
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நெருங்கும் நிலையில், நாளுக்குநாள் ஆர்.கே.நகர் தேர்தல் களம் சூடுபிடித்து கொண்டே இருக்கிறது.
வரும் 21-ம் தேதி ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஒருவாரமே உள்ள நிலையில், தேர்தல் பரப்புரைகள் சூடுபிடித்துள்ளது.
திமுக, அதிமுக, தினகரன் என ஒவ்வொரு தரப்பும் ஒவ்வொரு வகையில் தங்களின் வலிமையை நிரூபிக்க போராடுவதால், முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முக்கியத்துவத்தை பெற்றுள்ளது.
அதிமுக அரசின் ஆட்சியில் உள்ள குறைபாடுகளை விளக்கி திமுக வாக்கு சேகரித்து வருகிறது. அதிமுக அரசை விமர்சித்து தினகரனும் பிரசாரம் செய்துவருகிறார்.
திமுகவும் தினகரனும் அதிமுக அரசை கடுமையாக விமர்சித்து பிரசாரங்களை மேற்கொண்டுவருகின்றனர். இதற்கிடையே, லயோலா கல்லூரி பேராசிரியர் ராஜநாயகம் நடத்திய கருத்து கணிப்பில் தினகரன் வெற்றி பெறுவார் என்றும் இரண்டாவது இடத்தை திமுக பிடிக்கும் என்றும் அதிமுக வேட்பாளர் மதுசூதனன் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்படுவார் எனவும் தெரிவித்தது.
பத்திரிகையாளர் அன்பழகன் தலைமையிலான குழு நடத்திய கருத்து கணிப்பில் திமுக வேட்பாளர் வெற்றி பெறுவார் எனவும் தினகரன் இரண்டாவது இடத்தையும் மதுசூதனன் மூன்றாவது இடத்தையும் பிடிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டது.
மேற்கண்ட இரண்டு கள ஆய்வுகளிலுமே அதிமுக வேட்பாளர் மதுசூதனன் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்படுவார் என குறிப்பிடப்பட்டிருப்பது ஆட்சியாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ஆளுங்கட்சியாக இருந்துகொண்டு இடைத்தேர்தலில் தோற்றுவிடக்கூடாது என்ற கட்டாயத்தில் இருக்கும் அதிமுக, அதற்காக வாக்குறுதிகளை அள்ளி எறிகிறது. மற்ற தொகுதியில் அதிமுக தோற்றாலும் பரவாயில்லை. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்.கே.நகரில் தோல்வியடைந்தால், அது அதிமுகவிற்கு கடுமையான பின்னடைவாக அமையும். எனவே வெற்றி பெறும் முனைப்பில் வாக்குறுதிகள் அள்ளி வீசப்படுகின்றன. அதுமட்டுமல்லாமல், ஆர்.கே.நகரில் வெற்றி பெற்று அதிமுக தொண்டர்கள் தங்கள் பக்கம் தான் உள்ளனர் என்பதை நிரூபித்து காட்ட வேண்டிய கட்டாயமும் இருப்பதால், எந்த வாக்குறுதியை வேண்டுமானாலும் அளித்து வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் அமைச்சர்களும் அதிமுக நிர்வாகிகளும் களமிறங்கியுள்ளனர்.
அமைச்சர்கள் முதல் முதல்வர் வரை அனைவரும் ஆர்.கே.நகரில் அடுக்கடுக்கான வாக்குறுதிகளை அளித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், ஆர்.கே.நகரில் பிரசாரம் செய்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ஆர்.கே.நகர் மக்களுக்கு ஆசையை ஏற்படுத்தும் விதமாக பேசியுள்ளார். ஆர்.கே.நகர் மக்கள் வீடு வேண்டும் என கோரி எங்களிடம் மனு அளித்தால், வீடு கட்டும் ஆணைகள் வெளிவரும். ஆனால் அதேநேரத்தில் தினகரனிடத்தில் மனு அளித்தால் வெற்று காகிதங்களாகத்தான் வெளிவரும் என ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
ஆர்.கே.நகர் மக்களுக்கு வீடு ஆசையை ஏற்படுத்தும் வகையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியுள்ளார். மேலும், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் எதிர்க்கட்சிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சப்போகிறது. ஆர்.கே.நகரில் வெற்றி பெற்று மதுசூதனன் சட்டசபைக்கு வருவது உறுதி என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நம்பிக்கை தெரிவித்தார்.