பிரதமரை நிர்ணயிக்கும் ஆற்றல் ரஜினிக்குதான் உண்டு...!! ஸ்டாலினுக்கு சவால்விட்ட கராத்தே தியாகராஜன்...!!

By Ezhilarasan BabuFirst Published Oct 5, 2019, 12:57 PM IST
Highlights

மூப்பனார் அவர்களை நாட்டின் பிரதமராக்க வேண்டும் என ரஜினி விரும்பியதாகவும், அதை தற்போதைய திமுக தலைவர் ஸ்டாலின்தான் தடுத்தார் என்றும் பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.

நாட்டின் பிரதமர் யார் என்பதை நிர்ணயிக்கும் ஆற்றல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் இருப்பதாக சென்னை முன்னாள் மேயர் கராத்தே தியாகராஜன் அதிரடியாக கூறியுள்ளார் அவருக்கு இணையான தலைவர்கள் தற்போதைக்கு தமிழகத்தில் இல்லை என்றும் அவர் பேசியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அவரது ரசிகர்களும், ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளும் இணைந்து மரக்கன்று நடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தென்சென்னை ரஜினி மக்கள் மன்றம் சார்பில் மரக்கன்று நடும்விழா சென்னையில் நடைபெற்றது. அதில் சென்னை முன்னாள் மேயர் கராத்தே தியாகராஜன் கலந்துகொண்ட மரக்கன்றுகளை நட்டு பின்னர் மேடையில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் ரஜினிகாந்த் முதலமைச்சர் ஆவது உறுதி என்றார். ஜெயலலிதா, கருணாநிதி இல்லாத நிலையில் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்புவதற்கு ரஜினியால் மட்டுமே முடியும் என்ற அவர், தமிழகத்திற்கு என்னென்ன செய்ய வேண்டும், என்னென்ன திட்டங்களை கொண்டுவர வேண்டும், எந்தெந்த மாவட்டங்களில் என்னென்ன பிரச்சினைகள் உள்ளது என்பதையெல்லாம் நன்கு அறிந்து வைத்திருக்கிறார் ரஜினி என்றார்.

ரஜினியுடன் ஒப்பிடும் அளவிற்கு தமிழகத்தில் தற்போதைக்கு தலைவர்கள் இல்லை என்பதால், அவர் சட்டமன்ற தேர்தலில் எளிதில் வெற்றி பெறுவார் என்றார்.  நாட்டின் பிரதமர் யார் என்பதை நிர்ணயிக்கும் ஆற்றல்  ஏற்கனவே ரஜினிகாந்திற்கு இருந்துள்ளது என்ற கராத்தே தியாகராஜன்,  மூப்பனார் அவர்களை நாட்டின் பிரதமராக்க வேண்டும் என ரஜினி விரும்பியதாகவும், அதை தற்போதைய திமுக தலைவர் ஸ்டாலின்தான் தடுத்தார் என்றும் பகிரங்கமாக குற்றம்சாட்டினார். நடிகர் ரஜினிகாந்த் ஆன்மீக அரசியல் என்று சொன்னாலும்கூட, அவர் அனைவருக்கும் பொதுவானவர். தன்னுடைய படத்தில் சிறுபான்மை இன மக்களை தோழமையாக பாவித்து நடித்தவர் ரஜினி என்றார்.  அவரின் சிறந்த வெற்றிப் படத்தின் பெயரே  பாட்ஷா தான் என்றார்.

 

ஒரு இஸ்லாமியரிடம் இருந்துதான் தன் வீட்டையே வாங்கினார் ரஜினி என்றும். அவர் ஆரம்ப காலத்தில் சென்னைக்கு வந்தபோது இஸ்லாமியர் ஒருவரின் வீட்டில்தான் ரஜினி தங்கியிருந்தார் என்றும் அதை அவர் இன்னும் மறக்கவில்லை என்றார். 1996 ஆம் ஆண்டு திமுக வெற்றி பெறும் என்று யாருமே எதிர் பார்க்காத நிலையில் திமுகவுக்கு குரல் கொடுத்து வெற்றி பெற வைத்தவர்  ரஜினி . மறைந்த திமுக தலைவர் ஊயிருடன் இருந்தவரை அவர் மீது மதிப்பும்  மரியாதையையும் ரஜினி கொண்டிருந்தார் என, கராத்தே தியாகராஜன் தற்போதைய திமுக தலைவர் ஸ்டாலினை குத்திக்காட்டும் விதத்தில் பேசினார். அவரின் பேச்சு ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளிடையே உற்சாகத்தை ஏற்படுத்துவதாக இருந்தது.

click me!