
சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடிகர் ரஜினிகாந்த் இன்று காலை 6வது நாளாக தனது ரசிகர்களை சந்தித்து வருகிறார். இந்த ரசிகர் சந்திப்பின் கடைசி நாள் இது. இன்றைய தினத்தில் தனது அரசியல் நிலைப்பாட்டை அவசியம் அறிவிக்கிறேன் என்று கூறியிருந்தார் ரஜினி காந்த். அதன்படி இன்று காலை பெரும் எதிர்பார்ப்புகளுடன் திருமண மண்டபத்தில் கூடியிருந்த ரசிகர்கள் மத்தியில் முதலில் பேசினார். ரஜினி அறிவிக்கப் போகும் அந்த அரசியல் முடிவுக்காகக் காத்திருந்த ரசிகர்களை ரஜினி ஏமாற்றவில்லை.
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், இன்று அரசியலுக்கு வருவது உறுதி... என்று அறிவித்தார் ரஜினி. மேலும், தனிக்கட்சிதான்... என்று அறிவித்தார். மேலும், அரசியலுக்கு வருவது உறுதி, இது காலத்தின் கட்டாயம்.
வரப்போகும் சட்டமன்ற தேர்தலில் நான் தனிக்கட்சி ஆரம்பித்து 234 தொகுதிகளிலும் போட்டியிடுவேன். வரும் உள்ளாட்சி தேர்தலுக்கு நேரமில்லாததால் போட்டியில்லை என்று அறிவித்தார் ரஜினி.
தனக்கு ஊடகங்களைப் பார்த்துதான் பயம் என்று வெளிப்படையாகத் தெரிவித்தார் ரஜினி. அவர் பேசியபோது, ஊடகங்களைப் பார்த்து பெரிய பெரிய ஜாம்பவன்களெல்லாம் பயப்படுறாங்க. திணறுறாங்க. நான் குழந்தை. நான் எம்மாத்திரம்? என்று கூறிய ரஜினி, டக்குனு மைக்க நீட்டி கேக்கறாங்க. நான் எதாவது சொல்ல அது பெரிய டிபேட் ஆகிடும்...என்று கூறிய ரஜினி, இப்படித்தான் முந்தா நாள் நான் கார்ல ஏறப்போகும்போது, திடீர்னு மைக்க உட்டு, சார் உங்க கொள்கைகள் என்ன அப்டின்னு கேக்கறாங்க. என்ன கொள்கைகளா? 2 நிமிசம் எனக்கு தலை சுத்திடுச்சி... சின்னப் பசங்க.. வெரி நைஸ்.. வெரி நைஸ் என்று நகைச்சுவையுடன் கூறிய ரஜினி, தான் அரசியல் விமர்சகரும் துக்ளக் ஆசிரியருமான சோ ராமசாமியை ரொம்பவே மிஸ் பண்ணுவதாகப் பேச்சினூடே குறிப்பிட்டார்.
அப்போது அவர், சோ... சார் பயமுறுத்தி வைத்திருந்தார்...மீடியா கிட்ட ரொம்ப ஜாக்கிரதையா இருங்க.. என்று சொல்லி வைத்திருந்தார். அவரை ரொம்பவே மிஸ் பண்றேன்..அவர் இருந்தா பத்து யானை பலம் எனக்கு இருக்கும்.. இருந்தாலும், அவர் ஆன்மா என்றைக்கும் எனக்கு பக்க பலமா இருக்கும்... என்று கண்கலங்கினார் ரஜினி காந்த்..