சென்னை மற்றும் புறநகர் பகுதியில் விடிய விடிய வச்சு செய்த மழை.. குளிர்ந்த சூழல் நிலவுகிறது.

By Ezhilarasan BabuFirst Published Jul 9, 2021, 9:56 AM IST
Highlights

மேலும் ஆலந்தூர், ஆதம்பாக்கம், மீனம்பாக்கம், பரங்கிமலை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. மேலும் சென்னையில் இன்று காலையிலும் பரவலாக பல்வேறு பகுதிகளில் மழையானது பெய்து வந்தது

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் காற்றின் திசை மாறுபாடு காரணமாக தமிழகத்தில் கோவை, நீலகிரி உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்கள் ,உள் மாவட்டங்கள் என பல்வேறு பகுதிகளில் கடந்த ஐந்து நாட்களாக கனமழையானது பெய்து வருகிறது. மேலும் சென்னையில் வெப்பச் சலனத்தின் காரணமாக அவ்வப்போது மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. 

இந்நிலையில் நேற்று இரவில் இருந்தே சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விடிய விடிய மிதமான முதல் கனமழை பெய்தது. குறிப்பாக எழும்பூர், சேப்பாக்கம், தி.நகர், கிண்டி, கோடம்பாக்கம், அண்ணாசாலை உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்தது. இதன்படி ஆவடி, அம்பத்தூர், தாம்பரம், பெருங்களத்தூர், கொரேட்டூர், பல்லாவரம், விருகம்பாக்கம், தேனாம்பேட்டை, சைதாபேட்டை, ஈக்காட்டுத்தாங்கல், புரசைவாக்கம், பூவிருந்தவல்லி, செம்பரம்பாக்கம், ரமாபுரம், அயனாவரம், குரோம்பேட்டை, அசோக் நகர், திருவி.க நகர், கோயம்பேடு, திருமுல்லைவாயல், மாதவரம், புழல் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. 

மேலும் ஆலந்தூர், ஆதம்பாக்கம், மீனம்பாக்கம், பரங்கிமலை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. மேலும் சென்னையில் இன்று காலையிலும் பரவலாக பல்வேறு பகுதிகளில் மழையானது பெய்து வந்தது. இந்நிலையில் மழை பெய்ததன் காரணமாக நகரின் சில பகுதிகளில் சாலைகளில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி காணப்படுகிறது. மேலும் நகரின் பல பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டு குளிர்ந்த சூழ்நிலையே பரவி வருகிறது.
 

click me!