குறிப்பிட்ட தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களை திருடன் என்று அடையாளப்படுத்தியும், உண்மைக்கு புறம்பான தகவல்களைக் கூறியும் வெளியான ஜெய் பீம் திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் எனக்கூறி வீரத் தமிழர் விடுதலை சங்கம் சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது
குறிப்பிட்ட தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களை திருடன் என்று அடையாளப்படுத்தியும், உண்மைக்கு புறம்பான தகவல்களைக் கூறியும் வெளியான ஜெய் பீம் திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் எனக்கூறி வீரத் தமிழர் விடுதலை சங்கம் சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் வீரத் தமிழர் விடுதலை சங்கம் சார்பில் அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் வெற்றிச் செல்வம் OTT-ல் வெளியாகியுள்ள ஜெய் பீம் திரைப்படத்தைத் தடை செய்யக்கோரி புகார் மனு ஒன்றை அளித்தார். பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர்,
ஜெய் பீம் திரைப்படம் வெளியாகியுள்ள நிலையில் அந்தத் திரைப்படத்தில் தான் சார்ந்த குறவர் (குருவிக்கார்ஸ்) சமுதாய மக்களை திருடர்கள் என அடையாளப்படுத்தி காட்டியிருப்பது கண்டிக்கத்தக்கது எனவும், அந்தத் திரைப்படத்தில் இருரள் சமுதாய மக்கள் அனுபவித்து வருவதாக காட்டப்பட்ட சித்திரவதைகள் அனைத்தும் உண்மையில் தங்கள் குறவர் சமுதாய மக்களே இன்று வரை அனுபவித்து வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும், அத்திரைப்படத்தில் வரும் கதாப்பாத்திரமான ராஜா கண்ணு உண்மையில் இருளர் சமுதாயத்தைச் சேர்ந்தவர் இல்லை எனவும், அவர் குறவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர் எனவும் தெரிவித்த அவர், அந்த திரைப்படத்தைப் பார்த்த முதல்வர் உட்பட பொதுமக்கள் அனைவரும் இருளர் சமுதாய மக்கள் மீது பரிதாப அலைகளை வீசி உதவிகள் செய்து வருகிறார்கள் எனவும், ஆனால் அங்கு இன்றுவரை உண்மையில் பாதிக்கப்பட்டு வருவது தங்கள் குறவர் சமுதாய மக்கள்தான் என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும் எனவும் அவர் கூறினார்.
மேலும், நிவாரண உதவிகளுக்காக இதைக் கூறவில்லை எனவும், தங்கள் சமுதாய மக்களின் துன்பங்கள் அனைவருக்கும் தெரிய வேண்டும் என்ற நோக்கத்துடனே இதை வெளிக்கொண்டு வர எண்ணியதாகவும் அவர் தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல் தங்கள் சமுதாய மக்களை திருடன் என்று காட்சிப்படுத்தியும், உண்மைக்குப் புறம்பான கருத்துக்களை பரப்பியும் வெளியாகியுள்ள ஜெய் பீம் திரைப்படத்த்சி தடை செய்ய வேண்டும் எனவும் இது குறித்து தமிழக முதல்வர், மாவட்ட ஆட்சியர் மற்றும் சென்னைக் காவல்துறை ஆணையர் உட்பட அதிகாரிகளுக்கு புகார் அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.