எடப்பாடி அமைச்சரவையில் கைவைக்கும் ரஜினி: அப்செட் செங்கோட்டையன், அப்ரூவர் ஆகிறாரா?

By Vishnu PriyaFirst Published Dec 23, 2019, 7:03 PM IST
Highlights

புலி வந்தேவிடும் போலத்தான் தெரிகிறது. ஆம்! ரஜினிகாந்த் நிச்சயம் கட்சி ஆரம்பித்துவிடுவார்தான்!என்கிறார்கள், அவருக்கு மிக நெருக்கமான மனிதர்கள். சட்டமன்ற தேர்தலுக்கான வெளிப்படையான அரசியல் வேலைகள் துவங்க இன்னும் அதிகபட்சம் ஒரு வருடம்தான் இருக்கிறது. ஆனால் குறைந்தது இன்னும் மூன்று மாதங்களுக்காவது ரஜினி தீவிர படப்பிடிப்பில் இருந்தாக வேண்டும். 
 

புலி வந்தேவிடும் போலத்தான் தெரிகிறது. ஆம்! ரஜினிகாந்த் நிச்சயம் கட்சி ஆரம்பித்துவிடுவார்தான்!என்கிறார்கள், அவருக்கு மிக நெருக்கமான மனிதர்கள். சட்டமன்ற தேர்தலுக்கான வெளிப்படையான அரசியல் வேலைகள் துவங்க இன்னும் அதிகபட்சம் ஒரு வருடம்தான் இருக்கிறது. ஆனால் குறைந்தது இன்னும் மூன்று மாதங்களுக்காவது ரஜினி தீவிர படப்பிடிப்பில் இருந்தாக வேண்டும். 

அவரது அண்ணன் சத்யநாராயணா சொன்னது போல் மார்ச் அல்லது ஏப்ரல் வாக்கில் ரஜினி கட்சி துவக்குவார்! என தெரிகிறது. இதை தொட்டுப் பேசும் அரசியல் பார்வையாளர்கள்...ஆனால் வெறுமனே கட்சியை துவக்கிவிட்டு அதன் பின் நிர்வாகிகள் நியமன வேலைகளில் இறங்காமல், கட்சியின் முக்கிய நிர்வாகத்தில் துவங்கி அத்தனை அணிகளையும் அமைத்து அவற்றுக்கு அத்தனை நிர்வாகிகளையும் அமைத்துவிட்டு இறுதி வேலையாக கட்சியை துவக்கி, அதன் பெயரினை அறிவிக்கும் பணியினை செய்வார்! என்கிறார்கள். ரஜினியின் தொழில் பாஷையில் சொல்வதென்றால் ‘முழு ஷூட்டிங் மற்றும் போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகளை முடித்துவிட்டு, ரிலீஸுக்கு ரெடியாக்கிய நிலையில் படத்தினை பற்றிய அறிவிப்பையும், அதன் டைட்டிலையும் வெளியிடுவது போல் இது!’ என்கிறார்கள். 

இதை உறுதிப்படுத்தும் விதமாகத்தான் ரஜினியின் மிக முக்கிய அரசியல் ஆலோசகரான தமிழருவி மணியனும் ‘ரஜினிகாந்த் அரசியலுக்குள் வந்து, கட்சியை துவக்குவது உறுதி. அடிப்படை உள்ளிட்ட அத்தனை அமைப்புப் பணிகளும் நடந்து கொண்டிருக்கின்றன.’ என்று திரும்பத் திரும்ப சொல்கிறார். 

என்னதான் ரஜினி சினிமாவில் பிஸியாக இருந்தாலும் கூட, அவருக்காக அரசியல் பணிகள் செய்யும் நபர்கள் மிக மும்முரமாக கட்சியின் அமைப்புப் பணிகளை செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்! என்கிறார்கள் . அதிலும் சமுதாயத்தில் நற்பெயரை சம்பாதித்திருக்கிற ஆனால் அரசியல் வாடையற்ற நபர்களை தங்கள் கட்சிக்குள் அழைக்கின்றனர், மேலும் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.வில் புகழுடன் இருக்கிற ஆனால் ஓரளவு கை சுத்தமான மனிதர்களையும் தங்கள் பக்கம் இழுக்கின்றனர்! என்கிறார்கள். 

அந்த வகையில் அ.தி.மு.க.விலிருந்து அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனுக்கு ரஜினி தரப்பு குறிவைத்து, இழுத்துக் கொண்டிருக்கிறது என்று ஒரு தகவல் கடந்த ஒரு வாரமாக பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. போயஸ் பக்கம், ராகவேந்திரா கல்யாண மண்டபம் சைடு மட்டுமில்லாமல் அ.தி.மு.க.வின் தலைமை நிலையத்திலும் இந்த தகவல் பெரும் பரபரப்பாக பேசப்படுகிறது. 

