
கடலூரில் ஆளுநர் ஆய்வு நடத்த எதிர்ப்பு தெரிவித்து திமுக, விசிகவினர் இணைந்து கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தியதை அடுத்து ஆளுநர் பன்வாரிலால் பேருந்து நிலையத்தை ஆய்வு செய்யவில்லை.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், இதுவரை எந்த ஆளுநரும் செய்யாத அளவில், களத்தில் இறங்கி ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார். முதன்முறையாக கோவையில் ஆளுநர் ஆய்வு செய்தபோதே திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை பதிவு செய்தன.
பாஜக ஆளும் மாநிலங்களில் இதுபோன்ற ஆளுநர் ஆய்வு நடைபெறுவதில்லை. மாறாக பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களில் ஆளுநரின் வாயிலாக மறைமுகமாக பாஜக ஆட்சி செய்ய முயல்கிறது. மாநில சுயாட்சி தத்துவத்தை சிதைக்கும் விதமாகவும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் அதிகாரத்தை துஷ்பிரயோகப்படுத்தும் விதமாகவும் ஆளுநர் ஆய்வு செய்கிறார் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிவருகின்றன.
ஆனாலும் அதிமுக அரசு சார்பில், ஆளுநரின் ஆய்வு குறித்து எந்தவிதமான விமர்சனங்களும் முன்வைக்கப்படவில்லை. மாறாக ஆளுநரின் ஆய்விற்கு அமைச்சர்கள் வரவேற்பு தெரிவித்தனர்.
இதையடுத்து ஆளுநரின் ஆய்வு தொடரும் எனவும் அனைத்து மாவட்டங்களிலும் ஆளுநர் பன்வாரிலால் ஆய்வு செய்வார் எனவும் ஆளுநர் மாளிகை அறிக்கை வெளியிட்டது. அதன்படி, கோவையை தொடர்ந்து திருப்பூர், நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களிலும் ஆளுநர் பன்வாரிலால் ஆய்வு செய்தார்.
இன்று கடலூரின் சில பகுதிகளில் ஆளுநர் பன்வாரிலால் ஆய்வு செய்தார். ஏற்கனவே அறிவிக்கப்ட்டபடி, திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் திமுகவினர் ஆளுநருக்கு கறுப்பு கொடி காட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திமுகவினருடன் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் இணைந்து ஆளுநருக்கு கறுப்பு கொடி காட்டினர்.
கடலூரில் வண்டிப்பாளையம், அம்பேத்கர் நகர், உழவர் சந்தை ஆகிய பகுதிகளில் தூய்மைப் பணிகளை ஆய்வு செய்த ஆளுநர் பன்வாரிலால், மக்களின் குறைகளையும் கோரிக்கைகளையும் கேட்டறிந்தார். அதையடுத்து ஆளுநர் பன்வாரிலால் கடலூர் பேருந்து நிலையத்தில் ஆய்வு செய்ய இருந்தார்.
செம்மண்டலம், கம்மியம்பேட்டை வழியாக பேருந்து நிலையத்தில் ஆளுநர் ஆய்வு செய்ய இருந்தார். ஆனால், கடலூர் பாரதி சாலையில் திமுகவினர் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால், ஆளுநர் மாற்றுப் பாதையில் திருப்பிவிடப்பட்டார்.
இதையடுத்து ஆளுநர் பேருந்து நிலைய ஆய்வை கைவிட்டு, ஒரே ஒரு இடத்தில் மட்டும் ஆய்வுப் பணியை மேற்கொண்டு விட்டு மீண்டும் சுற்றுலா மாளிகைக்கு திரும்பிவிட்டார்.
கடலூர் பேருந்து நிலைய ஆய்வை ஆளுநர் கைவிட்டதிலிருந்து திமுகவின் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் வெற்றி அடைந்துள்ளதாகவே போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் தெரிவிக்கின்றனர். எனினும் திமுகவினரும் விசிகவினரும் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருவதால் கடலூரில் பதற்றமான சூழலே நிலவுகிறது.