
தேனி
தன்னை பச்சைத் தமிழர் என்று கூறிக் கொள்ளும் ரஜினிகாந்த் ஒரு இனத் துரோகி என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டினார்.
தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி சார்பில் கண்ணகி பெருவிழா பொதுக்கூட்டம் நடந்தது.
இந்தக் கூட்டத்தில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று பேசினார். அவர் பேசியது: "வீரப்பன் இருந்திருந்தால் காவிரி பிரச்சனை இந்த அளவுக்கு வந்து இருக்காது.
வாட்டாள் நாகராஜ் வாய் திறக்க மாட்டார். யானை தந்தம் கடத்தியதாக சொல்லப்பட்ட வழக்கில் வீரப்பனை சமீபத்தில் நீதிமன்றம் விடுதலை செய்தது. மரணத்திற்கு பிறகும் நிரபராதி என்று நிரூபிக்கப்பட்டவர் வீரப்பன். ஆனால், ஜெயலலிதா இறந்த பின்னும் குற்றவாளி தான்.
இயற்கையோடு இணைந்து, இசைந்து வணங்குவது தமிழர் வழிபாடு. அதைதான் நாம் தமிழர் கட்சி கையில் எடுத்துள்ளது. நாம் தமிழர் கட்சி சாதி, மதத்தை பார்க்காது. உலகில் முதலில் தோன்றியது மொழி தான். அதனால் தான், மொழியை தூக்கிப் பிடிக்கிறோம்.
வியர்க்காமல் விளையாட முடியாது. விமர்சனம் இல்லாமல் வளர முடியாது. ஒருநாள் நாம் தமிழர் கட்சியினர் நாடாளுமன்ற உறுப்பினராகி நாடாளுமன்றத்துக்குள் வருவர். அப்போது, பிரபாகரனின் படத்தை பச்சைக் குத்திக் கொண்டு வருவார்கள்.
யாரை தடை செய்தீர்களோ, அதே தலைவனின் படத்தை பச்சைக் குத்திக் கொண்டு வரும் காலம் வரும். அதேபோல், சட்டமன்றத்துக்குள் நானும் பிரபாகரன் படத்தை பச்சைக் குத்திக்கொண்டு வரும் காலம் வரும்.
தமிழகத்தை மத்திய அரசு இராணுவ மயமாக்கிக் கொண்டு வருகிறது. ஒரு போதும் இதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.
தமிழ்நாட்டை தமிழர் ஆளவேண்டும் என்பது தான் தமிழ்தேசியம். எச்.ராஜா, இந்து தான் தமிழ் என்கிறார். அப்படி என்றால் அமித்ஷா தமிழரா? ரஜினிகாந்த் தன்னை பச்சைத் தமிழர் என்கிறார். அவர் ஒரு இனத் துரோகி.
நீங்கள் இனம் மாறுவது, எங்களோடு வாழ்வதற்கா? எங்களை ஆள்வதற்கா? என்னை எந்த நாட்டில் கேட்டாலும் தமிழன் என்றே சொல்லுவேன்" என்று அவர் பேசினார்.