இது உண்மையா? இதற்கு வாய்ப்புள்ளதா? ஏன் செங்கோட்டையன்? எனும் கேள்விகளுடன் சில அரசியல் விமர்சகர்களுடன் பேசியபோதுய்....
“அரசியலில் எதுவும் சாத்தியமே. போகும் போக்கைப் பார்த்தால் அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் இணைந்தாலும் ஆச்சரியமில்லை! ஸ்டாலினுடன் சசிகலா இணைந்து அரசியல் செய்தாலும் அதிசயமில்லை! என்பதுதான் தமிழக அரசியலின் தற்போதைய நிலை. 

அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனை ரஜினி தரப்பு இழுக்கப் பார்க்கிறது! எனும் தகவல் சில நாட்களாக ஓடுவது உண்மைதான். எடப்பாடியார் அமைச்சரவையில் கே.ஏ.செங்கோட்டையன் தனி ஆவர்த்தனம் பண்ணிக் கொண்டிருக்கிறார். சொல்லப்போனால் அவரது துறையான  பள்ளிக் கல்வித்துறை இந்த அமைச்சரவையின் ஒரு அங்கமாகவே தெரியவில்லை. தனக்கென்று தனி ராஜாங்கம், நினைத்தபடி அறிவிப்புகள், திட்டங்கள் என்று அவரது ரூட் போகிறது. 

எம்.ஜி.ஆர். காலத்திலிருந்தே அ.தி.மு.க.வில் இருப்பவர், அவர் அமைச்சரவையில் மட்டுமில்லாது ஜெயலலிதாவின் காலத்திலும் அமைச்சராக இருந்தவர், கொங்கு மண்டலத்தில் பெரும் செல்வாக்கு வைத்திருப்பவர், கோபிசெட்டிப்பாளையம் எம்.எல்.ஏ.வாக தொடர்ந்து கொடி நாட்டிக் கொண்டிருப்பவர், கவுண்டர் சமுதாயம் தாண்டி பரவலாக எல்லா சாதியினரிடமும் எல்லா மாவட்டத்திலும் செல்வாக்கு உடையவர், அரசியலின் அத்தனை நெளிவு சுளிவையும் தெரிந்தவர், மக்களை எப்படி கவர வேண்டும் எனும் சூட்சமம் புரிந்தவர், ஊழல் குற்றச்சாட்டு! ரெய்டு! என்று சர்ச்சைகளிலும் லேசாக கால் நனைத்தவர்...என்று செங்கோட்டையனின் அரசியல் ப்ரொஃபைலானது முழுமையான ஒன்று. 

ஆனானப்பட்ட ஜெயலலிதாவே என்னதான் செங்கோட்டையனை அடிக்கடி ஒதுக்கி வைத்தாலும், தேர்தல் என்று ஒன்று வந்துவிட்டால் உடனே அவரை கட்சியின் முக்கிய நிலைக்கு கொண்டு வந்துவிடுவார். காரணம், ஜெயலலிதாவின் பிரசாரத்துக்கு மேப் போடுவதில் துவங்கி ம.நடராஜன் திரைமறைவில் தயாரித்துக் கொடுத்த தேர்தல் அறிக்கையில் திருத்தம் போடுவது வரை செங்கோட்டையன் எல்லா விதத்திலும் ஆளுமையான மனிதர். அதனால்தான் செங்கோட்டையனை ஜெயலலிதாவின் சாரதி! என்பார்கள் அக்கட்சியினர். 

இதையெல்லாம் ரஜினிகாந்த் தெளிவாக புரிந்து வைத்து, செங்கோட்டையனை பற்றி மிக துல்லியமாக தெரிந்து வைத்துவிட்டு, ’அதிகம் ஊழல் புகாரில் சிக்காதவர், ஆனால் அவர் மீது சர்ச்சை உண்டு’ என்பதை தெரிந்து கொண்ட பின்னரே அவரை இழுக்கும் ப்ராஜெக்டுக்கு பச்சைக் கொடி ஆட்டியிருக்கிறார்! 

என்னதான் ரஜினி இழுத்தாலும் செங்கோட்டையன் வந்துவிடுவாரா? ஜெ., எவ்வளவு ஒதுக்கிவைத்து அசிங்கப்படுத்தியபோது கருணாநிதி அழைத்தும் போகாத விசுவாசியாச்சே அவர்! என்கின்றனர் சிலர். அவர் அ.தி.மு.க.வின் கண்மூடித்தனமான விசுவாசிதான். ஆனால் அ.தி.மு.க.வின் அடித்தளம், அடையாளம், அதிகாரமுமான எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா இருவருக்கும்தான் அவர் விசுவாசியே தவிர எடப்பாடியோ, பன்னீரோ அவரது லிஸ்ட்டிலேயே இல்லை. அதனால் அவர் ரஜினியின் அழைப்பை ஏற்கவே மாட்டார் என சொல்லிவிட முடியாது. 

