையிலும் மாநிலங்களவையிலும் எதிர்த்து வாக்களித்தது. உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தாக்கல் செய்தோம். மக்கள் மன்றத்திலும் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தோம். திமுக சார்பில் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. கூட்டணிக் கட்சியினருடன் இணைந்து உண்ணாநிலைப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. உழவர் சங்கங்கள் நடத்திய அனைத்து போராட்டங்களிலும் கலந்து கொண்டோம். சட்டமன்றத்திலும் குரல் கொடுத்தோம். மூன்று சட்டங்களுக்கும் எதிராகச் சட்டமன்றத்தில் தீர்மானம் போடச் சொன்னோம். ஆனால் அன்றைய அதிமுக ஆட்சி அதைச் செய்யவில்லை. இன்னும் சொன்னால் மூன்று வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக அதிமுக பரப்புரையில் ஈடுபட்டது. 

அந்தச் சட்டங்களில் என்ன தவறு இருக்கிறது என்று பத்திரிகையாளர்களை வாதத்திற்கு அழைத்தார் அன்றைய முதலமைச்சர் பழனிசாமி. பாஜகவைவிட அதிகமாக அவர்தான் ஆதரித்தார். இவரை அழைத்துச் சென்று டெல்லியில் போராடி வரும் உழவர்களுக்கு விளக்கம் சொல்ல வைக்கலாமே என்று நான் அப்போது சொன்னேன். அந்தளவுக்கு அதிமுக அந்தச் சட்டங்களை ஆதரிப்பதில் தனது அடிமை விசுவாசத்தைக் காட்டியது. உழவர்கள் எதிர்பார்ப்பது குறைந்தபட்ச ஆதார விலை. அது குறைந்தபட்சம் சொல்லாகக் கூட இல்லை. அதனை வேளாண் சட்டம் என்று சொல்வது கூட தவறானது. அது உழவர்களை நிலங்களில் இருந்து வெளியேற்றும் சட்டம் ஆகும் என்று மிகத் தெளிவாக முடிவெடுத்த  திமுக இச்சட்டங்களை எதிர்த்துச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றும் என்று சொன்னோம். அதன்படி கழக ஆட்சி அமைந்ததும் 28.08.2021 அன்று நானே முதலமைச்சர் என்ற முறையில் முன்மொழிந்து தீர்மானம் நிறைவேற்றினோம். 

கடந்த ஓராண்டுகாலமாக நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் நாங்கள் சொன்னதே சரியானது என்பதை இப்போது பிரதமரே ஒப்புக் கொண்டுள்ளார். இப்போதாவது ஒப்புக்கொண்டதற்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்! இந்த மாபெரும் வெற்றிக்குக் காரணமானது தலைநகர் டெல்லியில் கடந்த ஓராண்டு காலம் இடைவிடாது போராடி வரும் உழவர் பெருங்குடி மக்களின் தியாகம்தான். கடந்த ஆண்டு நவம்பர் 26-ஆம் நாள் டெல்லிக்கு வந்து நேரடியான போராட்டத்தை உழவர்கள் தொடங்கினார்கள். ஓராண்டு காலத்தை எட்டுவதற்கு இன்னும் சரியாக ஏழு நாட்களே உள்ளன. நவம்பர் 26-ஆம் நாள் மாபெரும் போராட்டத்தை முன்னெடுப்பதற்கு உழவர் சங்கங்கள் தயாராகி வந்தன. வெயிலையும் மழையையும் நடுங்க வைக்கும் குளிரையும் பொருட்படுத்தாமல், உணவைப் பற்றிக் கவலைப்படாமல், உடல்நலனைப் பற்றி கவலைப்படாமல் உழவர்கள் போராடினார்கள். இதுவரை 700-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளார்கள். ஆனாலும் தங்களது போராட்டக் குணத்தை விடாமல் கடைப்பிடித்தார்கள் உழவர்கள்.

உழவர்கள் போராட்டம் நவம்பர் 26-க்குப் பிறகு இன்னும் வேகம் எடுக்கும் என்பது தெரிந்தோ, அல்லது நடக்க இருக்கும் சில மாநிலச் சட்டப்பேரவைத் தேர்தல்களை மனதில் வைத்தோ இத்தகைய முடிவை ஒன்றிய அரசு எடுத்துள்ளது. இவ்வளவுப் போராட்டங்கள், தியாகங்களுக்குப் பிறகுதான் சட்டம் திரும்பப் பெறப்படும் என்ற அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. காரணம் எதுவாக இருந்தாலும், திரும்பப் பெறும் முடிவு வரவேற்கத்தக்கது ஆகும்.

நாடாளுமன்றத்தில் முறையாக இம்மூன்று சட்டங்களும் திரும்பப் பெறக் கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே நடவடிக்கை எடுக்க வேண்டும். போராடிய உழவர்களை அழைத்து ஒன்றிய அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். உழவர்களின் கோரிக்கைகளுக்குச் செவிமடுக்க வேண்டும். போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகள் அனைவருக்கும் நிதியுதவி அளித்து, அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டும். இந்தக் கோரிக்கைகளை ஏற்றுச் செயல்படுத்துவதன் மூலமாக உழவர்களுக்கு நம்பிக்கையை உருவாக்க வேண்டும். இந்திய வேளாண்மை செழிக்க வேண்டுமானால் அது உழவர்களின் மூலமாகத்தான் செழிக்க வேண்டும். அதற்கு அடித்தளமான ஆக்கபூர்வமான செயல்திட்டங்களை இனியாவது ஒன்றிய அரசு செயல்படுத்த முன்வர வேண்டும் எனவும் குடியுரிமைத் திருத்தச் சட்டம் உள்ளிட்ட பிற மக்கள் விரும்பாத சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

click me!