
“பா.ஜனதாவின் மூத்த தலைவரும், குஜராத்தின் துணை முதல்வர் நிதின் படேல், 10 எம்.எல்.ஏ.க்களை பிரித்து தனியே வந்தால், காங்கிரஸ் கட்சியுடன் பேசி ஆட்சி அமைக்கலாம்’’ என்று பட்டிதார் அந்தோலன் சமிதி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஹர்திக் படேல் அழைப்பு விடுத்துள்ளார்.
முதல்வருடன் அதிருப்தி
குஜராத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலில் பா.ஜனதா கட்சி 182 தொகுதிகளில் 99 தொகுதிகளைக் கைப்பற்றி 6-வது முறையாக ஆட்சி அமைத்துள்ளது. துணை முதல்வராக இருக்கும் நிதின் படேலுக்கு கடந்த முறை ஒதுக்கப்பட்ட நிதி, நகரமேம்பாடு, பெட்ரோலியம் ஒதுக்கப்படாமல், முக்கியமற்ற துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதனால், கட்சித் தலைமை மீதும், முதல்வர் விஜய் ரூபானி மீதும் அவர் மிகுந்த அதிருப்தியில் இருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால், இன்னும் அவர் அமைச்சகப் பொறுப்பை ஏற்காமல் இருக்கிறார்.
அழைப்பு
இந்நிலையில், பட்டிதார் அந்தோலன் சமிதி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஹர்திக் படேல், துணை முதல்வர் நிதின் படேல் தன்னுடன் இணைய வேண்டும் எனக் கோரி அழைப்பு விடுத்துள்ளார்.
மரியாதை இல்லை
அவர் நிருபர்களிடம் நேற்று கூறுகையில், “ பா.ஜனதா கட்சி மூத்த தலைவர்களுக்கு மரியாதை அளிக்காது. நிதின்படேலுக்கு ஆதரவாக ஒவ்வொருவரும் இருக்க வேண்டும். பா.ஜனதா கட்சி மரியாதை தராவிட்டால், நிதின் படேல் எங்களுடன் இணையலாம்.அவர் கட்சிக்காக கடுமையாக உழைத்தவர்.
ஆட்சி அமைப்போம்
அவர் பா.ஜனதா கட்சியை விட்டு விலகி வரத் தயாராக இருந்தால், 10 எம்.எல்.ஏ.க்களை தனியாக பிரித்து வந்தால்,நான் காங்கிரஸ் கட்சியியுடன் பேசி, ஆட்சி அமைக்க உதவி செய்கிறேன். உரிய முக்கியத்துவம் அதில் அளிக்கப்படும். எங்களுடைய அமைப்பும் அவருக்கு ஆதரவு அளிக்கும்’’ என்று தெரிவித்தார்.
பா.ஜனதாவின் இலக்கு
மாநில காங்கிரஸ் தலைவர் பாரத்சிங் சோலங்கி கூறுகையில், “ குஜராத் மாநிலத்தில் நிலவும் சூழலை காங்கிரஸ் உன்னிப்பாக கவனித்து வருகிறது. முதலில் ஆனந்திபென் படேல், இப்போது, நிதின் படேல் என்பது பா.ஜனதாவின் இலக்காக இருக்கிறது. சில எம்.எல்.ஏ.க்கள் ஆதரவோடு நிதின் படேல் பிரிந்து வந்தால், குஜராத் மாநிலத்தின் நலன்கருதி, அங்கு காங்கிரஸ் ஆட்சிஅமைக்கும்’’ என்று தெரிவித்தார்.