போரில் பின்வாங்கிய ரஜியை வாலண்ட்ரியாக வம்பிழுக்கும் அதிமுக... கப்சிப் ஆன திமுக..!

By Thiraviaraj RMFirst Published Feb 17, 2019, 4:36 PM IST
Highlights

மக்களவை தேர்தலில் போட்டியில்லை என்று ரஜினிகாந்த் அறிவித்து இருப்பதற்கு அதிமுக அமைச்சர்கள் சிலர் வரவேற்றும் எதிர்ப்புத் தெரிவித்தும் அறிக்கை விட்டுள்ள நிலையில் திமுக இது குறித்து கருத்து தெரிவிக்கவே இல்லை. 
 

மக்களவை தேர்தலில் போட்டியில்லை என்று ரஜினிகாந்த் அறிவித்து இருப்பதற்கு அதிமுக அமைச்சர்கள் சிலர் வரவேற்றும் எதிர்ப்புத் தெரிவித்தும் அறிக்கை விட்டுள்ள நிலையில் திமுக இது குறித்து கருத்து தெரிவிக்கவே இல்லை. 

மக்களவை தேர்தலில் போட்டியிடப் போவதில்லை’’ என ரஜினிகாந்த் தனது அறிக்கையில் தெரிவித்து இருந்தார். இதற்கு பல்வேறு  அரசியல் கட்சித் தலைவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரும், ரஜினியின் நண்பருமான கராத்தே தியாகராஜன், ’’பாஜக, அதிமுக ஆதரவு தந்தால் அரசியல் பயணம் பாதிக்கும் என்பது ரஜினிக்கு தெரியும். எதிர்பார்த்த முடிவுதான் ரஜினியின் அறிக்கை மூலம் வெளியாகியுள்ளது’’ எனத் தெரிவித்துள்ளார். 

காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகிக்கும் மார்க்கிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், ’’ரஜினிகாந்த் போன்றவர்கள் நல்லவர்கள் பக்கம் இருக்க வேண்டும் என்பது எனது கருத்து. மத்தியில் நல்லாட்சி வந்தால் தான் தண்ணீர் பிரச்சனை தீரும். மத்தியில் நல்லாட்சி அமைந்தால்தான் மாநில அரசியலிலும் மாற்றம் கொண்டு வர முடியும். நல்லவர்களுக்கு ஆதரவு இல்லை என்றால், எதிரானவர்களுக்கு ஆதரவா என புரிந்துக்கொள்ளப்படும்’’ எனத் தெரிவித்துள்ளார். 

ரஜினியை அவ்வப்போது நேரில் சென்று சந்தித்து வரும் விடுதலை கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், ‘’ரஜினியின் அறிவிப்பு நாடாளுமன்ற தேர்தலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. மக்களவை தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை என ரஜினி அறிவித்திருப்பது அவரது தனித்தன்மையை குறிக்கிறது’’ எனத் தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் ரஜினியின் முடிவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். ’’தனது நிலைப்பாட்டை அறிவித்த ரஜினிக்கு என்னுடைய வாழ்த்துக்கள். நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதில்லை என்பது ரஜினியின் கொள்கை’ எனத் தெரிவித்துள்ளார். அதேபோல் ரஜினி ஆதரவு எங்களுக்குத்தான் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். ‘’ரஜினி கூறியிருப்பது போன்று அதிமுக அரசுதான் கோடை காலத்தில் கூட மக்களின் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்து வருகிறது. அதனால், ரஜினியின் ஆதரவு எங்களுக்கு தான் இருக்கும்’’ என அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை அதிமுகவில் உள்ள மற்றவர்கள் ரஜினியில் இந்த அறிக்கையை கடுமையாக விமர்சித்துள்ளனர்.  கே.பி.முனுசாமி கூறுகையில், ’’ரஜினி முதலில் மக்களை சந்திக்கட்டும், பிறகு தேர்தலை சந்திக்கலாம்’’ என விமர்சித்துள்ளார். அதேபோல் அக்கட்சியையை சேர்ந்த செய்தித் தொடர்பாளர் வைகைச்செல்வன், ‘’மக்களவை தேர்தலில் போட்டியிடவில்லை என்பதன் மூலம் ரஜினியின் அரசியல் பயணம் நீர்த்துப் போய்விட்டது. 1996 முதல் ஒவ்வொரு முறையும் அரசியலில் நுழைவேன் என்பதை நீர்த்துப்போகச் செய்துவிட்டார்’’ என தெரிவித்துள்ளார். 

அனைத்து கட்சியினரும் கருத்து தெரிவித்த போதும் திமுக ரஜினி அறிக்கை குறித்து எந்தவித கருத்தையும் கூறவில்லை. 

click me!