
6 மாதத்தில் சட்டசபைத் தேர்தல் வந்தால் போட்டியிடுவீர்களா என்று கேட்டதற்கு, கண்டிப்பாக தேர்தலை சந்திப்பேன் என்றும் புதிய கட்சி தொடங்க உள்ள கமலுக்கு வாழ்த்துக்கள் என்றும் ஆன்மீக அரசியல் தலைவரும் நடிகருமான ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவின் இரு பெரும் தூணாக திகழும் ரஜினியும், கமலும் அடுத்தடுத்து தங்களது அரசியல் என்ட்ரியை அறிவித்துள்ளனர். இவர்களின் அரசியல் ஒன்றுக்கு ஒன்று சம்பந்தம் இல்லாதது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ரசிகர்கள் சந்திப்பின் கடைசி நாளன்று ஆன்மீக அரசியல் கட்சி தொடங்கப் போவதாகவும் கூறியுள்ளார் ரஜினி. இதற்கு கமல்ஹாசன் வாழ்த்தினார்.
இந்நிலையில், ரஜினிகாந்த் அரசியல் என்றி குறித்து வாழ்த்து மட்டுமே சொல்லியிருந்த கமல் என்ன நினைத்தாரோ? வரும் பிப்ரவரி 21ஆம் தேதியன்று கட்சி பெயரை அறிவிப்பேன் என்றும் ராமநாதபுரத்தில் இருந்து சுற்றுப்பயணத்தை தொடங்குவேன் என்றும் நடு ராத்திரியில் ஒரு டிவிட்டை போட்டார் கமல்ஹாசன். இந்த ட்விட்டர் தமிழக அரசியலில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது. ரஜினிக்கு முன்பாகவே கட்சி பெயரை அறிவித்து மக்களிடம் அறிமுகம் செய்து மக்கள் மத்தியில் பெயரெடுக்க இந்த ப்ளானாக தெரிகிறது.
கட்சி தொடங்க சில முன்னேற்பாடுகள் தேவை என்று கூறிய கமல்ஹாசன், திடீரென கட்சி தொடங்கப்போவதாக நள்ளிரவில் கூறியது ஏன்? என தமிழிசை உள்ளிட்ட தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த ரஜினி, புதிய கட்சி தொடங்க உள்ள கமலை வாழ்த்துவதாக கூறினார். இருவரும் இணைந்து செயல்படுவீர்களா என்று கேட்டதற்கு காலம்தான் பதில் சொல்லும் என்றார். மேலும் செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த அவர், 6 மாதத்தில் சட்டசபைத் தேர்தல் வந்தால் போட்டியிடுவீர்களா? என்று கேட்டதற்கு, கண்டிப்பாக தேர்தலை சந்திப்பேன் என்றும் கூறினார் ரஜினிகாந்த்.