மகனுக்காக ஆளுனரிடம் மன்றாடிய தாய்...!! டுவிட்டரில் உருக்கம்...!!

By Ezhilarasan BabuFirst Published Oct 2, 2019, 2:23 PM IST
Highlights

பல ஆண்டுகளாக சிறை வாசம் அனுபவத்துவரும்  7 தமிழர்களை விடுவிக்க தமிழக அரசு நிறைவேற்றி அனுப்பியுள்ள  தீர்மானத்திற்கு  இன்றாவது ஆளுநர் மதிப்பளிப்பாரா.? எனது மகன் வீடு திரும்புவானா”

ராஜிவ் கொலை வழக்கில்  தண்டனை பெற்றுவரும் தன் மகன் உட்பட 7 தமிழர்களை விடுவிக்க தமிழக அரசு அனுப்பியுள்ள பரிந்துரை தீர்மானத்தின் மீது காந்தி ஜெயந்தியான இன்றாவது  ஆளுனர் பரிசீலனை செய்வாரா, என் மகன் வீடு வந்து சேருவான..? என கேள்வி எழுப்பி, தனது ஏக்கத்தை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள்.

மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாள் நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. உள்ளூர் அரசியல்வாதிகள் முதல் தேசிய தலைவர்கள் வரை மகாத்மா காந்தியின் விழாவை முன்னெடுத்து கொண்டாடி வருகின்றனர்.  பள்ளிக்கூடங்கள் தோறும் மாணவர்கள் காந்தியை நினைவு கூறும் வகையில் அவருடைய போதனைகளையும், அவரைப் போலவும்  வேடமிட்டு மகாத்மாவை  போற்றி வருகின்றனர். அதே நேரத்தில்  காந்தி ஜெயந்தி என்றால்  பல ஆண்டுகளாக சிறைக்கொட்டகையில் தண்டனை அனுபவித்துவரும் கைதிகளை,  நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்வது வழக்கம். அதேபோல் இன்றும் நாடு முழுவதும் பல சிறைகளில் இருந்து கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

 

இந்த நிலையில் அதை குறிப்பிட்டுள்ள பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள், தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்று பதிவிட்டுள்ளார். அதில்,  ”காந்தியின் பிறந்த நாளில்  நூற்றுக்கும்  மேற்பட்டோருக்கு மரணதண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளது. ஆயுள் சிறைவாசிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு பல ஆண்டுகளாக சிறை வாசம் அனுபவத்துவரும்  7 தமிழர்களை விடுவிக்க தமிழக அரசு நிறைவேற்றி அனுப்பியுள்ள  தீர்மானத்திற்கு  இன்றாவது ஆளுநர் மதிப்பளிப்பாரா.? எனது மகன் வீடு திரும்புவானா” என்று கேள்வி எழுப்பி தன் ஆதங்கத்தை வெளிபடுத்தியுள்ளார். ஏழு தமிழர்களை விடுக்க வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு தீர்மானம் நிறைவேற்றி அதை ஆளுனருக்கு அனுப்பிவைத்துள்ள நிலையில் ஆளுனர் இதுவரை அதன் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்துவருவது குறிப்பிடதக்கது.
 

click me!