காய் நகர்த்தும் தமிழருவி..! மறுபடியும் ரஜினி..! போயஸ் கார்டனில் நடப்பது என்ன?

By Selva KathirFirst Published Feb 3, 2021, 9:20 AM IST
Highlights

உடல் நிலையை காரணம் காட்டி அரசியலுக்கு குட் பை சொன்ன ரஜினி, தன்னை மறுபடியும் அரசியலுக்கு அழைத்து வேதனை அடைய வைக்க வேண்டாம் என்று அறிக்கை வெளியிட்ட பிறகும் அர்ஜூன மூர்த்தியை தொடர்ந்து தமிழருவி மணியனும் சில காய் நகர்த்தல்களை மேற்கொண்டு வருகின்றனர்.
 

உடல் நிலையை காரணம் காட்டி அரசியலுக்கு குட் பை சொன்ன ரஜினி, தன்னை மறுபடியும் அரசியலுக்கு அழைத்து வேதனை அடைய வைக்க வேண்டாம் என்று அறிக்கை வெளியிட்ட பிறகும் அர்ஜூன மூர்த்தியை தொடர்ந்து தமிழருவி மணியனும் சில காய் நகர்த்தல்களை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த சில நாட்களாகவே ரஜினி ரசிகர்களை வரிசையாக திமுகவில் சென்று இணைந்து வருகின்றனர். மாவட்டச் செயலாளர்கள் முதல் மகளிர் அணி நிர்வாகிகள் வரை ரஜினி மக்கள் மன்றத்தை சேர்ந்தவர்கள் அடுத்தடுத்து திமுக தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வருகின்றனர். ஏற்கனவே திமுகவில் இணைந்தவர்கள் தற்போது ரஜினி மன்றத்தில் உள்ளவர்களை தொடர்பு கொண்டு கட்சி மாறுமாறு பேரம் பேச ஆரம்பித்துள்ளனர். பேரம் படிய படிய ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் கூடாரத்தை காலி செய்ய ஆரம்பித்துள்ளனர்.

முன்னதாக ரஜினியே விரும்பும் ரசிகர்கள் வேறு கட்சிகளில் சேர்ந்து கொள்ளலாம் என்று அறிக்கை வெளியிட்டிருந்தார். ஆனால் அவர் எதிர்பார்த்ததை விட அதிக அளவில் ரசிகர்கள் வேறு கட்சிகளுக்கு சென்று கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் தான் கடந்த வாரம் செய்தியாளர்களை சந்தித்த அர்ஜூனமூர்த்தி தனியாக கட்சி துவங்க உள்ளதாக அறிவித்தார். அத்தோடு ரஜினி ரசிகர்கள் பலரும் தன்னோடு தொடர்பில் இருப்பதாகவும் அவர் கூறியிருந்தார். அர்ஜூனமூர்த்தி ஆரம்பிக்க உள்ள கட்சி பெரும்பாலும் ரஜினி ரசிகர்களை நம்பியே இருக்கப்போகிறது என்கிற தகவல்களும் வெளியாகி வருகின்றன.

இந்த நிலையில் திடீரென தமிழருவி மணியன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். ரஜினி அரசியலுக்கு முழுக்கு போட்ட நிலையில் இனி தானும் அரசியலில் ஈடுபடப்போவதில்லை என்று அவர் தெரிவித்திருந்தார். ஆனால் நேற்றைய அறிக்கையில் ரஜினி இனி அரசியலுக்கே வரப்போவதில்லை என்று கூறவில்லை எனவே அவர் அரசியலுக்கு வரும் போது அவருடன் இணைந்து காந்திய மக்கள் இயக்கம் செயல்படும் என்று தமிழருவி கூறியுள்ளார். அத்தோடு ரஜினி ரசிகர்கள் புத்திசாலிகள் அவர்கள் எந்த தவறான முடிவையும் எடுக்கமாட்டார்கள் என்று வேறு பூடாகமாக பேசியுள்ளார்.

இதன் மூலம் ரஜினி ரசிகர்களுக்கு புதிய நம்பிக்கை பிறந்துள்ளது. அப்படி என்றால் விரைவிலோ அல்லது தேர்தல் நேரத்திலோ ரஜினி அரசியல் ரீதியாக ஏதேனும் முடிவு எடுக்கக்கூடும் என்று அவர்கள் பேச ஆரம்பித்துள்ளனர். மேலும் பலரோ தமிழருவி மணியனை தொடர்பு கொண்டு இது குறித்து கேட்டு வருகின்றனர். அதற்கு வழக்கம் போல் பொருத்திருந்து பாருங்கள் என்று ரஜினி ரசிகர்களுக்கு தமிழருவி மணியன் புதிர் போட்டு வருகிறார். தன்னை மறுபடியும் அரசியலுக்கு அழைத்து வேதனை அடைய வைக்க வேண்டாம் என்று ரஜினி ஏற்கனவே திட்டவட்டமாக கூறிவிட்டார்.

இந்த சூழலில் ஒரு பக்கம் அர்ஜூன மூர்த்தியும் மறுபக்கம் தமிருவி மணியனும் ரஜினியை மையமாக வைத்து அரசியல் நடவடிக்கையை தொடங்கியுள்ளனர். இதற்கு காரணம் இவர்கள் இருவருமே ரஜினியை நம்பி அரசியல் களத்தில் தங்கள் பிடிமானத்தை இழந்ததது தான். சட்டமன்ற தேர்தல் சமயத்தில் அரசியல் களத்தில் பிடிமானத்தை ஏற்படுத்த தற்போது ரஜினி பெயரை தமிழருவியும், அர்ஜூன மூர்த்தியும் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர் என்கின்றனர். அதே சமயம் ரஜினி ரசிகர்கள் வேறு கட்சிகளுக்கு செல்வதை தடுக்க இப்படி ஒரு வியூகத்தை ரஜினியே வகுத்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

பொதுவாகவே தமிழருவி மணியன் திமுக எதிர்ப்பு மனநிலை கொண்டவர். ரஜினி மக்கள் மன்றத்தினர் வரிசையாக திமுகவிற்கு செல்வதை அவரால் ஜீரனித்துக் கொள்ள முடியவில்லை என்கிறார்கள். இதனால் தான் மறுபடியும் ரஜினி தொடர்பாக ரசிகர்கள் மனதில் நம்பிக்கையை ஏற்படுத்த தமிழருவி முயற்சிக்கிறார் என்று சொல்லப்படுகிறது. மேலும் அரசியலுக்கு வரவில்லை என்றாலும் தேர்தல் சமயத்தில் ரஜினி ஏதேனும் ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய நிர்பந்தத்தை ஏற்படுத்துவதற்கான லாபி தற்போதே தொடங்கியுள்ளதாகவும், அதற்கான காரணிகள் தான் அர்ஜூனமூர்த்தியும், தமிழருவி மணியனும் என்றும் சொல்லப்படுகிறது.

click me!