
பெரும்பான்மையான எம்.எல்.ஏக்கள் எங்கு இருக்கிறார்களோ அங்கு இருப்பேன் எனவும் ஜெயலலிதா ஆட்சி தொடர ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் எனவும் கருணாஸ் எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார்.
இரட்டை இலை விவகாரத்தில் லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் அதிமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சிறைக்கு சென்று வெளியே வந்தார்.
அப்போது கட்சி பணிகளில் மீண்டும் பணியாற்றுவேன் என தெரிவித்தார். ஆனால் அதற்கு எடப்பாடி தலைமையிலான அமைச்சரவை எதிர்ப்பு தெரிவித்தது.
ஏற்கனவே டிடிவி அறிவித்தபடி கட்சியை விட்டு ஒதுங்கி இருக்க வேண்டும் என அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியளித்தார்.
பின்னர், சசிகலாவை சிறையில் சந்தித்து ஆலோசனை நடத்திய பிறகு செய்தியாளர்களை சந்தித்த டிடிவி அதிமுகவில் இருந்து என்னை விலக்க யாருக்கும் உரிமை இல்லை எனவும் இன்னும் 6 மாத காலம் பொறுத்திருந்து பார்த்துவிட்டு என் பணிகளை தொடர்வேன் எனவும் தெரிவித்தார்.
இதையடுத்து, இன்று திடீரென அதிமுகவை சேர்ந்த 27 எம்.எல்.ஏக்கள் நேற்று தினகரனை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
இதனால் கலக்கமடைந்த எடப்பாடி 9 மாவட்ட எம்.எல்.ஏக்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.
தொடர்ந்து இன்று மேலும் 4 எம்.எல்.ஏக்கள் தினகரனை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
இந்நிலையில், திருவாடனை தொகுதி கருணாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
பெரும்பான்மையான எம்.எல்.ஏக்கள் எங்கு இருக்கிறார்களோ அங்கு இருப்பேன்.
ஜெயலலிதா ஆட்சி தொடர ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்.
ஜெயலலிதா திட்டங்களை நிறைவேற்றினால்தான் அவரது ஆன்மா சாந்தி அடையும்.
எம்.எல்.ஏக்கள் முதலமைச்சரை சந்திப்பதை அரசியல் ரீதியாக ஏன் பார்க்க வேண்டும்.
அம்மா ஆசி பெற்ற எம்.எல்.ஏக்கள் எங்கு இருக்கிறார்களோ அங்கு இருப்பேன்.
தற்போது எடப்பாடி தலைமையில் நடைபெற்று வரும் ஆட்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.