
சசிகலா குடும்ப ஆதிக்கம் இல்லாத அதிமுகவே தொண்டர்களுக்கும், கட்சிக்கும் ஏற்றது என்று ஏற்கனவே கூறி வந்த பன்னீர் அணியினர், அதற்காக எடப்பாடி தரப்பினருடன் இணைந்து செயல்படவும் தயாராக இருந்தனர்.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் இந்த தகவல் ஊடகங்களால் பெரிதாக பேசப்பட்டாலும், இது ஒரு கற்பனை என்றே, சிலர் அதை அலட்சியப்படுத்தி கருத்து தெரிவித்து வந்தனர். ஆனால், அந்த கற்பனைதான் இன்று நிஜமாக போகிறது என்கின்றனர் அதிமுகவினர்.
சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி பிடித்த பன்னீர்செல்வம், எடப்பாடி அணியோடு இணைய இரண்டு நிபந்தனைகளை முன்வைத்தார். அதில், சசிகலா குடும்பத்தை சேர்ந்த அனைவரையும் கட்சியை விட்டு நீக்கி அதிகாரபூர்வமாக அறிவிக்க வேண்டும் என்பது முக்கிய கோரிக்கை.
ஆனால், தினகரன் உள்ளிட்ட சசிகலா குடும்பத்தை அரசியலை விட்டு ஒதுக்கி விட்டோம் என்று, அமைச்சர்கள் குழு அறிவித்தது. திகார் சிறைக்கு செல்வதற்கு முன்னால், தினகரனும், அரசியலை விட்டு ஒதுங்கி கொள்வதாக ஊடகங்களில் அறிவித்தார்.
ஆனால், இது சசிகலா குடும்பம் நடத்தும் அரசியல் நாடகம் என்று கூறிய பன்னீர், அந்த அறிவிப்பை அதிகார பூர்வமாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அதனால், அணிகள் இணைப்பு சாத்தியமாகாமல் போனது.
பன்னீர் சொன்னது போலவே, திகார் சிறையில் இருந்து ஜாமினில் வெளிவந்த தினகரன், தன்னை யாரும் கட்சியில் இருந்து நீக்க முடியாது என்றும், அதற்கான அதிகாரம் பொது செயலாளர் ஒருவருக்கு மட்டுமே உள்ளது என்றும் கூறினார்.
மேலும், மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபடப்போவதாக கூறிய தினகரன், எடப்பாடி அணியை சேர்ந்த 31 எம்.எல்.ஏ க்களை தன் பக்கம் இழுத்து, முதல்வர் எடப்பாடிக்கு கடும் நெருக்கடி கொடுத்து வருகிறார்.
இந்நிலையில், அணிகள் இணைப்புக்கு பன்னீர் விதித்த நிபந்தனையில் எந்த வித தவறும் இல்லை என்று உணர்ந்த எடப்பாடி அணியினர், பன்னீர் அணியினருடன் தொடர்ந்து பேசி வருகின்றனர்.
இதை வெளிப்படுத்தும் விதமாக, இன்று மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய, பன்னீர்செல்வம், எங்களால், எடப்பாடி ஆட்சிக்கு எந்த சிக்கலும் வராது என்று கூறி உள்ளார்.
தற்போதைய நிலையில், அதிமுக எம்.எல்.ஏ க்களை பொறுத்த வரை, எஞ்சிய நான்காண்டு காலமும் பதவிக்கு ஆபத்து இல்லாமல், யார் தலைமை ஏற்றாலும், அவர்களுக்கு ஆதரவு அளிக்க தயாராக இருக்கின்றனர்.
மேலும், அதிமுகவின் அனைத்து எம்.எல்.ஏ க்களையும், ஒரே அணியில் திரட்டும் திறன் கொண்ட தலைவர்களும் தற்போது இல்லை. தினகரனுக்கு ஆதரவாக 31 எம்.எல்.ஏ க்கள் இருந்தாலும், இந்த எண்ணிக்கை மேலும் உயர்ந்தாலும், அது எடப்பாடி ஆதரவு எம்.எல்.ஏ க்களின் எண்ணிக்கையை நெருங்க முடியாது. ஏனென்றால், ஆட்சி அவரது கட்டுப்பாட்டில் இருக்கிறது.
அதனால், தினகரன் எதிர்ப்பை சமாளிக்க, பன்னீர் அணியை இணைக்கும் பேச்சுவார்த்தை முக்கிய தலைவர்கள் இடையே நடந்து வருகிறது. அப்படி, பன்னீர் அணி, எடப்பாடி அணியுடன் இணையும் பட்சத்தில், இரட்டை இலை சின்னத்தை எளிதாக பெற முடியும். இனி வரும் தேர்தல்களையும் தைரியமாக எதிர்கொள்ள முடியும்.
ஆகவே, தினகரன் உள்ளிட்ட சசிகலா குடும்பத்தை, கட்சியை விட்டு அதிகாரபூர்வமாக ஒதுக்கிவிட்டால், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ க்களும் வேறு வழியின்றி எடப்பாடியையே ஆதரிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படும்.
இந்நிலையில், சசிகலா குடும்பம் இல்லாத அதிமுகவை வென்றெடுக்கும் நோக்கில், இரு அணி தலைவர்களும் தொடர்ந்து பேசிக்கொண்டு இருப்பதால், எடப்பாடியும், பன்னீரும் விரைவில் கை கோர்ப்பார்கள் என்று அதிமுகவின் முக்கிய பிரமுகர்கள் சிலர் கூறுகின்றனர்.