
ரஜினி அரசியல் கட்சியை, அமைப்பு ரீதியாகக் கட்டமைக்கும் முயற்சியில் இருக்கிறார். இதற்காக, ரசிகர் மன்றத்தின் பெயரில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அரசியலை நோக்கி நகரும் ரஜினியின் அடுத்த நடவடிக்கை இது என்று பார்க்கப் படுகிறது. இதுவரை ரஜினி ரசிகர் மன்றம் என்று அழைக்கப்பட்டது, இனி 'ரஜினி மக்கள் மன்றம்' என அழைக்கப்படவுள்ளது.
2017 டிசம்பர் 31ஆம் தேதி அன்று தனது அரசியல் பிரவேசத்தை அறிவித்த ரஜினி, தொடர்ந்து 2018 புத்தாண்டு அறிவிப்பாக, பாபா முத்திரையுடன் கூடிய ரஜினி பேரவைக்கான மொபைல் ஆப் வெளியிட்டார். ஏற்கெனவே ஆன்மிக அரசியல் என்று வேறு சொல்லிவிட்டதால், இந்த பாப முத்திரை சின்னமே கூட ரஜினியின் அரசியல் கட்சிக்கான சின்னமாகத் தேர்வு செய்யப் படலாம் என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
அதிலும் கூட, பாபா சின்னம் குறித்து பலரும் விமர்சித்து வந்தனர். அதில் இருந்த தாமரை மலரை வைத்து, பாஜக.,வுடன் ஆதரவில் இருப்பதற்காக அவ்வாறு வைத்துள்ளார் என்று ஊடகங்களில் விமர்சிக்கப் பட்டது. இதனிடையே மயிலாப்பூர் ராமகிருஷ்ண மடம் சென்று மடத்தின் தலைவர் சுவாமி கௌதமானந்தரைப் பார்த்து ஆசி பெற்று வந்த ரஜினி, மன்ற முத்திரையில் சிறு மாற்றத்தைச் செய்தார். தாமரை மலர் நீக்கப்பட்டு, பாபா முத்திரையின் மேல் பாம்பு சுற்றியபடி இருப்பதுபோல் வடிவமைக்கப் பட்டது. மேலும், முத்திரையின் கீழ் உண்மை, உழைப்பு, உயர்வு என்கிற வாசகங்கள் இடம் பெற்றன.
இதனிடையே ரஜினி புதிய கட்சி தொடங்கும் போது, என்ன பெயர் வைக்கலாம் என்பது குறித்து பலரும் அவருக்கு ஆலோசனை கொடுத்து வருகின்றனராம். பலரும் தங்கள் விரும்பிய பெயர்களை எழுதிக் கொடுத்து, அதனைப் பரிசீலனை செய்ய கோரி வருகின்றனராம்.
இருப்பினும், கட்சி, கொடி முதலியவை அறிவிக்கப்படாத நிலையில், புதிய இணையதளத்தை தொடங்கி வைத்தார் ரஜினி. அதில் அனைவரும் சேருங்கள் என்று அழைப்பு விடுத்து டிவிட்டர் பதிவில் ஒரு வீடியோவும் பதிவு செய்தார். அப்போது, ரஜினி மன்றம் www.rajinimandram.org என்ற பெயருடன் கூடிய தனி இணையதளம் தொடங்கி வைத்தார்.
இந்நிலையில், ரஜினி ரசிகர் மன்றம் என்பதை ’ரஜினி மக்கள் மன்றம்’ என மாற்றி அறிவிக்கப் பட்டுள்ளது. இதுவே, ரஜினியின் அடுத்த கட்சி அறிவிப்புக்கான முன்னோட்டமாகக் கருதப் படுகிறது. ரசிகர் மன்றம் மக்கள் மன்றமாகி, அதுவே பின்னர் கட்சியாகக் கூடும் என்று கூறப்படுகிறது.