திமுகவை ஆட்டிப்படைக்கும் ரெய்டுகள், உட்கட்சி பூசல்: தேர்தல் பணிகளில் சுணக்கம்!

By Manikanda PrabuFirst Published Nov 26, 2023, 12:54 PM IST
Highlights

திமுகவை ஆட்டிப்படைத்து வரும் ரெய்டுகள், உட்கட்சி பூசல் ஆகியவற்றால் தேர்தல் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது

ஆளும் திமுக தலைமையகமான அறிவாலயத்தில், அக்கட்சியின் உயர்மட்டக் குழு கூட்டம் நேற்று முன் தினம் நடைபெற்றது. முதல்வரும், கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், டி.ஆர்.பாலு, ஆ.ராசா உள்ளிட்ட சீனியர்கள் பலரும் மேடையில் அமர்ந்திருந்தனர். கட்சியின் பொதுச் செயலாளரும், தமிழக நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் பேச ஆரம்பித்தபோது, அவரது பாணியில் கட்சி நிர்வாகிகளை ஊக்குவிப்பார், நையாண்டியாக வெடித்துத் தள்ளுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சலசலத்து பேசிய அவரது குரலில் வழக்கமான உற்சாகம் இல்லை.

“பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, ஸ்டாலின் மேல் ஆணையிட்டு மக்களவை தேர்தல் வரையில் சிறிது காலம் அமைதி காப்போம். நமது கட்சித் தலைவர்களைப் பற்றிய தகவல்களை யாருக்கும் தெரிவிக்க வேண்டாம். சிலர் நன்றி கெட்டவர்களாக வருமான வரித்துறையினருக்கு தகவல் தெரிவித்து வருகின்றனர். 60 ஆண்டுகால கட்சியில் பணியாற்றியவர் என்ற முறையில் இதனை பார்த்து வருத்தமடைகிறேன்.” என்று துரைமுருகன் பேசியது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Latest Videos

திமுகவில் தற்போது நிலைமை சரியில்லை. உட்கட்சி பூசல் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் மீது கட்சிக்காரர்கள் நேரடியாக புகார் தெரிவிப்பது இல்லை. மாறாக, வருமான வரித்துறை அல்லது அமலாக்க இயக்குனரகத்திற்கு சைலண்டாக தகவல் கொடுத்து சிக்கலில் ஆழ்த்தி விடுகிறார்கள். இந்த வேதனையின் உச்சம்தான் துரைமுருகனின் அன்றைய பேச்சு.

அவரது மகனும், வேலூர் எம்.பி.யுமான கதிர் ஆனந்த், அமலாக்கத்துறை ஸ்கேனரில் உள்ளார். 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கு முன்பு, ரூ.11.48 கோடி வருமான வரித்துறையால் பறிமுதல் செய்யப்பட்டு தொடர்ந்து ஆஜராகும்படி அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

இந்த ரெய்டுகள் பிரச்சினை அனைத்தும் முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் ஆரம்பித்தது. கடந்த ஜூன் மாதம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மருத்துவக் காரணங்களுக்காக கீழமை நீதிமன்றமும், சென்னை உயர் நீதிமன்றமும் அவருக்கு ஜாமீன் தர மறுத்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு வருகிற 28ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.

செந்தில் பாலாஜிக்கு அடுத்து உயர்கல்வித்துறை பொன்முடி, திமுகவின் பண மூட்டையாக கருதப்படும் ஜெகத்ரட்சகன், சமீபத்தில் தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு என அடுத்தடுத்து ரெய்டுகளில் திமுக மூத்த தலைவர்கள் சிக்கினர். மேலும், திமூக மூத்த தலைவரும், அமைச்சருமான கே.என்.நேரு, உணவுத்துறை அமைச்சர் ஆர்.சக்கரபாணி, வணிகவரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி ஆகியோர் ஹிட் லிஸ்ட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஏற்கனவே அமலாக்கத்துறை ஸ்கேனரில் உள்ளார். அமைச்சர்கள் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் மீதான லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் என்.வெங்கடேஷ் மீண்டும் தூசி தட்டியுள்ளதால் அவர்களும் பிரச்சினையில் சிக்கியுள்ளனர்.

