
வெளி நாட்டில் இருந்து சொகுசு கார் இறக்குமதி செய்ததில் மோசடியில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கில் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற சசிகலாவின் கணவர் நடராஜன் உட்பட 4 பேருக்கும் உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
கடந்த 1994-ஆம் ஆண்டு வெளிநாட்டிலிருந்து சொகுசு கார் இறக்குமதி செய்ததில் ரூ.1.60 கோடி வரி ஏய்ப்பு செய்ததாக சசிகலாவின் கணவர் எம்.நடராஜன், அவரது உறவினர் பாஸ்கரன், யோகேஷ் பாலகிருஷ்ணன், சுஜாரிதா சுந்தரராஜன் ஆகிய 4 பேர் மீது சிபிஐ வழக்கு தொடுத்திருந்தது.
இந்த வழக்கை விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிமன்றம் நான்கு பேருக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், யோகேஷ் பாலகிருஷ்ணனுக்கு ரூ.40 ஆயிரமும், மற்ற மூவருக்கு தலா ரூ.20 ஆயிரமும் அபராதம் விதித்து 2010-ஆம் ஆண்டில் தீர்ப்பளித்தது.
இத்தீர்ப்பை எதிர்த்து, நடராஜன், பாஸ்கரன் உள்ளிட்ட 4 பேரின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மேல்முறையீட்டில், தங்கள் தரப்பு வாதங்களை முழுமையாக ஏற்காமல் விசாரணை நீதிமன்றம் விதித்த சிறை தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என கோரியிருந்தனர்.
இந்த வழக்கு, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் அமர்வு முன் கடந்த நவம்பர் 17-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் போலி ஆவணங்கள் மூலம் மோசடி செய்து அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியது உறுதியாகி உள்ளது என்று கூறி, 2010-ஆம் ஆண்டு சிபிஐ நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உறுதி செய்து மேல்முறையீட்டு மனுக்களைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இந்நிலையில், நீதிமன்றத்தில் சரணடைவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் எனக் கோரி எம். நடராஜன், பாஸ்கரன் ஆகியோர் சார்பில் தனித் தனியாக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இது தொடர்பான மனு உச்சநீதிமன்ற நீதிபதி தீபக் குப்தா அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நடராஜன் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் துரு மேத்தா, மனுதாரருக்கு அண்மையில் அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. அவருடை உடல் நலத்தையும், வழக்கின் தகுதியையும் கருத்தில் கொண்டு சரணடைவதிலிருந்து மனுதாரருக்கு விலக்கு அளிக்க வேண்டும்' எனக் கேட்டுக் கொண்டார்.
வாதங்களைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், நீதிமன்றத்தில் எம்.நடராஜன், பாஸ்கரன் ஆகியோர் சரணடைய விலக்கு அளிக்கப்படுவதாக உத்தரவிட்டனர். இந்த நிலையில், நடராஜன், பாஸ்கரன் உட்பட 4 பேருக்கும் உச்ச நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கியுள்ளது.