புத்தி பேதலிப்பது பற்றி ரஜினி பேசலாமா?: ஆத்திர ரஜினி, ஆவேச நிர்வாகிகள்!

By thenmozhi gFirst Published Oct 24, 2018, 5:20 PM IST
Highlights

’இப்படியெல்லாம் ரணப்படுத்துறதுக்கு பதிலா இவரு அரசியலுக்கு வராமலேயே இருக்கலாம்!’ என்று மிக  ஆழ்ந்த கோபத்திலும், வேதனையிலும், ஏமாற்றத்திலும் இருக்கிறார்கள் நடிகர் ரஜினிகாந்தின் ரசிகர்கள். காரணம்?

’இப்படியெல்லாம் ரணப்படுத்துறதுக்கு பதிலா இவரு அரசியலுக்கு வராமலேயே இருக்கலாம்!’ என்று மிக  ஆழ்ந்த கோபத்திலும், வேதனையிலும், ஏமாற்றத்திலும் இருக்கிறார்கள் நடிகர் ரஜினிகாந்தின் ரசிகர்கள். காரணம்?

கடந்த சில நாட்களாக ரஜினிகாந்தின் செயல்களும், வார்த்தைகளும் அவர்களை மிக அதிகமாக காயப்படுத்திக் கொண்டு இருப்பதுதான். அதிலும் குறிப்பாக ரஜினிகாந்தின் நேற்றைய அறிக்கையிலுள்ள ஒரு வரி அவரது ரசிகர் மற்றும் மக்கள் மன்றங்களின் நிர்வாகிகள் மத்தியில் பிரளயத்தையே ஏற்படுத்தியுள்ளது. 

அவசரப்பட்டு ரஜினிகாந்த் விட்ட ஒரு வாக்கியம், அவரது ரசிகர்களை தலை தெறிக்க கோபம் கொள்ள வைத்து, அதே வார்த்தையால் அவரை திருப்பித் தாக்க வைத்துள்ளது. இது ரஜினிக்கு மட்டுமல்ல, அவரை சுற்றி நின்று அவரை பிரமிப்பாக பார்க்கும் நபர்களையே பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

பிரச்னை இதுதான்...ரஜினியின் மக்கள் மன்றத்தை சேர்ந்த சில நிர்வாகிகள் சமீபத்தில் மாற்றம் செய்யப்பட்டனர். ரஜினியின் ரசிகர்களாக பல வருடங்கள் இருந்து, அவரது சினிமா வெற்றிக்காக உழைத்ததோடு அவர் அரசியலுக்கு வரவேண்டும் என்று பல காலமாக குரல் கொடுத்து போஸ்டர் ஒட்டியவர்களாம் அவர்கள். இவர்களை நீக்கிவிட்டு, ரஜினியின் ரசிகர்களே அல்லாத மற்றும் வசதி வாய்ந்த புதிய முகங்களை அந்த இடத்தில் நிரப்பினர். 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போயஸ்கார்டன் வரை சென்று பழைய நிர்வாகிகள் போராட்டம் நடத்தினர். இதெல்லாம் நடக்கையில் ‘பேட்ட’ ஷூட்டிங்குக்காக வட இந்தியாவில் இருந்த ரஜினிகாந்த், சமீபத்தில் சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் ‘கட்சி துவங்கும் பணிகளில் 90% முடிந்தது.’ என்று உற்சாகம் காட்டினார். 

அத்தோடு மறுநாள், தன் மக்கள் மன்றத்தில் பதவி இழந்த நபர்கள் ஆதங்கப்படும் விவகாரம் பற்றி தனது விளக்கத்தை தெரிவித்தும், அவர்களின் குற்றச்சாட்டுக்களுக்கு பதில் சொல்லியும் ஒரு அறிக்கை வெளியிட்டார். சில இடங்களில் வெந்நீர் போன்று சுடு சொல் அடங்கிய அறிக்கையாக இருக்கிறது. ’நம் மன்றத்தின் நியமனம், நீக்கம் எல்லாம் என் கவனத்துக்கு வராமல் நடக்கிறது என சிலர் கருத்து சொல்லி இருக்கின்றனர். 

