அஞ்சல் துறை தேர்வுக்கு தடையில்லை ! உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு !!

By Selvanayagam PFirst Published Jul 13, 2019, 11:53 PM IST
Highlights

நாளை நடைபெறும் அஞ்சல்துறை தேர்வுக்கு தடையில்லை, ஆனால் தேர்வு முடிவுகளை வெளியிடக்கூடாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தபால்துறையில் அஞ்சலர் உட்பட 4 வகையான பணியிடங்களுக்கான தேர்வுகள் நாடு முழுவதும் நாளை நடைபெறுகின்றன. கடந்த ஆண்டு இத்தேர்வு தமிழ் உட்பட 15 பிராந்திய மொழிகளிலும் நடத்தப்பட்டன.

இந்நிலையில் தேர்வுக்கு 3 நாட்களுக்கு முன்பு கடந்த 11-ம் தேதி வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தபால் தேர்வுகள்  இரு மொழிகளில் மட்டுமே நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்திலிருந்து 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள நிலையில், திடீரென தமிழ் மொழி நீக்கப்பட்டுள்ளதால் தேர்வர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

ஏற்கனவெ தபால்துறை தேர்வின் தமிழ்மொழி தாளில் வடமாநில மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்றது சர்ச்சைக்குள்ளான நிலையில், இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடைபெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, ஆங்கிலம் மற்றும் இந்தியில் தேர்வு நடத்தப்படும் என்ற அறிவிப்புக்கு திமுக எம்.பி.க்கள், பாமக தலைவர் ராமதாஸ், விசிக தலைவர் திருமாவளவன், மதிமுக தலைவர் வைகோ ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டைப்போலவே மாநில மொழிகளில் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில்,  மதுரை சொக்கிகுளத்தை சேர்ந்த ஆசீர்வாதம் என்பவர் அஞ்சல்துறை தேர்வை ஆங்கிலம், இந்தியில் மட்டும் எழுத வேண்டும் என்பதற்காக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

அஞ்சல் துறை தேர்வு குறித்த அறிவிப்பை பழைய நடைமுறைப்படியே வெளியிட வேண்டும் என்று மனுதாரர் கோரிக்கை விடுத்தார். இது குறித்து விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை அஞ்சல்துறை தேர்வுகளில் தமிழ் மொழி தவிர்க்கப்பட்டது குறித்து மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்றும், இது தொடர்பாக மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது. 

அஞ்சல் துறை தேர்வுகளை நாளை நடத்தலாம், ஆனால் தேர்வு முடிவுகளை வெளியிடக்கூடாது என்றும் உத்தரவிட்டது.

click me!