மேலும், திமுக பொதுச் செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன், மாநிலம் முழுவதும் நடந்ததாகக் கூறப்படும் மணல் கொள்ளை வழக்கில் அமலாக்கத்துறை விசாரணையை எதிர்கொள்கிறார். தமிழகத்தில் உள்ள அனைத்து மணல் குவாரிகளிலும் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தி, தரவுகளையும் ஆதாரங்களையும் சேகரித்து துரைமுருகனை கடுமையாக சட்ட சிக்கலில் ஆழ்த்தி அதன் மூலம், ஸ்டாலின் குடும்பத்தை மத்திய அரசு ஏஜென்சிகள் குறி வைப்பதாக தெரிகிறது.

இறுதிகட்டத்தில் ஆதித்யா எல்1 விண்கலம்: இஸ்ரோ தலைவர் சோம்நாத் சொன்ன முக்கிய அப்டேட்!

“இது திமுகவுக்கு முன்பே தெரியும். ரெய்டுகளில் எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை என்றாலும், சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையிலான விசாரணையும், சரமாரியான கேள்விகளும் திமுக.வினரை சிக்கலில் ஆழ்த்தியுள்ளது.” என்கிறார் மத்திய அமைப்புகளின் தமிழக ரெய்டுகளை உன்னிப்பாக கவனித்து வரும் மூத்த அதிகாரி ஒருவர். மக்களவை தேர்தலையொட்டி, எதிர்காலத்தில் பல அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் கூறுகிறார்.

இந்த விஷயத்தில் திமுக தலைமை அசைக்க முடியாததாகத் தோன்றினாலும், பெரும்பாலான கட்சித் தலைவர்கள் விசாரணை வளையத்துக்குள் வந்துள்ளது கட்சி களப்பணியாற்றுவதை கடினமாக்கியுள்ளது. உதாரணமாக, மேற்கு மண்டலத்தில் கட்சியின் முக்கிய தலைவராகக் கருதப்படும் செந்தில் பாலாஜி கடந்த ஐந்து மாதங்களாக சிறையில் இருப்பதால், மேற்கு மண்டலத்தில் தேர்தல் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.

மேலும் கட்சியின் முக்கிய நிதி ஆதாரமாக இருப்பவரும், வட தமிழகத்தின் சில பகுதிகளை திமுகவின் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மூத்தவராகவும் அறியப்படும் எ.வ.வேலு, சோதனைகளுக்குப் பிறகு கடுமையான அரசியல் அழுத்தத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. விழுப்புரம் மற்றும் பிற வடமாவட்டங்களின் வலிமையான மனிதரான பொன்முடி மீதான ரெய்டு அவரது பகுதியில் கட்சியின் உள்கட்டமைப்பை சீர்குலைத்துள்ளது. இவற்றால் எதிர்வரவுள்ள 2024 மக்களவை தேர்தல் பணிகளில் திமுகவுக்கு சுணக்கம் ஏற்பட்டுள்ளது.

தைரியமான கட்சியாக அறியப்படும் திமுக, மத்திய அமைப்புகளின் ஆய்வுக்கு எதிராக வழக்கம்போல், தனது துணிச்சலான முகத்தை காட்டி வந்தாலும், விசாரணை அதிகாரிகளின் கடுமையான கேள்விகளால் தனது உதவியாளர்கள் அனைவரும் கண்ணீர் விட்டு அழுததாக செய்தியாளர் சந்திப்பில் எ.வ.வேலு தெரிவித்தார்.

ஸ்டாலினின் அமைச்சரவையில் பத்துக்கும் மேற்பட்ட அமைச்சர்களும், திமுக எம்.பி.க்கள் சிலரும் வரி ஏய்ப்பு அல்லது பணமோசடி வழக்குகளில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட உள்ளனர். தலைவர்கள் தங்களை தற்காத்துக் கொள்ள விசாரணை அமைப்புகளுக்கு பின்னால் ஓடுவதால், இந்த ரெய்டுகள் கட்சியினரை கலக்கமடையச் செய்துள்ளது. இன்னொரு பக்கம் திமுகவினரை ஊழல்வாதிகள் என்று சொல்லி கட்சியின் இமேஜும் கெடுக்கப்பட்டு வருகிறது.

click me!