
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நெருங்கிவரும் நிலையில், ஆர்.கே.நகர் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
களத்தில் இருக்கும் திமுக, அதிமுக மற்றும் சுயேட்சையாக களமிறங்கி இருக்கும் தினகரன் ஆகியோர் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். ஆர்.கே.நகரில் ஆளுங்கட்சியை வீழ்த்த வேண்டும் என்ற முனைப்பில் திமுக செயல்பட்டுவருகிறது.
கட்சியிலிருந்து ஓரங்கட்டப்பட்டு இரட்டை இலையையும் இழந்து தனித்துவிடப்பட்டுள்ள தினகரன், ஆர்.கே.நகரில் வெற்றி பெற்று மக்கள் மற்றும் தொண்டர்களின் ஆதரவு தங்களுக்குத்தான் உள்ளது என்பதை நிரூபிக்க போராடுகிறார்.
உண்மையான அதிமுக நாங்கள்தான், என்பதை களத்தில் நிரூபிக்க ஆர்.கே.நகரில் வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் இருப்பதால் மதுசூதனனுக்கு ஆதரவாக அமைச்சர்கள் முதல் முதல்வர் வரை அனைவரும் வரிந்துகட்டி களமிறங்கியுள்ளனர்.
பணப்பட்டுவாடா, பணப்பட்டுவாடா புகார், பரஸ்பரம் குற்றச்சாட்டுகள் என ஆர்.கே.நகர் தேர்தல் களம் களைகட்டியுள்ளது.
தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கைகள் எடுத்தும் பணப்பட்டுவாடா செய்யப்படுகிறது எனவும் அதனால் தேர்தலை நிரந்தரமாக நிறுத்த வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தினார்.
தோல்வி பயத்தால்தான் தேர்தலை நிறுத்த வேண்டும் என பாஜக வலியுறுத்துவதாக தினகரன் விமர்சித்திருந்தார். இந்நிலையில், தினகரன் ஆதரவாளரான புகழேந்தி, ஆர்.கே.நகரில் தினகரனின் வெற்றி நிர்ணயம் செய்யப்பட்ட ஒன்று என நம்பிக்கை தெரிவித்தார்.
தமிழக மக்களிடமிருந்து அமைச்சர்கள் கொள்ளை அடித்த பணத்தை ஆர்.கே.நகரில் செலவு செய்ய தயாராக உள்ளனர். எனவே அமைச்சர்கள் கொடுக்கும் பணத்தை கட்சியின் நிர்வாகிகளும் தொண்டர்களும் பெற்றுக்கொண்டு, அவற்றை வாக்காளர்களுக்கு கொடுக்காமல், நல்ல காரியங்களுக்கு பயன்படுத்த வேண்டும் என புகழேந்தி வலியுறுத்தினார்.
தேர்தல் ஆணையம் பணப்பட்டுவாடாவைத் தடுக்காது. குக்கரில் பணம் வைத்து கொடுக்கப்படுவதாக எழும் குற்றச்சாட்டுகள் தவறானவை. குக்கரில் பணம் வைத்து கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பிக்கையே போய்விட்டது. தேர்தலை நடத்துவது பிரதமர் மோடியும் தமிழிசையும் தான் என புகழேந்தி விமர்சித்தார். மேலும் ஆர்.கே.நகரில் பாஜக வேட்பாளர் 3000 வாக்குகளை பெற்றுவிட்டால் கட்சியிலிருந்து விலகிவிடுவதாக சவால் விடுக்கும் விதத்தில் தெரிவித்தார்.