
மக்கள் யார் பக்கம் என்ற கேள்வி, முன்பெல்லாம் தேர்தல் நேரங்களில் மட்டுமே எழும். நொடிக்கொரு முறை பிரேக்கிங் நியூஸ் என்றான பிறகு, அந்த கேள்வியின் தன்மையும் மாறியிருக்கிறது. இதனைப் புடம் போட்டு விளக்க வேண்டுமென்று நினைத்தால், அ.தி.மு.க.வில் இப்போது நடப்பதை உற்றுநோக்கினால் போதும்! ஜாமீனில் வெளிவந்திருக்கும் தினகரனின் பக்கம் அதிகரிக்கும் எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை, இந்த கைங்கர்யத்தைச் செய்திருக்கிறது. யார், எந்த பக்கத்தில் இருக்கிறார்கள் என்ற கேள்வியை வலுப்படுத்தியிருக்கிறது.
மிகச்சரியாக சொன்னால், கடந்த பிப்ரவரி மாதமே இந்த கேள்வி வலுப்பெற்றுவிட்டது. முதல்வராக இருந்த ஓ.பி.எஸ். தனது பதவியை ராஜினாமா செய்ததும், அதன்பின் போயஸ் கார்டனில் என்ன நடந்தது என்று வாய் திறந்ததும், அ.தி.மு.க.வை இரண்டாகப் பிரித்தது.
எந்தப் பக்கத்தில் இருப்பவர்கள் ஆட்சியைக் கைப்பற்றுவார்கள் என்று எல்லோரும் நகம் கடித்தபோது, கூவத்தூர் சசிகலா தரப்பின் புனிதத்தலமானது. 122 எம்.எல்.ஏ.க்கள் அவர் பக்கம் நின்றனர். ஓ.பி.எஸ். பக்கம் 12 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே இருந்தனர். இதன் தொடர்ச்சியாக, தமிழக முதல்வரானார் எடப்பாடி பழனிச்சாமி.
அதன்பிறகு, ஓ.பி.எஸ். வெர்சஸ் இ.பி.எஸ். என்றே இரண்டாகப் பிரிந்து களமாடி வந்தனர் அ.தி.மு.க.வினர். அ.தி.மு.க.வின் சின்னமான இரட்டை இலையை தேர்தல் ஆணையம் முடக்கியபோதும், அது தொடர்ந்தது. அப்போது, பல லட்சம் தொண்டர்கள் தங்கள் பக்கம் என்றது ஓ.பி.எஸ். தரப்பு.
அதனைத் தொடர்ந்து, ஆர்.கே.நகர் தேர்தலில் தினகரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அப்போதே, தினகரனின் பக்கம் அமைச்சர் பதவி கிடைக்காத வருத்தத்தில் இருந்த எம்.எல்.ஏ.க்கள் கணிசமாக இருந்தனர் என்று சொல்லப்பட்டது. இரட்டை இலை சின்னத்தை மீட்க லஞ்சம் கொடுத்தார் என்று தினகரன் சிறைக்கு சென்றதும், அந்தப் பேச்சு அடங்கிப்போனது.
இந்நிலையில், குற்றம்சாட்டப்பட்ட தினகரன் ஜாமீனில் வெளிவந்ததும், அந்த டுவிஸ்ட் உயிர் பெற்றிருக்கிறது. இப்போது வரை, அவர் பக்கம் முப்பத்தி சொச்சம் எம்.எல்.ஏ.க்கள் இருக்கின்றனராம். இது போக, சில பல எம்.எல்.ஏ.க்களும் சில அமைச்சர்களும் இன்றிரவுக்குள் அவர் பக்கம் அணிவகுப்பார்கள் என்று நீள்கிறது ஹேஷ்யங்கள்.
ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்., தினகரன் என்று மூன்று பக்கங்களில் அ.தி.மு.க.வினர் பிரிந்து கிடக்க, நடப்பது புரியாமல் தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கின்றனர் பொதுமக்கள். ஐந்தாண்டு காலம் நிலையான ஆட்சி நடக்கும் என்று நம்பிய திருவாளர் பொதுஜனம், அ.தி.மு.க. கூடாரத்தில் நடப்பதை பார்த்து கீழ்பாக்கம் பக்கம் ஒதுங்காமல் இருந்தால் போதும் என்றாக்கியிருக்கிறது அ.தி.மு.க.வில் நடந்துவரும் கவுண்ட்டவுன் டுவிஸ்ட்!