தங்கமலை ரகசியம், சிதம்பர ரகசியம்!...எல்லாம் உடைபட்டது போல் இன்று ரஜினியின் அரசியல் ரகசியமும் உடைபட்டுவிட்டது.
”நான் அரசியலுக்கு வருவது உறுதி. தனி கட்சி துவங்கி எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவோம்.” என்று நெத்தியடியாய் அறிவித்துவிட்டார் ரஜினி.
இதுவரையில் அரசியல் பற்றிய தனது பூடக அறிவிப்புகளை அறிக்கை வாயிலாகவும், வேறு ஒரு பெரிய மனிதர் சம்பந்தப்பட்ட விழா மேடையிலுமே பேசி வந்த ரஜினி இன்று ‘நான் கட்சி துவங்கப்போகிறேன்’ என்பதை தனது சொந்த மண்டபத்தில், தனது ரசிகர்கள் முன்னிலையில் அறிவித்திருக்கிறார்.
ரஜினியின் வருகைக்காகவும், அறிவிப்புக்காகவும் அதிகாலையிலிருந்தே மண்டபத்தில் காத்திருந்தனர் ரசிகர்கள். அவர்கள் எதிர்பார்த்தபடியே வந்தார், அரசியல் பிரவேசத்தை அறிவித்திருக்கிறார்.
எப்போதும் வெள்ளை குர்தாவில் வலம் வரும் ரஜினி போட்டோ ஷூட்டில் பெரும்பாலும் டீஷர்ட்டில் இருந்தார். ஆனால் இன்று தனது டிரேட் மார்க் வெள்ளை குர்தாவில் மேடையில் நின்றார்.
அரசியல் அறிவிப்பை வெளியிடுகையில், ஒவ்வொரு முக்கிய பாயிண்டுக்கும் சினிமா ஸ்டைலில் பின் தலை முடியை கோதிவிட்டு கெத்து காட்டினார். ’அரசியலுக்கு வருவது உறுதி’ என்று சொன்னதும் ஆரவாரித்த ரசிகர்களை வெகு நேரம் ஆட விட்டு சந்தோஷப்பட்டார். ’என்னா? ஹ்ஹாஹாஹா!’ என தனது டிரேட் மார்க் சிரிப்புகளையும், பஞ்ச் வார்த்தைகளையும் பேசி ரசிகர்களை இன்ச் ப இன்ச் ஆக உசுப்பேற்றினார்.
இதையெல்லாம் தாண்டி ‘பாபா’ முத்திரையை காட்டி அவர்களை மிகப்பெரும் உற்சாகத்தில் மூழ்கடித்தார்.
ரஜினியை அவர்து ரசிகர்கள் ‘ஆண்டவன்’ என்பார்கள். ஆக மொத்தத்தில் ஆண்டவன் ஆட்டம் ஆரம்பமாகிவிட்டதா!