அடுத்தடுத்து தள்ளுபடி செய்யப்படும் ஜாமீன் மனு... ராஜேந்திர பாலாஜியின் விடுதலையில் நீடிக்கும் சிக்கல்!!

By Narendran SFirst Published Jan 10, 2022, 5:35 PM IST
Highlights

ரூ.3  கோடி பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் ஜாமீன் வழக்கை  உச்சநீதிமன்றம் ஜனவரி 12 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது. 

ரூ.3  கோடி பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் ஜாமீன் வழக்கை  உச்சநீதிமன்றம் ஜனவரி 12 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி,  ஆவின் உள்ளிட்ட அரசுத் துறைகளில் வேலை வாங்கித் தருவதாக சுமார் ரூ.3  கோடி வரை  பணம் பெற்றுக்கொண்டு  மோசடியில் ஈடுபட்டதாக அவர் மீது புகார் எழுந்தது.  புகாரின் பேரில் விருதுநகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதனையடுத்து கைதாவதிலிருந்து தப்பிக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்திருந்த முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.  

இதனையடுத்து அவர் தலைமறைவானார். இதனையடுத்து 8 தனிப்படைகள் அமைத்து  அவரை காவல் துறையினர் தேடி வந்தனர். இதற்கிடையே அவர் உச்ச நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். இதற்கு,  தங்களிடம் கருத்து கேட்காமல்  ராஜேந்திர பாலாஜிக்கு  ஜாமீன் வழங்கக்கூடாது  என தமிழக அரசு கேவியட் மனு தாக்கல் செய்தது. இதனையடுத்து பலர் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது புகார் அளித்தனர். கடலோர பகுதிகள், வெளி மாநிலங்கள் என தொடர்ந்து தேடுதல் வேட்டையில்  ஈடுபட்டு வந்த காவல் துறையினர் அவரை , ஜனவரி 5 ஆம் தேதி கர்நாடகா மாநிலம் ஹசன் பகுதியில்  வைத்து கைது செய்தனர்.

இதனையடுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம்  ராஜேந்திர பாலாஜிக்கு 15 நாட்கள் அதாவது ஜனவரி 20 ஆம் தேதி வரை நீதிமன்றக்காவல் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் அவர் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார். அவரது முன் ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தபோது , கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டு ஒரு மாதம் ஜாமீன் வழங்க  வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் ராஜேந்திர பாலாஜி சார்பில் மீண்டும் மனுதாக்கல் செய்யப்பட்டது.  இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. ஆனால் கூடுதல் ஆவணங்களை பார்த்தபிறகு ஜாமீன் வழங்க வேண்டும் என தமிழக அரசு வாதிட்டது. இதனையடுத்து  கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டர் நீதிபதி, வழக்கு விசாரணையை  ஜனவரி 12 ஆம் தேதி ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

click me!