முப்படைகளுக்கும் ஒரே தலைவர் ! அன்று வலியுறுத்தினார் ராஜீவ் சந்திரசேகர் எம்.பி. ! இன்று அறிவித்தார் பிரதமர் மோடி !!

By Selvanayagam PFirst Published Aug 15, 2019, 7:21 PM IST
Highlights

இந்தியாவின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதத்தில் முப்படைகளுக்கும் ஒரே  தலைவரை நியமிக்க வேண்டும் என பாஜக எம்.பி. ராஜீவ் சந்திரசேகர் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில் இன்று சுதந்திர தின உரையாற்றிய பிரதமர் மோடி முப்படைகளுக்கும் ஒரே தலைவர் நியமிக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.

இந்தியா பிரிட்டிஷ் ஆதிக்கத்தில் இருந்து 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திரம் அடைந்தது. இதையடுத்து இந்திய நாட்டின் 73வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி  டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக்கொடியை ஏற்றினார். இதைத் தொடர்ந்து அவர் சுதந்திர தின உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், நம் பாதுகாப்பு படைகள் மிகவும் சிறப்பு மிக்கவை. இந்த முப்படைகளும் ஒன்றிணைந்து செயல்படுவதற்கு இன்று நான் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறேன். அதன்படி இனிமேல் இந்தியாவில் Chief Of Defence Staff(CDS) என்ற புதிய பதவி உருவாக்கப்படவுள்ளது. இந்தப் பதவியை வகிப்பவர் தான் இந்தியாவின் ராணுவம், விமானம், கப்பல் ஆகிய முப்படைகளுக்கும் ஒரே தலைவராக இருப்பார். இது நமது நாட்டின் பாதுகாப்பு படைகளை மேலும் வலுவானதாக்கும்' எனத் தெரிவித்தார்.

தற்போது முப்படைக்கும் தளபதியாக குடியரசுத் தலைவர் இருந்து வருகிறார். ஆனால் பொதுவாக குடியரசுத் தலைவர் தளபதியாக இருந்தாலும் கூட, முக்கியமான நேரங்களில் மட்டுமே அவரிடம் ஆலோசனை கேட்கப்படும். இந்த மூன்று படைகளையும் மத்திய அரசின் பாதுகாப்பு துறை அமைச்சர் அல்லது பாதுகாப்பு துறை ஆலோசகர்தான் கட்டுப்பாட்டில் வைத்து இருப்பார். குடியரசுத் தலைவருக்கு பெயருக்கு மட்டுமே இந்த அதிகாரம் வழங்கப்பட்டு இருந்தது. 

இதைத்தான்  தற்போது மத்திய அரசு மாற்ற முடிவெடுத்துள்ளது. அதன்படி ராணுவத்தை சேர்ந்த, அல்லது முன்னாள் ராணுவத்தை சேர்ந்த, பாதுகாப்பு துறையில் அனுபவம் உள்ள ஒரு நபரை மூன்று படைக்கும் சேர்த்து தளபதியாக நியமிக்க மத்திய அரசு முடிவெடுத்து உள்ளது.

இதன் மூலம் மூன்று படைகளையும் ஒரே குடைக்குள் கொண்டு வர முடியும். இந்திய ராணுவம் வலுவான ராணுவமாக இருந்தாலும் கூட, இந்திய படைகளுக்கு இடையில் பெரிய அளவில் தற்போது ஒற்றுமை இல்லை.


 
அதாவது விமானப்படை எப்போது என்ன நடவடிக்கை எடுக்கும் என்பது கடற்படைக்கு தெரியாது. கடற்படை செய்யும் ஆபரேஷன் தரைப்படைக்கு தெரியாது. இவர்களுக்கு இடையில் சரியான தகவல் பரிவர்த்தனை இல்லை. பாகிஸ்தானில் இந்திய விமானி அபிநந்தன் சிக்கிய போதே இதை இந்திய பாதுகாப்புத் துறை உணர்ந்து கொண்டது. 
அப்போதில் இருந்தே மூன்று படைக்கும் ஒரே தலைவரை நியமிக்க வேண்டும் என்று பாஜக அரசு நினைத்து வந்தது. அப்போதுதான் இவர்களுக்குள் சரியான தகவல் பரிமாற்றம் இருக்கும். அதனால்தான் தற்போது தலைவர் ஒருவர் நியமிக்கப்பட உள்ளார். 

மத்திய அரசு இந்த முடிவை தற்போது எடுத்திருந்தாலும் முப்படைகளுக்கும் ஒரே தலைவரை நியமிக்க வேண்டும் என பாஜக மாநிலங்கவை உறுப்பினர் ராஜீவ் சந்திரசேகர் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் வலியுறுத்தி வருகிறார்.

இது தொடர்பாக அப்போதிருந்த பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.ஆண்டனிக்கு  எழுதிய கடிதத்திற்கு அவர் ராஜீவ் சந்திரசேகருக்கு பதில் அனுப்பியுள்ளார். தொடர்ந்து ராஜீவ் சந்திரசேகர் ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று முப்படைகளுக்கும் ஒரே தலைவரை நியமிக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தார்.

இந்நிலையில் முப்படைகளுக்கும் ஒரே தலைவர் நியமிக்கப்படுவார் என பிரதமர் மோடி அறிவித்திருப்பது தேச பக்தர்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது. எம்.பி. ராஜீவ் சந்திரசேகரும் பிரதமரின் அறிவிப்புக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

click me!