இப்போது சொல்கிறேன்...நியமனம், மாற்றம் மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகள் அனைத்துமே என் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டு, என் ஒப்புதலுடன் தான் நடக்கின்றன.” என்று ஆரம்பித்திருப்பவர் பல விஷயங்களை விளக்கி, பின் ஒரு இடத்தில்...’வெறும் ரசிகர் மன்றத்தை மட்டும் வைத்துக் கொண்டு அரசியலில் நாம் நினைத்ததை சாதிக்க முடியும் என்று யாராவது நினைத்தால், அவருடைய புத்தி பேதலித்துள்ளது! என்றுதான் அர்த்தம்.” என்று கத்தி செருகியுள்ளார். 

இந்த வாக்கியம் தான் ரசிகர்களை மிக ஆழமாக காயப்படுத்திவிட்டது. ’வெறும் ரசிகர் மன்றத்தை மட்டும் வைத்துக் கொண்டு ஆட்சியை பிடிக்க முடியாது, அரசியலில் சாதிக்க முடியாது! என்பதெல்லாம் தலைவர் சொல்லித்தான் நமக்கு புரிய வேண்டுமென்பதில்லை. அதற்காக ரசிகர்களை வைத்துக் கொண்டு எதுவே செய்ய முடியாது என்பது போல் இவர் நாளுக்கு நாள் பேசிக் கொண்டே வருவதுதான் காயப்படுத்தி, கடுப்பை தருகிறது. 

அதிலும் இந்த முறை அறிக்கையில் ‘அப்படி நினைப்பவருக்கு புத்தி பேதலித்துவிட்டது என்று அர்த்தம்.’ என்று சொல்லியிருக்கிறாரே, புத்தி பேதலிப்பை பற்றி ரஜினி பேசலமா? அவர் கொஞ்சம் தன் பழைய காலத்தை நினைத்துப் பார்க்க வேண்டும். அவர் சில நாட்கள் ஹை டென்ஷனில் நடந்து கொண்டார். அப்போது அவரது மனநலன் பற்றிய மோசமான செய்திகள் வெளி வந்தன. பிற்காலத்தில் அவரே கிட்டத்தட்ட அதை ஆமோதிப்பது போல் பேசியிருக்கிறார். 

தலைவர் இக்கட்டான நிலையில் இருந்த போது அவருக்காக கடவுளிடம் வேண்டிக் கொண்டும், அவருக்காக போஸ்டர் ஒட்டிக் கொண்டும் இருந்தோம். இதைப் பார்த்து எங்களை ‘மெ... நடிகரின் ரசிகர்கள்’ என்று அசிங்கப்படுத்தியது உலகம். 

அதையெல்லாம் யாருக்காக பொறுத்துக் கொண்டோமோ இன்று அவரே இவ்வளவு பெரிய உச்சத்தில் உட்கார்ந்து கொண்டு எங்களைப் பார்த்து ‘பைத்தியக்காரா!’ என்கிறார். இவருக்கு  ரசிகர்களாக இல்லாமல் வெறியர்களாக இருந்த நாங்கள் பைத்தியக்காரர்கள்தான். இந்த பைத்தியக்காரர்கள் விலகிவிட்டால் ரஜினியின் மன்றங்கள் என்னாகும், அரசியல் கனவு என்னாகும்?” என்று கொட்டித் தீர்க்கிறார்கள். 

ரசிகர்களை நோக்கி வீசிய ‘புத்தி பேதலித்துவிட்டது’ எனும் வார்த்தையை ரஜினி திரும்பப் பெற வேண்டும்! என வலியுறுத்தி ரஜினியின் அலுவலகமான ராகவேந்திரா கல்யாண மண்டபத்துக்கு போன்கால்களும், ஃபேக்ஸ் செய்திகளும் பறக்கிறதாம். என்ன செய்யப்போகிறார் ரஜினி?

click me!