மறக்க முடியாத 30-ஆம் ஆண்டு... 30 லட்சம் பேருக்கு மாஸ்க்... கே.எஸ்.அழகிரியின் மாஸ் அறிவிப்பு..!

By Asianet TamilFirst Published May 16, 2021, 9:25 PM IST
Highlights

தமிழக மக்களை மிகவும் நேசித்த அன்புத்தலைவர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட 30 ஆவது ஆண்டு நினைவு நாளை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு வகைகளில் நிவாரண உதவிகளை செய்கிற மகத்தான அர்ப்பணிப்பு மிக்க நாளாக கடைபிடிக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.
 

இதுகுறித்து கே.எஸ். அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், “அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் சோனியா காந்தியின் அறிவுறுத்தலின்படி 20ஆம் நூற்றாண்டின் இணையற்ற தலைவர், முன்னாள் பாரதப் பிரதமர் ராஜிவ் காந்தியின் 30ஆவது ஆண்டு நினைவு தினமான வருகின்ற மே 21ஆம் தேதி கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றிப் பாதுகாப்பான முறையில் அவருக்கு அஞ்சலி செலுத்த வேண்டும்.

 
இதுதொடர்பாக நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் கூட்டத்தில், மே 21 ஆம் தேதி ராஜிவ் காந்தியின் 30ஆவது நினைவு நாளில் தமிழகம் முழுவதும் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட முகக் கவசங்களை விநியோகம் செய்வதென முடிவு செய்யப்பட்டது. மேலும் நிவாரண உதவியாக மக்களுக்கு உணவும், மருத்துவ உபகரணங்களும் வழங்குவதில் கவனம் செலுத்த வேண்டும். இத்தகைய உதவியை எல்லாவற்றையும் இழந்து நிற்கிற மக்களுக்குச் செய்ய வேண்டும். இந்த மருத்துவ உபகரணங்கள் மருந்துகளையும், குறிப்பாக மக்களுக்குத் தேவைப்படும் மருந்துகளைக் கொண்டதாக இருக்க வேண்டும்.
மாவட்டம், நகர, வட்டார, பேரூர் மற்றும் கிராம அளவில் பொதுமக்களுக்கு முகக்கவசம் வழங்கும் மாபெரும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். ஒவ்வொரு நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினரும் தங்கள் தொகுதியில் பொதுமக்களுக்கு குறைந்தபட்சம் 1 லட்சம் முகக் கவசங்களை மே 21 முதல் விநியோகிக்க வேண்டும். மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் குறைந்தபட்சம் 50 ஆயிரம் முக கவசங்களை வழங்க வேண்டும். மருத்துவமனையில் இருக்கும் நோயாளிகளின் உறவினர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், உடல்களைத் தகனம் செய்யும் மக்கள் மற்றும் தேவையான மக்களுக்கு உணவு வழங்க வேண்டும்.
கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளப் பதிவு செய்வதற்கு மக்களுக்கு உதவி செய்ய வேண்டும். குறிப்பாக தடுப்பூசி போட்டுக்கொள்ள தயக்கம் காட்டுகிற கிராமப்புற மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்களை தடுப்பூசிக்கான இணையத்தில் பதிவு செய்வதற்கு உதவ வேண்டும். இதை காங்கிரஸ் கட்சியினர் மக்கள் இயக்கமாக நடத்த வேண்டும். ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரும் தங்கள் தொகுதியில் கொரோனா நோயாளிகளுக்காகக் குறைந்தது 2 ஆம்புலன்ஸ் வசதியைச் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ஏற்படுத்தித் தர வேண்டும்.


தமிழக மக்களை மிகவும் நேசித்த அன்புத்தலைவர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட 30 ஆவது ஆண்டு நினைவு நாளை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு வகைகளில் நிவாரண உதவிகளை செய்கிற மகத்தான அர்ப்பணிப்பு மிக்க நாளாக கடைபிடிக்க வேண்டும். இப்பணியில் தமிழகத்தில் உள்ள மாவட்ட, நகர, வட்டார, பேரூர், கிராம காங்கிரஸ் கமிட்டிகள் முழு ஈடுபாட்டோடு செயல்பட வேண்டும். இதுவே மறைந்த ராஜீவ் காந்திக்கு நாம் செலுத்தும் மிகச்சிறந்த அஞ்சலியாக இருக்கும்.” என்று அறிக்கையில் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.
 

click me!