
தட்டையான பாதையை விட மேடு, பள்ளமான வழிகள் சுவாரஸ்யமானவை. செய்திகளும் அப்படித்தான்! நிகழ்வுகளை மட்டுமே பதிவு செய்வதை விட அனுமானங்கள், புதிர்கள், ரகசியங்கள், நடந்துவிட வாய்ப்புள்ளவை, நடந்து வெளியே தெரியாதவை ஆகியவையும் செய்திகளே.
அப்படி பரபரப்பு மசாலா தூவப்பட்ட செய்திகள் இதோ உங்களுக்காக...
# கோயமுத்தூர் பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் குறைந்தது ஐம்பது, அறுபது கோடி சம்பாதித்திருக்கலாம் என்று வருமான வரித்துறை சந்தேகிக்கிறது. எனவே கூடிய விரைவில் அவரது சொத்துக்களில் ரெய்டு நடக்கலாம்! என்கிறார்கள்.
# என்னதான் ராகுல் காங்கிரஸின் தலைவராகிவிட்டாலும் கூட சோனியா காந்தியும் முழு நேர அரசியலில் இருக்க வேண்டும். அப்போதுதான் கட்சி வெற்றிகரமாய் பயணிக்க முடியும் என்று அக்கட்சியின் சீனியர்கள் விரும்பி வலியுறுத்துகிறார்களாம்.
# பல நூறு டன் செம்மர கடத்தலில் ஈடுபட்டு கைதாகியிருக்கிறார் அணைக்கட்டு தி.மு.க. ஒன்றியச்செயலாளர் பாபு. வேலூர் மாவட்ட தி.மு.க.வில் இப்படியொரு கிருமி இருந்துள்ளார் என்பதற்காக துரைமுருகன் மீது கடும் கடுப்பிலிருக்கிறாராம் ஸ்டாலின்.
# இனி தன் நண்பரும், பேரவையின் முக்கிய நிர்வாகியுமான ராஜா மீது தன் கணவர் மாதவன் புகார் கொடுத்தால் அதை பெரிதாக அலட்டிக் கொள்ள வேண்டாமென்று போலீஸுக்கு ஓரலாக தகவல் தந்திருக்கிறாராம் தீபா.
# தமிழகத்தில் தேவையே இல்லாமல் கோடிக்கணக்கான மதிப்பீட்டில் நடைபெறும் பொதுப்பணித்துறையின் பணிகள் பற்றிய முழு ரெக்கார்டையும் தயார் செய்து முதல்வருக்கு எதிரான புது பூகம்பத்தை கிளப்ப தயாராகியிருக்கிறது தி.மு.க.
# தேனாம்பேட்டையில் செம பிரபலமான ஒரு ஹோட்டல் இருக்கிறது. கலெக்ஷன் அள்ளும் இந்த ஹோட்டலின் ஓனர், ரஜினிகாந்தின் மருமகன் அனிருத் உடையது என்று தகவல் பரவிக்கிடக்கிறது.
# என்னதான் தெலுங்கு பொண்ணாக இருந்தாலும் கூட தமிழ் சினிமாவின் டார்லிங்காக பார்க்கப்படுபவர் நடிகை அனுஷ்கா. இந்நிலையில் தனது பாகமதி படத்தின் தமிழ் ப்ரமோஷனுக்காக அவர் ஒத்துழைக்கவில்லை என்பதால் அனுஷ் மீது கடும் ஆதங்கத்தில் இருக்கிறது தமிழ் சினிமா.
# குண்டர் தடுப்பு சட்டத்தில் மீண்டும் அடைபடப்போகும் காரைக்கால் பெண் எழிலரசி மீது என்கவுண்டர் பாயலாம் என்று ஒரு தகவல் பரபரத்துக் கிடக்கிறது.
# ’கூட்டணி வருடங்கள்’ எனும் தலைப்பில் பிரணாப் முகர்ஜி எழுதியுள்ள புத்தகத்தில் காங்கிரஸையே சீண்டும் சில பகுதிகள் இருக்கின்றன என்று சொல்லப்படுகிறது. குறிப்பாக தமிழக ஆன்மிகவாதி ஒருவரை கைது செய்த விவகாரத்தில் சோனியாவே பின்னணி என்பது போல் சில தகவல்கள் இருக்கின்றனவாம்.
# தி.மு.க.வின் அனைத்து மாவட்டங்களிலும் உதயநிதி ஸ்டாலினுக்கு மன்றம் திறக்கும்படி கழக தலைமை உத்தரவிட்டதாக ஒரு தகவல் படபடத்துக் கிடக்கிறது.