
அதிமுகவில் இரு அணிகளும் இணையாததற்கு காரணமே ரஜினிதான் என ஓ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த மாபா பாண்டியராஜன் கூறினார்.
ஜெயலலிதா மறைவுக்கு பின், அதிமுக இரு அணிகளாக பிரிந்து செயல்படுகிறது. இடையில் சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவும், தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக டிடிவி.தினகரனும் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஆனால், உள்ளாட்சி தேர்தல் எந்த நேரத்திலும் நடத்தப்படும் என தெரிகிறது. அதற்கு முன் கட்சியின் சின்னமான இரட்டை இலையை மீட்க இரு அணிகளும் போராடி வருகின்றன. இதற்கிடையில், இரு அணிகளும் ஒன்றாக இணைந்தால், சின்னம் கைப்பற்றப்படும் என அவர்களுக்குள் நம்பிக்கை எழுந்தது.
இதையடுத்து, இரு அணிகளும் இணைவது குறித்து பரபரப்பாக பேசப்பட்டது. இதற்காக தனி குழுவை இரு தரப்பினரும் அமைத்தனர்.
இதற்கிடையில், எடப்பாடி அணியினரும், ஓபிஎஸ் அணியினரும் மாநிலம் முழுவதும் பல்வேறு கூட்டங்களை நடத்தி தங்களிடம் உள்ள தொண்டர்களின் பலத்தை நிரூபித்து வருகின்றனர். இந்த நேரத்தில் இரு அணிகளும் இணைவதற்கான எந்த சாத்தியமும் இல்லை என ஓபிஎஸ் அணி தெரிவித்தது. இதையடுத்து, பேச்சு வார்த்ததை குழுவும் கலைக்கப்பட்டது.
இந்நிலையில் ஓபிஎஸ் அணியை சேர்ந்த மாபா பாண்டியராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ரஜினியின் அரசியல் பிரவேசத்தால், இரு அணிகளும் இணைய முடியாமல் போனது என தெரிவித்தார்.
செய்தியாளர்களிடம், ஓபிஎஸ் அணியின் மாபா பாண்டியராஜன் கூறியதாவது:-
எங்களது அணிக்கான கூட்டம் திருவேற்காட்டில் நடந்தது. அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட தொண்டர்களும், பொதுமக்களையும் பார்த்து எடப்பாடி அணியினர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
வரும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு, எங்கள் அணியின் பலத்தை நிரூபிப்போம். இதற்காக தொண்டர்களை முழு வீச்சில் ஒருங்கிணைத்து வருகிறோம். தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின் ஆதரவால் உள்ளாட்சி தேர்தலில் எங்களது அணியின் பலத்தை நிச்சயம் உலகம் அறிய செய்வோம்.
நடிகர் ரஜினி திடீரென அரசியலில் குதித்துள்ளார். அவரது அரசியல் பிரவேசத்தை பலரும் எதிர்க்க தொடங்கினர்.
இதனால், பல்வேறு கட்சி தொண்டர்கள், ரஜினியின் ரசிகர்களாக இருப்பதால், ரஜினியின் பேச்சில் ஈர்க்கப்பட்டுவிட்டனர். இதனை தடுக்கவே,அதிமுக அணி இணைப்பு பேச்சுவார்த்தைக் குழு கலைக்கப்பட்டது.
எங்களது அணியில் 140 முன்னாள் எம்எல்ஏக்களும், 12 நடப்பு MLA-க்கள் மற்றும் MP-க்கள் உள்ளதாக அவர் குறிப்பிட்டார். 90 சதவீத அதிமுக தொண்டர்களின் ஆதரவும் தங்கள் அணிக்கே உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.