
ஜெயலலிதா மறைவு, கருணாநிதியின் பங்களிப்பில்லாத அரசியல் என இருக்கும் நிலையில், தினகரன் வெற்றி ரஜினிகாந்தின் அரசியல் வருகை, கமலின் அதிரடி டிவீட்கள் என அடுத்தடுத்து பிரேக்கிங் பிரேக்கிங் ஆகவே வைத்திருக்கிறது தமிழக அரசியல். தமிழகத்தின் தற்போதைய அரசயில் சூழலில் தேர்தல் நடந்தால் மக்களின் எண்ண ஓட்டம் என்ன என்று இந்தியா டுடே கார்வி இணைந்து சர்வே ஒன்றை நடத்தியுள்ளது.
இந்த சர்வேயில் அதிமுக, திமுக, ரஜினியின் அரசியல் வருகை தினகரனின் ஆர்.கே.நகர் வெற்றி என பல்வேறு விஷயங்கள் குறித்து மக்களிடம் கேள்வி கேட்டு அதன் அடிப்படையில் கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.
இந்த சர்வே, பொருளாதார பாதிப்பு, சமூக பிரச்னைகளில் அரசின் அக்கறை, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கியதா அரசு என பல முக்கிய பிரச்னைகளை முன் வைத்து பள்ளி, கல்லூரிகள், தொழில் நிறுவனங்கள் மற்றும் விவசாயிகள் மத்தியில் இந்த சர்வே எடுக்கப்பட்டது.
இந்த சர்வே ரிசல்ட் அதிமுக கூடாரத்தை அதிரச்செய்துள்ளது என சொல்லலாம்.... அதிமுக சிதைந்துள்ளதா? என்ற கேள்விக்கு ஆம் என்று 54 சதவீதம் பேரும், இல்லை என 35 சதவீதம் பேரும் கூறியுள்ளனர். மேலும் 11 சதவீத மக்கள் கருத்து கூற விரும்பவில்லை என கூறியுள்ளனர்.
கடந்த தேர்தலில் 135 தொகுதிகளில் வென்ற அதிமுகவிற்கு ஏன் இந்த நிலைமை? கடந்த 2016 சட்டசபை தேர்தலில் அதிமுகவிற்கு நம்பிக்கையுடன் வாக்களித்தவர்களில் 3ல் ஒரு வாக்காளர் தற்போதைய நிலையில் அதிமுக மேல் அதிருப்தியில் உள்ளனர். அப்போ அதிருப்தியில் உள்ள ஓட்டுகள் யாருக்கு போகிறது? அதிமுக மீது அதிருப்தியில் இருக்கும 60 சதவீத வாக்காளர்களின் வாக்குகளும் ரஜினிகாந்த்தின் பக்கம் தான் போகிறது. மீதமிருக்கும் 26 சதவீத வாக்குகள் மட்டுமே திமுகவிற்கு கிடைக்கும் என வருகிறது.
வரும் காலத்தில் சிறந்த முதல்வராக யார் இருப்பர்? என்ற கேள்விக்கு முப்பத்தெட்டு சதவீதத்தினர் ‘மு.க. ஸ்டாலின்’ என்றும் கொடி தூக்கி காட்டியுள்ளனர். அடுத்ததாக டி.டி.வி. தினகரன் என்று பதினாலு சதவீதத்தினர் வாக்களித்துள்ளனர்.
ரஜினியை பதினேழரை சதவீதத்தினரும் சொல்லியிருக்கின்றனர். ஆளும் எடப்பாடியை வெறும் ஏழு சதவீதத்தினர் ‘சிறந்த முதல்வர்’ என்று சொல்லியிருக்க, விஜயகாந்தை வெறும் 3.12 சதவீதத்தினரே கைகாட்டியிருப்பது அவலமே!