
ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில், அனைத்து கட்சிகளிலும் உள்ள அவரது நண்பர்கள், மற்றும் ஓய்வு பெற்ற அதிகாரிகளுடன் தொடர்ந்து நேரடியாகவும், தொலைபேசி வாயிலாகவும் ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், தேமுதிக வை ஆரம்பிப்பதற்கு முன்பு விஜயகாந்த் என்ன செய்தாரோ, அதே பாணியில் வட மாவட்டங்களை மட்டுமே குறி வைத்து இறங்கினால், வெற்றி எளிதாகும் என்று, ரஜினிக்கு முக்கிய பிரமுகர்கள் பலரும் அவருக்கு ஆலோசனை வழங்கி வருகின்றனர். விஜயகாந்த், முதன்முதலில் கூட்டணி இல்லாமல் தேர்தலை சந்தித்தபோது, வட மாவட்டங்களில்தான் அவரது கட்சி அதிக வாக்குகளை குவித்ததது.
அதேபோல், பாமக வலுவாக இருந்த விருத்தாசலம் தொகுதியில், பண்ருட்டி ராமச்சந்திரன் போட்டுக்கொடுத்த, ஸ்கெட்ச்சின் அடிப்படையில் செயல்பட்டதால்தான், அவரால் தனித்து நின்று வெற்றி பெற முடிந்தது என்றும் கூறி உள்ளனர். அந்த யோசனை ரஜினிக்கு மிகவும் பிடித்து போகவே, வட மாவட்டங்களில் அரசியல் கட்சிகளால் ஓரம் கட்டப்பட்டுள்ள முக்கிய புள்ளிகளை எல்லாம் ஒரு லிஸ்ட் எடுக்க, உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, திமுக, அதிமுகவை விட பாமகவில் மட்டுமே, முக்கிய புள்ளிகள் பலர் ஒதுக்கப்பட்டும், ஒதுங்கியும் இருப்பதாக அவருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதையடுத்து, பாமக மட்டுமல்லாது, அனைத்து கட்சியிலும் ஓரம் கட்டப்பட்டுள்ள முக்கிய புள்ளிகள் பலரை, ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் சந்தித்து பேசியதில், ரஜினி ஆரம்பிக்கும் கட்சியில் சேருவதற்கு அவர்கள் ஆர்வமாக இருப்பதாகவே கூறி உள்ளனர்.
எனவே, காலா படத்தின் முதல் கட்ட ஷூட்டிங் முடிந்த நிலையில், வட மாவட்ட அரசியலின் முக்கிய புள்ளிகள் அனைவரையும், ரஜினி சந்தித்து பேச திட்டமிட்டுள்ளதாக, அவரது ரசிகர்கள் கூறுகின்றனர். குறிப்பாக, பாமகவால் ஓரம் கட்டப்பட்ட முக்கிய பிரமுகர்களுக்கு, தமது கட்சியில் முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்பதில் ரஜினி கூடுதல் கவனம் செலுத்த இருப்பதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே, திமுகவில் இருக்கும், முக்கிய பிரதிநிதியான ஜெகத்ரட்சகனை தமது நட்பு வட்டாரத்தில் வைத்துள்ள ரஜினி, அடுத்து அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா என நான்கு தலைவர்களிடமும் இணைந்து பணியாற்றிய அனுபவம் உள்ள பண்ருட்டியாரை தமது கட்சிக்கு கொண்டு வரவும் விரும்புகிறாராம்.
பண்ருட்டியார் இருந்த வரையில், அரசியலில் நல்ல நிலையில் இருந்த விஜயகாந்த், அவர் விலகிய பின்னர், ஆலோசனை கூற சரியான ஆள் இல்லாத காரணமாகவே வீழ்ச்சியை சந்தித்தார் என்று, ரஜினி நினைப்பதால், பண்ருட்டியார் வருகையை அவர் அதிகம் எதிர்பார்க்கிறார் என்று கூறப்படுகிறது. எப்படி பார்த்தாலும், நேரடியாக மோதவில்லை என்றாலும், ரஜினியின் அரசியல் அனைத்தும், பாமக செல்வாக்கு பெற்ற, வட மாவட்டங்களை சுற்றியே இருக்கிறது என்பதே உண்மை.