ஆளுநர் ஆய்வு செய்யக்கூடாது.. திமுக, விசிக கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம்..!

 
Published : Dec 15, 2017, 10:24 AM ISTUpdated : Sep 19, 2018, 01:41 AM IST
ஆளுநர் ஆய்வு செய்யக்கூடாது.. திமுக, விசிக கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம்..!

சுருக்கம்

dmk protest against governor review in cuddalore

கடலூரில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆய்வு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக மற்றும் விசிகவினர் கறுப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக வித்யாசாகர் ராவ் ஓராண்டாக இருந்ததை அடுத்து, தமிழகத்திற்கு முழுநேர ஆளுநர் நியமிக்கப்பட வேண்டும் என திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்திவந்தன. மேலும் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ், ஒருதலை பட்சமாக செயல்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதையடுத்து தமிழகத்தின் முழுநேர ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நியமிக்கப்பட்டார். ஆளுநராக பொறுப்பேற்ற பன்வாரிலால், இதுவரை இருந்த ஆளுநர்களைப்போல அல்லாமல், கள ஆய்வு நடத்தினார். கோவையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆய்வு நடத்தியதற்கு, எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. மாநில சுயாட்சிக்கு எதிராக ஆளுநர் செயல்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

ஆளுநரின் ஆய்விற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த போதிலும் அரசு சார்பில் எந்தவிதமான எதிர்ப்புகளும் தெரிவிக்கப்படவில்லை. மாறாக வரவேற்பு தெரிவிக்கப்பட்டது. கோவையுடன் ஆய்வு முடிவடையவில்லை. மாவட்டந்தோறும் ஆய்வு நடத்தப்படும் என ஆளுநர் மாளிகை அறிக்கையும் வெளியிட்டது.

அதேபோலவே, திருப்பூர், நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களில் ஆய்வு நடத்திய ஆளுநர் பன்வாரிலால், இன்று கடலூரில் ஆய்வு செய்துவருகிறார்.

தூய்மை இந்தியா திட்டத்தை ஊக்குவிக்கும் பொருட்டு கடலூரில் துப்புரவுப்பணிகளை ஆய்வு செய்த ஆளுநர் பன்வாரிலால், தானும் இணைந்து துப்புரவுப் பணிகளை மேற்கொண்டார். கடலூர் வண்டிப்பாளையம் பகுதியில் அம்பேத்கர் நகரில் கழிவறைகளை ஆய்வு செய்தார். அப்பகுதி மக்களின் குறைகளையும் கோரிக்கைகளையும் ஆளுநர் கேட்டறிந்தார். 

இதற்கிடையே ஆளுநரின் ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஏற்கனவே அறிவிக்கப்பட்டது போல திமுகவினர் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திமுகவினருடன் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர். கடலூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் இந்த கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றுவருகிறது.

தடுப்புவைத்து அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர். தடுப்பை தாண்டி சென்றால் கைது செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர். 
 

PREV
click me!

Recommended Stories

ஓநாய்களிடம் சிறுபான்மையினர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்..! கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன இபிஎஸ்..!
125 நாள் வேலையை வரவேற்கிறோம்..! ஆனால்..? பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!