ஜெயலலிதா இருந்தபோது அவரை அமைச்சரவையிலிருந்து நீக்க வைத்ததோடு, மீண்டும் அவர் உள்ளே நுழையாதபடி பார்த்துக் கொண்டது சசியின் கைவண்ணமே. ஜெ., இறந்த பின் செங்கோட்டையனை மந்திரியாக்கினர். காரணம், அவர் மீதான பயம். செங்கோட்டையனுக்கு அ.தி.மு.க.வில் பெரும் செல்வாக்கு உள்ளது. அவர் நினைத்தால் கட்சியை அன்று உடைத்து, தனி அணி அமைத்திருக்க முடியும். அந்த அணி பன்னீர் மற்றும் தினகரன் அணிகள் போல் இல்லாமல் மிக மிக வலுவாக இருந்திருக்கும். அ.தி.மு.க.வை தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கும், அக்கட்சியை மீளும் ஆள வைத்திருகும் கொங்கு மண்டல அ.தி.மு.க. அவர் பின்னே சென்றிருக்கும், அன்றே ஆட்சியும் கவிழ்ந்திருந்தாலும் ஆச்சரியமில்லை. அந்த பயத்தில்தான் அவரை மீண்டும் அமைச்சரவையில்  இணைத்தார் சசி. 

ஆனால் தான் சிறை செல்லும் நிலையில் செங்கோட்டையனை முதல்வராக்காமல் எடப்பாடியை ஆக்கினார். காரணம், செங்கோட்டையனிடம் பொறுப்பை கொடுத்தால் தான் திரும்பி வரும்போது எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா கலந்த கலவையாக அவர் மாறி நிற்பார் என்ற பயமே. அதனால்தான் பவ்யமான எடப்பாடியாரிடம் கொடுத்தார், ஆனால் எடப்பாடியாரும் பாதி பயத்தை காட்டிக் கொண்டிருக்கிறார் என்பது தனிக்கதை. 

ஆக்சுவலாக செங்கோட்டையனைத்தான் முதல்வர் பதவியில் சசி அமர்த்துவார், அமர்த்த வேண்டும் என கட்சியினர் நினைத்தனர். ஆனால் சசி செய்யவில்லை. எடப்பாடியை விட எல்லா விஷயத்திலும் சீனியராக இருந்தும் கூட முதல்வர் பதவி தனக்கு  தரப்படாததில் செங்கோட்டையன் பெரிதும் அப்செட் ஆனார். இருந்தாலும்  தனது துறையை வைத்துக் கொண்டு தனி ராஜ்ஜியம் நடத்துகிறார். அவர் விஷயத்தில் எடப்பாடியார் தலையிடுவதுமில்லை, கேள்வி கேட்பதுமில்லை. முழு சுதந்திரமாக அவரை அவர் எல்லைக்குள் ஆள விட்டிருக்கிறார் இ.பி.எஸ். இருந்தாலும் செங்கோட்டையனுக்கு அப்செட் மன நிலை, கல்வெட்டாய் பதிந்துவிடுட்டது. 

அதேபோல் மோடிக்கு மடங்கிப் போகாத அமைச்சர் செங்கோட்டையன். ஒன்றரை வருடத்துக்கு முன் பொள்ளாச்சியில் நடந்த கல்லூரி விழாவில் ‘குஜராத் தான் இந்தியாவிலேயே தொழில் வளத்தில் முன்னணி மாநிலம்’ என்று உருவாக்கப்பட்ட கான்செப்ட்டை இடித்துப் பேசினார் வெளிப்படையாக. இது டெல்லி வரை சென்று, கேள்விகள் எழுந்தபோதும் அவர் கவலைப்படவில்லை. துணிந்து அடிக்கக்கூடிய திராணியுள்ள  அரசியல்வாதி. 

ஆக இவ்வளவு பக்கா ப்ரொஃபைலை வைத்திருப்பதால்தான் ரஜினி இவரை தன் கட்சிக்கு எதிர்பார்க்கிறார். என்னதான் திராவிட இயக்கத்தை அடிப்படையாக கொண்ட அ.தி.மு.க.வில் இருந்தாலும் கூட செங்கோட்டையன் ஆன்மிக பிரியர்தான். எனவே அந்த விஷயத்திலும் ரஜினிக்கு அவர் ஓ.கே.தான்.

ரஜினியை ஏற்றுக்கொண்டு, அவர் கட்சி துவங்கியதும் செங்கோட்டையன் அவர் பக்கம் இணைந்தால், அவருக்கு மிகப்பெரிய மரியாதை தந்துவிட ரஜினி தயங்க மாட்டார். செங்கோட்டையனும் தன் முதல் அரசியல் அறிவையும், சூட்சமங்களையும், சாதக பாதகங்களையும் ரஜினிக்கு விளக்கி ஒரு அரசியல் அப்ரூவராகிடுவார்!” என்கிறார்கள். 

இதெல்லாம் நடக்குமா?

click me!