
விசாலுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியதில் பா.ஜகவுக்கு எந்த பங்கும் இல்லை எனவும் உப்பு தின்றவர் தண்ணீர் குடித்து தான் ஆக வேண்டும் எனவும் அக்கட்சியின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் படத்தில் மத்திய அரசு கொண்டு வந்த ஜி.எஸ்டி குறித்து விமர்சித்து கருத்து தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் நடிகர் சங்க செயலாளரும், தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான விஷால், மெர்சல் படத்திற்கு ஆதரவு தெரிவித்தார். மேலும் அரசியல்வாதிகள் தணிக்கை செய்தால் தணிக்கை குழு எதற்கு என கேள்வி எழுப்பினார்.
விஷால் பிலிம் பேக்டரி என்ற தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிறுவனம் மூலம் பல படங்களை தயாரித்து வருகிறார்.
இந்நிலையில், விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தில் மத்தியகலால் துறையின் கீழ் செயல்படும் ஜி.எஸ்.டி. நுண்ணறிவு பிரிவினர் 3 மணி முதல் 6 மணி வரை சோதனை நடத்தினர்.
இதையடுத்து மெர்சல் திரைப்படத்துக்கு ஆதரவாக செயல்பட்டதால் உங்களை மத்திய அரசு பழி வாங்குகிறதா? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், என்னை பழிவாங்க நினைத்தால் அதை எதிர்கொள்வேன் என தெரிவித்தார்.
விஷாலை வரும் 27 ஆம் தேதி ஆஜராகும் படி அவருக்கு வருமான வரித் துறையினர் சம்மன் அனுப்பியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், கவர்னருடனான சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஹெச்.ராஜா விசாலுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியதில் பா.ஜகவுக்கு எந்த பங்கும் இல்லை எனவும் உப்பு தின்றவர் தண்ணீர் குடித்து தான் ஆக வேண்டும் எனவும் தெரிவித்தார்.