
அனைத்திற்கும் போராட்டம் நடத்தினால் தமிழ்நாடே சுடுகாடாகிவிடும் என ரஜினிகாந்த் கோபத்துடன் தெரிவித்தார்.
ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தின்போது நடந்த வன்முறையில், போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய ரஜினிகாந்த், ஸ்டெர்லைட் போராட்டத்தில் சமூக விரோதிகள் புகுந்து வன்முறையை கட்டவிழ்த்து விட்டதாக தூத்துக்குடியில் பேட்டியளித்தார்.
ரஜினியின் கருத்துக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், தமிமுன் அன்சாரி, திருமாவளவன் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர்.
தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு திரும்பிய ரஜினி, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் அவரது கருத்துக்கு எழுந்த எதிர்ப்புகள் குறித்தும், சமூக விரோதிகள் நுழைந்ததாக எப்படி கூறினீர்கள் என்றும் கேள்வி எழுப்பப்பட்டது.
அப்போது கடுமையாக கோபமடைந்த ரஜினிகாந்த், மெரினா போராட்டத்தில் கடைசி நேரத்தில் சமூக விரோதிகள் வன்முறையை கட்டவிழ்த்துவிட்டது போன்றே இந்த போராட்டத்திலும் செய்திருக்கிறார்கள். அவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோபமாக வலியுறுத்தினார். மேலும் போலீஸை சமூக விரோதிகள் தாக்கியதுதான் வன்முறைக்கு வித்திட்டது என்றும் அனைத்திற்கும் போராட்டம் என்று கிளம்பிவிட்டால் தமிழ்நாடு சுடுகாடு ஆகிவிடும் என்றும் கோபமாக தெரிவித்துவிட்டு கிளம்பிவிட்டார்.