
அரசியலில் குதிப்பது குறித்து தனது முடிவை நடிகர் ரஜினிகாந்த் இன்று அறிவிப்பதாக கூறியுள்ள நிலையில் அவர் தனிக்கட்சி தொடங்குவாரா? அல்லது தனி அமைப்பு, பேரவை போன்று தொடங்கி சமூச சேவைகளில் ஈடுபடுவாரா? என்ற எதிர்பார்ப்புடன் அவரது ரசிகர்கள் ஏங்கிக்கிடக்கின்றனர்
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அவருடைய ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. இந்த நிலையில், அவர் கடந்த மே மாதம் 15 மாவட்டங்களை சேர்ந்த ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
அதன்பிறகு ‘2.0, காலா’ ஆகிய படப்பிடிப்புகளில் அவர் கலந்து கொண்டதால், மற்ற மாவட்ட ரசிகர்களை பின்னர் சந்திப்பதாக அறிவிக்கப்பட்டது. தற்போது அந்த 2 படங்களின் படப்பிடிப்பும் முடிவடைந்துவிட்ட நிலையில், அவர் மீண்டும் ரசிகர்களை சந்தித்து வருகிறார்.
கடந்த 26–ந் தேதி சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் காஞ்சீபுரம், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, நீலகிரி ஆகிய 5 மாவட்டங்களை சேர்ந்த ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
தொடர்ந்து 27, 28, 29 ஆகிய தேதிகளில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ரசிகர்களை அவர் சந்தித்து பேசினார். நேற்று வடசென்னை, மத்திய சென்னை ரசிகர்களை சந்தித்தார். இன்று தென்சென்னை மாவட்ட ரசிகர்களை சந்தித்து பேசுகிறார்.
இந்த சந்திப்பின்போது அடையாள அட்டை வைத்திருந்த ரசிகர்கள் மட்டுமே ரஜினிகாந்தை சந்திக்க அனுமதிக்கப்பட்டார்கள். ராகவேந்திரா மண்டபத்தை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.
ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என்று தமிழகம் முழுவதும் ரசிகர்கள் சுவரொட்டிகளை ஒட்டியிருக்கிறார்கள். இதுகுறித்து நடிகர் ரஜினிகாந்த், பேசும்போது, நான் அரசியலுக்கு வருவது ஆண்டவன் கையில் இருக்கிறது. என்றாலும், அரசியல் பற்றிய எனது முடிவை வருகிற 31–ந் தேதி அறிவிப்பேன்’ என்று கூறினார்.
இதனால் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பும், எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. அவர் தனிக்கட்சி தொடங்குவார் என்று சிலரும், தனி அமைப்பை தொடங்குவார் என்று சிலரும் பேசி வருகிறார்கள்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், ரஜினிகாந்த் தனது அரசியல் பற்றிய முடிவை இன்று இன்னும் சற்று நேரத்தில் அறிவிக்கிறார். தமிழ்நாடு முழுவதும் உள்ள அவருடைய ரசிகர்கள் ரஜினிகாந்த் என்ன சொல்லப்போகிறார் என்பதை எதிர்பார்த்து காத்துக் கிடக்கின்றனர்.