நாம ஆதரிக்கலைன்னா வேறு யாரு ஆதரிப்பாங்க... ஏ.சி. சண்முகத்துக்கு ஆதரவாக களமிறங்கும் ரஜினி ரசிகர்கள்!

By Asianet TamilFirst Published Jul 14, 2019, 9:15 AM IST
Highlights

அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலில் களமிறங்க உத்தேசித்திருக்கும் ரஜினி, தனக்கு போட்டியாக திமுகவை மட்டுமே கருதுவதால், திமுகவுக்கு எதிரான நிலைப்பாட்டில் ரஜினி ரசிகர்கள் இருந்துவருகிறார்கள். எனவே எதிரிக்கு எதிரி நண்பன் என்ற அடிப்படையில் வேலூரில் ஏ.சி. சண்முகம் வெற்றி பெற வேண்டும் என்பதில் ரஜினி ரசிகர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். 
 

வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி. சண்முகத்துக்கு ஆதரவாக ரஜினி மக்கள் மன்றத்தினர் பணியாற்றத் தொடங்கியுள்ளனர்.
கடந்த ஏப்ரலில் ரத்து செய்யப்பட்ட வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் ஆகஸ்ட் 5 அன்று நடைபெற உள்ளது. வேலூரில் திமுக சார்பில் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்ததும், அதிமுக கூட்டணி சார்பில் ஏ.சி. சண்முகம், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி போட்டியிடுகிறார்கள். என்றாலும் போட்டி திமுக - அதிமுக வேட்பாளர்களிடையே கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வேலூரில் வாக்குகள் சிதறாமல் இருக்க அனைத்து தரப்பினரையும் ஏ.சி. சண்முகம் அணுகிவருகிறார்.


அந்த வகையில் தனியாக கட்சி தொடங்க உத்தேசித்திருக்கும் நடிகர் ரஜினியின் ஆதரவு யாருக்கு என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால், வேலூரில் ஏ.சி. சண்முகம் வெற்றிக்காக ரஜினி மக்கள் மன்றத்தினர் களம் இறங்கத் தொடங்கி உள்ளனர். ரஜினியும் ஏ.சி. சண்முகமும் நீண்ட கால நண்பர்கள் என்பதால், அந்த அடிப்படையில் ரஜினி ரசிகர்கள் களம் இறங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. தன்னுடைய அரசியல் பிரவேசம் குறித்து ஏ.சி. சண்முகத்துடன் ரஜினி ஏற்கனவே பலமுறை ஆலோசனை நடத்தியிருக்கிறார்.


’எம்.ஜி.ஆர். போல தன்னாலும் நல்லாட்சி அமைக்க முடியும்’ என்று ரஜினி சென்னை மதுரவாயலில் உள்ள ஏ.சி. சண்முகத்துக்கு சொந்தமான கல்லூரியில் நடந்த எம்.ஜி.ஆர். சிலைத் திறப்பு விழாவில் பேசினார். அந்த விழாவில் மேலும் பல அரசியல் கருத்துகளை ரஜினி தெரிவித்தார். அதற்கு மேடை அமைத்துக்கொடுத்தது ஏ.சி. சண்முகம் என்பதால், அவர் மீது ரஜினி ரசிகர்களுக்கு இயல்பாகவே பாசம் உள்ளது. அந்த அடிப்படையிலும் தார்மீக ஆதரவு அளித்து வேலூரில் அவருக்கு பிரசாரம் செய்வார்கள் என்கிறார்கள் ரஜினி ரசிகர்கள்.


மேலும், அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலில் களமிறங்க உத்தேசித்திருக்கும் ரஜினி, தனக்கு போட்டியாக திமுகவை மட்டுமே கருதுவதால், திமுகவுக்கு எதிரான நிலைப்பாட்டில் ரஜினி ரசிகர்கள் இருந்துவருகிறார்கள். எனவே எதிரிக்கு எதிரி நண்பன் என்ற அடிப்படையில் வேலூரில் ஏ.சி. சண்முகம் வெற்றி பெற வேண்டும் என்பதில் ரஜினி ரசிகர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். 
வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் ரஜினி மக்கள் மன்றத்தினர் தங்களுடைய மன்ற கொடியைப் பயன்படுத்தாமல், தேர்தல் பணியில் ஈடுபட முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. வேலூர் ரசிகர்கள் மட்டுமின்றி, திருவண்ணாமலை, திருவள்ளூர் மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தினரும் தேர்தல் பணியில் ஈடுபடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.  

click me!