
’நான் அரசியலுக்கு வருவது காலத்தின் கட்டாயம்’ எனும் பஞ்ச் மூலம் ரஜினி மூன்று அதிகார மையங்களின் மூக்கை உடைத்திருக்கிறார் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
ரஜினியின் வருகையால் பல சாதகங்கள், சில பாதகங்கள் தமிழக அரசியலில் நிகழும் என்பது உண்மையே. இது ஒரு புறமிருந்தாலும் ரஜினியின் வருகையால் நேரடியாக பாதிக்கப்பட போவது 3 மையங்களதான் அவை ஆளும் அ.தி.மு.க.! ஆளத்துடிக்கும் தி.மு.க.! புரியாத புதிராய் மாயங்களை செய்யும் தினகரன்! இந்த மூன்று மையங்கள்தான் அவை.
ரஜினி அரசியலுக்கு வர இருப்பதாக சொல்வது அடுத்த சட்டமன்ற தேர்தல் சமயத்தில்தான். ஆக அப்போது அவரால் இந்த மூன்று மையங்களும் எப்படியெல்லாம் பாதிக்கப்படுமென்றால்...இந்த ஆட்சி இயல்பாக முடிவுக்கு வந்தாலோ அல்லது கலைக்கப்பட்டாலோ அதையடுத்து தேர்தல் வரும்.
அப்போது ரஜினியின் கட்சி துவக்கப்படும். ஆளும் அ.தி.மு.க. மீது மாநிலமெங்கும் எரிச்சலிருப்பது தெரிந்த சேதி. இதை அ.தி.மு.க. நிர்வாகிகளும் உணர்ந்துதான் இருக்கிறார்கள். செல்வாக்குடன் ரஜினி கட்சி உதயமாகையில் அவர்கள் அங்கு தாவ முயல்வார்கள். அதேபோல் அ.தி.மு.க.வில் எம்.எல்.ஏ.சீட் கிடைக்காதவர்கள் கலகம் செய்வதோடு அவர்கள் தங்கள் பரிவாரத்துடன் ஆதரவு கொடுக்கும் கட்சியாக இருக்கப்போவது ரஜினியின் கட்சியைத்தான்.
ஆக எடப்பாடி - பன்னீர் ஆட்சி நிம்மதியாய் தொடர்வதற்கும், அடுத்த முறை மீண்டும் அமைவதற்கும் ரஜினியின் பிரவேசம் குடைச்சல் கொடுக்கும்.
அடுத்து அரியணையை நோக்கி மெதுவாக ஊர்ந்து ஊர்ந்து முன்னேறிக் கொண்டிருக்கிறது தி.மு.க. ஸ்டாலினின் நம்பிக்கையே தனது வாக்கு வங்கியும், இந்த ஆட்சியின் மீது நம்பிக்கை அற்றவர்களால் கிடைக்கும் வாக்குகளும், கூட்டணி கட்சிகளின் வாக்குகளும்தான்.
ஆனால் ரஜினி வந்துவிடுவதால் விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் ‘சீட் பேரம் படியவில்லை’ என கூறி ரஜினியை ஆதரிப்பார்கள். பொது வாக்கு வங்கியில் கணிசமான சதவீதம் அவரிடம் போவதால் தி.மு.க.வுக்கு அது பெரும் சிக்கலே. ஆக எளிதாக ஆட்சி அமைத்துவிடலாம் எனும் ஸ்டாலினின் கனவை ரஜினியின் அரசியல் பிரவேசம் கலைத்திருக்கிறது.
மூன்றாவதாக தமிழக அரசியலில் மாய மந்திரங்களை செய்து கொண்டிருக்கிறார் தினகரன். அ.தி.மு.க.வின் ஸ்திரமற்ற தன்மையும், சோம்பிக் கிடக்கும் தி.மு.க.வும்தான் இவரது பலம்.
வெற்றிடத்தை நிரப்ப நான் தான் இருக்கிறேன் என்று நினைத்துக் கொண்டிருந்தவரின் பொழப்பில் மண்ணைக் கொட்டும் விதமாக வந்து விழுந்திருக்கிறது ரஜினியின் வருகை. ஆக தினகரனாலும் அடுத்த தேர்தலில் எந்த அசகாய எழுச்சியையும் காட்டிட முடியாது.
இது போக வாசன், திருநாவுக்கரசர், திருமாவளவன், அழகிரி போன்றோர் தங்களை ரஜினியின் நெருங்கிய நண்பர்களாக காட்டிக் கொண்டு அவரை ஆதரிக்கும் தொனியிலேயே இருப்பதால் மேற்கண்டு 3 அதிகார மையங்களுக்கும் சிக்கல்தான் சிக்கலேதான் ரஜினியால்!