
இந்து மதத்தை கடைபிடிக்காத 40 பணியாளர்களுக்கு நோட்டீஸ்...திருப்பதி திருமலை தேவஸ்தானம் நடவடிக்கை
இந்து மதத்தைத் தவிர மற்ற மதங்களைப் பின்பற்றியதால், திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வராகோயிலில் பணிபுரிந்து வரும் 40 பணியாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி திருமலை திருப்பதி தேவஸ்தானம் விளக்கம் கேட்டுள்ளது.
இதன்மூலம் திருப்பதியில் கிறிஸ்துவ மதம் பரப்பப்படுகிறது என்ற புகார் வந்ததையடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து ஆங்கில நாளேடு ஒன்று வௌியிட்ட செய்தியில் கூறப்பட்டு இருப்பதாவது-
40 பணியாளர்கள்
பல்வேறு மதங்களைப் பின்பற்றும் 40க்கும் மேற்பட்ட பணியாளர்கள் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் பணியாற்றி வருகின்றனர் இது தேவஸ்தான நிர்வாக விதிமுறைகளை மீறியதாகும். தேவஸ்தான விதிமுறைகள்படி, இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே கோயிலில் பணியாற்ற முடியும்.
இந்நிலையில், நோட்டீஸ் வழங்கப்பட்ட இந்த 40 ஊழியர்கள் மீது எந்தவிதமான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதும் தெரியவில்லை.
தேவாலயம்
சமீபத்தில், திருமலை திருப்பதி தேவஸ்தானத்தைச் சேர்ந்த ஊழியர்கள், அதிகாரிகள் அருகில் உள்ள தேவாலயத்துக்கு சென்று வழிபாடு நடத்தும் வீடியோ ஒளிபரப்பானது.
குறிப்பாக திருமலை திருப்பதி தேவஸ்தான துணை நிர்வாக அதிகாரி சினேகா லதா என்பவர் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அரசு காரில் தேவாலயத்துக்கு சென்று வழிபட்டார். இது குறித்து நிர்வாகம் சார்பில் அதிகாரி சினேகா லதாவிடம் விசாரணையும் நடத்தப்பட்டுள்ளது.
நீக்க வலியுறுத்தல்
கோயில் ஆகமவிதிப்படி, மற்ற மதத்தைச் சேர்ந்தவர்கள், வழிபாடு செய்பவர்கள் கோயிலில் பணியாற்ற அனுமதி இல்லை என்று கூறப்படுகிறது. கோயில் அதிகாரி ஒருவர் தேவலாயத்துக்கு சென்று வழிபாடு செய்ததை விஸ்வ இந்து பரிசத் அமைப்பு கடுமையாக விமர்சித்து, மற்ற மதத்தைச் சேர்ந்தவர்களை கோயில் பணியில் இருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தியது.
திருமலையில் இந்து மத்ததையும், கலாச்சாரத்தையும் தீவிரமாக பின்பற்ற வேண்டும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் கட்டளையிட்டுள்ளது. கடந்த 2007ம் ஆண்டு ஆந்திர அரசு பிறப்பித்த உத்தரவின்படி, திருமலை திருப்பதி வெங்கடேஸ்வரா கோயிலில் இந்துக்களைத் தவிர பிற மதத்தினர்கள் வழிபாடு நடத்த அனுமதியில்லை, மதத்தை பரப்பவும் அனுமதியில்லை என உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.