தனிக்கட்சி.. 234 தொகுதிகளிலும் போட்டி!! அரசியல்வாதிகளை அலறவிட்ட ரஜினிகாந்த்..!

Asianet News Tamil  
Published : Dec 31, 2017, 10:38 AM ISTUpdated : Sep 19, 2018, 01:45 AM IST
தனிக்கட்சி.. 234 தொகுதிகளிலும் போட்டி!! அரசியல்வாதிகளை அலறவிட்ட ரஜினிகாந்த்..!

சுருக்கம்

rajinikanth political entry

தனிக்கட்சி தொடங்கி, அடுத்துவரும் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனது கட்சி தனித்து போட்டியிடும் என ரஜினிகாந்த் அறிவித்திருப்பது தமிழகத்தின் பிரதான அரசியல் கட்சிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

1996லிருந்து ரஜினியின் அரசியல் பிரவேசத்தை அவரது ரசிகர்கள் எதிர்நோக்கி காத்திருந்தனர். ஆனால் தனது அரசியல் பிரவேசம் தொடர்பான எந்தவிதமான அறிவிப்பையும் ரஜினி வெளியிடாமல் இருந்துவந்தார். 

ஜெயலலிதாவின் மறைவு, கருணாநிதியின் ஓய்வு என தமிழக அரசியலில் கோலோச்சிவந்த இருபெரும் தலைவர்களின் இடம் வெற்றிடமாக உள்ளது என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்தனர். ஆனால் அதுபோன்ற வெற்றிடம் எதுவும் இல்லை என அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்தனர். ஆனால், இந்த அரசியல் வெற்றிடத்தை நிரப்பும் வகையில் ரஜினி மற்றும் கமலின் அரசியல் பிரவேசங்கள் பேசப்பட்டன. தனிக்கட்சி தொடங்கி அரசியலில் ஈடுபடுவேன் என கமல் அறிவித்து விட்ட நிலையில், ரஜினியின் நிலைப்பாடு குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்தது.

இந்நிலையில், இன்று தனது அரசியல் பிரவேசத்தை அதிகாரப்பூர்வமாக ரஜினி அறிவித்துவிட்டார். அரசியல் பிரவேசம் குறித்து பேசிய ரஜினிகாந்த், நான் எல்லாம் பண்ணிட்டேன். இனி அம்பு விடுறதுதான் பாக்கி. அரசியலுக்கு வருவது உறுதி. இது காலத்தின் கட்டாயம். தனிக்கட்சி தொடங்கி, அடுத்துவரும் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவோம். உள்ளாட்சி தேர்தல் விரைவில் வந்துவிடும் என்பதால் அதில் நிற்கபோவதில்லை. அரசியலுக்கு பணத்துக்காக, புகழுக்காக வரப் போவதில்லை. பதவிக்காக என்றால் 1996லேயே வந்திருப்பேன். 45 வயதிலேயே எனக்கு பதவி ஆசை வரவில்லை. 68 வயதில் பதவி ஆசை வருமா? அப்படி வந்தால் நான் ஆன்மீகவாதி என்று சொல்வதற்கே தகுதியற்றவன் ஆகிவிடுவேன்.

அரசியல் ரொம்ப கெட்டுப்போய்விட்டது. ஜனநாயகம் சீர்கெட்டுப் போய்விட்டது. தமிழகத்தில் கடந்த ஓராண்டாக நடந்த அரசியல் சம்பவங்கள் ஒவ்வொரு தமிழனையும் தலைகுனிய வைத்துவிட்டது.  மற்ற மாநில மக்கள் நம்மைப் பார்த்து சிரிக்கிறார்கள். இந்த நேரத்திலும் கூட என்னை வாழவைத்த தமிழக மக்களுக்கு ஜனநாயக ரீதியில் நான் நன்மை செய்யவில்லை என்றால், அந்த குற்ற உணர்ச்சி சாகும்வரை இருக்கும்.

சாதி,மத, பேதமற்ற ஆன்மிக அரசியல் செய்வதே என் இலக்கு. இது சாதாரண விஷயமில்லை. ஒரு கட்சி ஆரம்பித்து தேர்தலில் நின்று ஆட்சி அமைப்பது சாதாரணம் இல்லை என்பது எனக்குத் தெரியும். கடவுள் அருள், மக்கள் ஆதரவு இரண்டும் எனக்கு கிடைக்கும் என்ற முழு நம்பிக்கை இருக்கிறது. எனக்குத் தொண்டர்கள் வேண்டாம், காவலர்கள் வேண்டும். காவலர்களைக் கண்காணிக்கும் பிரதிநிதிதான் நான். சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பு கட்சி ஆரம்பித்து செயல்திட்டங்கள் வகுப்போம். சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் மூன்று ஆண்டுகளில் பதவி விலகுவோம் என ரஜினி பேசினார்.

ரஜினியின் அரசியல் அறிவிப்பு பிரதான கட்சிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவே அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இதுவரை மற்ற கட்சிகளுக்கு வாக்களித்துவந்த ரஜினி ரசிகர்களின் வாக்குகள் சிதறும். அது, மற்ற கட்சிகளுக்கு பின்னடைவாகவே இருக்கும் என்பதால் பிரதான கட்சியினர் கலக்கத்தில் உள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
 

PREV
click me!

Recommended Stories

தவெக-வில் நடிகர் கவுண்டமணி..? ஐயோ ராமா... விஜய்க்காக இந்த முடிவை எடுத்தாரா..?
ஓபன் சேலஞ்ஜ்-க்கு தயார்..! என்னோடு நீங்கள் நேருக்கு நேர் மேடை ஏறத் தயாரா? ஸ்டாலினுக்கு இபிஎஸ் சவால்..!