
தமிழகம், கேரளா, குஜராத், கோவா, மஹாராஷ்டிரா மாநிலங்களை உலுக்கி எடுத்த ‘ஓகி’ புயலால் கடற்கரை ஓரங்களில் 80 டன்னுக்கு மேற்பட்ட பிளாஸ்டிக் குப்பைகள் தேங்கி உள்ளன என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மக்களவையில் மத்திய சுற்றுச்சூழல் துறை இணை அமைச்சர் மகேஷ் சர்மா கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் கூறியதாவது-
சமீபத்தில் தமிழகம், கேரளா,கர்நாடக, குஜராத், மஹாராஷ்டிரா, கோவா மாநில கடற்கரை ஓரங்களை தாக்கிய ‘ஓகி’ புயலால், கடலின் உயிர்சூழல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக லட்சத்தீவுகளில் உள்ள பவளப்பாறைகள் சேதமடைந்துள்ளன.
கேரளா,கர்நாடக, குஜராத், மஹாராஷ்டிரா, கோவா, குறிப்பாக மும்பை கடற்கரை ஓரங்களில் ஏராளமான குப்பைகளும், கழிவுகளும் சேர்ந்து விட்டன. ஏறக்குறைய 80-டன்னுக்கும் அதிகமான பிளாஸ்டிக் கழிவுகள் கடற்கரை ஓரங்களில் குவிந்து கிடக்கின்றன. மஹாராஷ்டிரா கடற்கரையோ ஒப்பிடும்போது மற்ற மாநில கடற்கரைகளில் குப்பைகள் அதிகமாக இல்லை. இந்த குப்பைகளை அகற்றும் பணிகளில் அந்தந்த மாநில அரசுகளும், யூனியன் பிரதேசங்களும் ஈடுபட்டு வருகின்றன.
ஓகி புயலால் ஏற்பட்ட மிகப் பெரிய அலைகளால் கடல் உயிர் சூழல் வேறுபட்டு, நட்சத்திர ஆமைகள், கடல் அட்டை, சிறு மீன்கள், கடற்பாசிகள், உள்ளிட்டபல சிறு கடல்வாழ் உயிரினங்கள் இறந்து கரை ஒதுங்கி இருந்தன. பாறைகளை அதிகமாகக் கொண்ட கேரள கடற்கரைப்பகுதியில் கடல்வாழ் உயிரினங்களுக்கு அதிகமான சேதம் ஏற்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, கடல்உயிர் சூழலை பாதுகாக்கவும், மேம்படுத்தவும் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக கடலில் கழிவுகள் கலக்கா வகையிலும், பிளாஸ்டிக் கழிவுகள் சேராவகையில் தடுத்து வருகிறது
இவ்வாறு அவர் தெரிவித்தார்.