
நடிகர் ரஜினி காந்துக்கு அரசியல் சரிப்பட்டு வராது என்று கூறியிருக்கிறார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கோட்டைப்பட்டியில் செய்தியாளர்களைச் சந்தித்தார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. அப்போது அவர், “பாஜக., வுடன் அதிமுக.,, கூட்டணி வைப்பதற்கு வாய்ப்பு உண்டு” என்று கூறினார்.
பாஜக.,வுடன் கூட்டணி வைக்க வாய்ப்பு உண்டு என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியதன் பின்னணியில், செல்லூர் ராஜுவின் கருத்து இருப்பதாகக் கூறப்படுகிறது. முன்னதாக அமைச்சர் செல்லூர் ராஜு, அதிமுக., பாஜக., கூட்டணிக்கு வாய்ப்பு இல்லை என்று கூறியிருந்தார்.
மேலும் அவர், ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து கருத்துகளைத் தெரிவித்தார். அப்போது, ரஜினி அரசியலுக்கு சரிப்பட்டு வரமாட்டார். அவரது வயதுக்கும் குணத்துக்கும் ரஜினிக்கு அரசியல் சரிப்பட்டு வராது. அவர் ஒரு வெகுளி. அரசியலுக்கு வருவதென்றால், அரசியல் சித்து விளையாட்டுகள் அதிகம் தெரிந்திருக்க வேண்டும். அது ரஜினிக்கு இல்லை என்று கூறினார் ராஜேந்திர பாலாஜி.
89 எம்.எல்.ஏ.,க்கள் உள்ள திமுக.,வே, அதிமுக.,வுக்கு சவாலாக இல்லாத போது, டிடிவி தினகரன் எப்படி சவாலாக இருப்பார் என்று கேள்வி எழுப்பினார் ராஜேந்திர பாலாஜி.