ராஜ்யசபா தேர்தல்.. புதுச்சேரியில் என்ஆர் காங்கிரஸ்-பாஜக இடையே இழுபறி.. நடுராத்திரியில் கூட்டம் போட்ட ரங்கசாமி!

By Asianet TamilFirst Published Sep 21, 2021, 9:37 AM IST
Highlights

புதுச்சேரியில் மாநிலங்களவை எம்.பி. பதவியை ஒதுக்குவதில் பாஜக-என்.ஆர். காங்கிரஸ் இடையே சிக்கல் எழுந்துள்ள நிலையில், நள்ளிரவில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களுடன் முதல்வர் ரங்கசாமி அவசர ஆலோசனை நடத்தினார்.
 

புதுச்சேரியில் அக்டோபர் 4 அன்று ஒரே ஒரு இடத்துக்கான மாநிலங்களவை எம்.பி. தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் செப்டம்பர் 22 அன்று நிறைவடைகிறது. புதுச்சேரியில் இத்தேர்தலில் யார் போட்டியிடுவது என்பதில் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக இடையே போட்டாப்போட்டி ஏற்பட்டுள்ளது. பாஜகவுக்கு 6 எம்எல்ஏக்கள், சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் ஆதரவு உள்ளதால், தாங்கள் நிறுத்தும் வேட்பாளருக்கு என்.ஆர்.காங்கிரஸ் ஆதரவு அளிக்க வேண்டும் என்று பாஜக தீர்மானம் நிறைவேற்றி முதல்வர் ரங்கசாமியிடம் வழங்கியுள்ளனர்.


சட்டப்பேரவையில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு 10 எம்.எல்.ஏ.க்கள் இருப்பதால், முன்னாள் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவை எம்.பி.யாக்க ரங்கசாமி விரும்புகிறார். திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு 8 எம்.எல்.ஏ.க்கள் உள்ளதால், ஆளுங்கூட்டணியில் சிக்கல் ஏற்பட்டால், அதைப் பயன்படுத்தி களமிறங்கக் காத்திருக்கிறது. என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி சார்பில் வேட்பாளரை நிறுத்தினால் எளிதில் வெற்றி பெறலாம். ஆனால், கூட்டணி கட்சிகளின் சார்பில் யார் போட்டியிடுவார்கள் என்பதில் குழப்பம் நீடித்து வருகிறது. 
கடந்த 2015-இல் தன்னுடைய நண்பர் கோகுலகிருஷ்ணனை எம்.பி.யாக்க ரங்கசாமி விரும்பினார். அதில் சிக்கல் ஏற்பட்டதால், அவரை அதிமுகவில் இணைத்து, அந்தக் கட்சி ஆதரவுடன் எம்.பி.யாக்கினார். இந்த முறை தன்னுடைய கட்சிக்கே எம்.பி. பதவி இருக்க வேண்டும் என்று ரங்கசாமி நினைக்கிறார். ஆனால், தங்களுக்கு அந்தப் பதவியை விட்டு தர வேண்டும் என்று பாஜகவும் நெருக்குகிறது. இந்நிலையில் நேற்று இரவு 11 மணிக்கு மேல்,  முதல்வர் ரங்கசாமி தன் கட்சி எம்.எல்.ஏ.க்களுடன் திடீரென அவசர ஆலோசனையில் ஈடுபட்டார். இதில் அக்கட்சி அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர். அரை மணி நேரத்துக்கும் மேலாக இக்கூட்டம் நடைபெற்றது. 
இந்த ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதில் அளிக்காமல் முதல்வர் ரங்கசாமி சென்றுவிட்டார். என்றாலும் எம்.பி. பதவியை பாஜகவுக்கு விட்டுக் கொடுக்கக் கூடாது என்று என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தியதாக எம்.எல்.ஏ. தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

click me!