
எம்.எல்.ஏக்களுக்கு பேரம் நடைபெற்றதாக வெளிவந்த வீடியோவில் வருவது நான்தான் என்றும் ஆனால் அதில் வரும் வாய்ஸ் என்னுடையது அல்ல என்றும் மதுரை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ சரவணன் விளக்கம் அளித்துள்ளார்.
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுக இரண்டாக உடைந்தது. சசிகலா தரப்புக்கும் ஒ.பி.எஸ் தரப்புக்கும் இடையே எம்.எல்.ஏக்களை குதிரை பேரம் பேசுவதில் பெரிய போர்களமே நடைபெற்று வந்தது.
எம்.எல்.ஏக்கள் அனைவரும் கூவத்தூர் கொண்டு சென்று ரிசார்ட்டில் அடைத்து வைக்கப்பட்டனர். அதில் 12எம்.எல்.ஏக்கள் தப்பித்து வந்து ஒ.பி.எஸ்க்கு ஆதரவு அளித்தனர்.
அப்போது முதல் ஆளாக வெளியே வந்தவர் மதுரை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ சரவணன் ஆவார். ஆனால் தற்போது எம்.எல்.ஏக்களை இழுப்பதில் குதிரை பேரம் நடைபெற்றதாக அவர் பேசிய வீடியோ வெளியே வைரலாகி உள்ளது.
அதில், ஜெயலலிதா மரணத்தை வைத்து அரசியல் செய்வதாகவும், அரசியல்னா அப்டிதான் இருக்கும் எனவும் சரவணன் கூறியுள்ளார்.
மேலும் எனக்கு 500 கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டது எனவும் ஒ.பி.எஸ் அணி பாஜகவுடன் கூட்டணி அமைக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
ஒன்று தமிழ்நாட்டில் நான் அமைச்சராக இருப்பேன், இல்லையென்றால் மத்தியில் அமைச்சராக இருப்பேன் என அந்த வீடியோவில் சரவணன் எம்.எல்.ஏ பேசியுள்ளார்.
இதுமட்டுமல்ல கடந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்று இரட்டையிலை சின்னத்தில் வெற்றிபெற்ற கூட்டணி கட்சி தலைவர்களும் எம்.எல்.ஏக்களுமான தனியரசு, கருணாஸ், தமிமுன் அன்சாரி ஆகியோருக்கு தலா 10 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது என்றும் சரவணன் பேசிய காட்சியில் பதிவாகியுள்ளது.
இதுகுறித்து சரவணனிடம் விளக்கம் கேட்ட்கபட்டுள்ளதாக முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்திருந்தார்.
இதைதொடர்ந்து வீடியோ குறித்தும் அவர் பேசியது குறித்தும் பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து சரவணன் விளக்கம் அளித்தார்.
பின்னர், செய்தியாளர்களை சந்தித்த சரவணன், எம்.எல்.ஏக்களுக்கு பேரம் நடைபெற்றதாக வெளிவந்த வீடியோவில் வருவது நான்தான் என்றும் ஆனால் அதில் வரும் வாய்ஸ் என்னுடையது அல்ல என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், கூட்டணி கட்சி தலைவர்களும் எம்.எல்.ஏக்களுமான தனியரசு, கருணாஸ், தமிமுன் அன்சாரி ஆகியோர் குறித்து தான் பேசவே இல்லை என்றும், இந்த பொய்யான தகவல் குறித்து சட்ட ஆலோசகருடன் கலந்தாலோசித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வேன் எனவும் தெரிவித்துள்ளார்.